அப்பா இசை, மகள்கள் பாடகிகள் - மன்சூரின் அதிரடி

செவ்வாய், 6 மே 2014 (20:07 IST)
வித்தியாசமான தலைப்புகளில் அவ்வப்போது படம் தயாரிப்பார் மன்சூர் அலிகான். படங்கள் பார்க்கிற மாதிரி இருக்குமா என்பதெல்லாம் தேவையில்லாத சமாச்சாரம். ஆனால் படம் குறித்து மன்சூர் சொல்லும் விஷயங்களும் அவர் செய்யும் அதிரடிகளும் கேட்க சுவாரஸியமானவை.
மன்சூரின் ராஜ் கென்னடி நிறுவனத்தின் புதிய தயாரிப்பு, அதிரடி. தயாரிப்பதுடன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம், நடிப்பு என்று பலதுறைகளில் அவரே பங்களிப்பு செலுத்துகிறார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை இசையும் அவரே.
கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆடுகிற கழைக்கூத்தாடிகளைப் பற்றிய கதையிது. படத்தில் மன்சூரும் கழைக்கூத்தாடியாக வருகிறார். ரொம்பவும் சீரியஸnன கலைப்படமாக இருக்குமோ என்றெல்லாம் நினைக்க வேண்டியதில்லை. மக்களுக்கு தங்களின் கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கழைக்கூத்தாடிகளின் செயலால் ஒரு ஊழல் அரசியல்வாதி பாதிக்கப்படுகிறார். இதற்குப் பிறகான கதையை உங்கள் மனத்திரையில் நீங்கள் ஏற்கனவே ஓடவிட்டபடியால் அடுத்த விஷயத்துக்கு செல்வோம்.
 
கழைக்கூத்தாடிகளைப் பற்றிய கதை என்பதால் படத்தில் மொத்தம் 11 பாடல்கள். அதில் மூன்று பாடல்களை தனது மகள்களை வைத்து பாட வைத்துள்ளார் மன்சூர்.
இந்தப் படத்தின் தொடக்க விழாவில்தான்  செங்கல்களை உடைத்து, ஐம்பது முட்டைகளை குடித்து அதிரடி ஆட்டம் போட்டார் மன்சூர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்சூரின் அதிரடி!



வெப்துனியாவைப் படிக்கவும்