அஞ்சானுக்கு என்ன கொம்பா? வரிந்துகட்டும் தயாரிப்பாளர்கள்

புதன், 30 ஜூலை 2014 (19:54 IST)
தமிழ்நாட்டில் திரையரங்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைகிறதோ அதற்கும் சேர்த்து படங்களின் எண்ணிக்கை வருடம்தோறும் அதிகரிக்கிறது. இப்படியே போனால் இந்த வருடம் தமிழ் சினிமா 300 படங்களை தொடும் என பயப்படுகிறது திரையுலகம்.
 
தமிழ் சினிமாவின் இப்போதைய இன்னொரு பற்றாக்குறை, தயாரான படங்களைப் பார்த்து தரச்சான்றிதழ் தர போதுமான தணிக்கைக் குழு உறுப்பினர்கள் இல்லாதது. இதனால் தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கும் படங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. விண்ணப்பித்த சீனியாரிட்டிபடி மட்டுமே படங்களைப் பார்த்து தரச்சான்றிதழ் தர வேண்டும்.
ஆனால் அதிகாரமிக்கவர்களுக்கு எந்த க்யூவிலும் இடையில் நுழையலாம் இல்லையா? அஞ்சான் படத்துக்கு மட்டும் இந்த சீனியாரிட்டி எல்லாம் பார்க்காமல் உடனே படத்தைப் பார்த்து சான்றிதழ் தருவதாக தணிக்கைக் குழு கூறியிருக்கிறது. 
 
இது தெரிய வந்ததும் தணிக்கை சான்றிதழுக்கு காத்திருந்த தயாரிப்பாளர்கள் கடுப்பாகிவிட்டனர். பெரிய படங்களால் திரையரங்கு கிடைப்பதில்லை. சென்சாருக்கு வந்தால் இங்கேயும் சிக்கல் பண்றாங்களே, பேசாமல் கோர்ட்டுக்கே போயிடலாமா என்று யோசித்து வருகிறார்கள்.
 
அஞ்சான் ஆகஸ்ட் 15 தான் திரைக்கு வருகிறது. அதற்குள் இவர்களுக்கு என்ன அவசரம் என்பது மற்ற தயாரிப்பாளர்களின் கேள்வி. நியாயம்தானே?

வெப்துனியாவைப் படிக்கவும்