அசல் வில்லன்

புதன், 3 ஜூன் 2009 (18:37 IST)
வில்லன்களுக்கு தமிழ் சினிமாவில் தட்டுப்பாடு. ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம் வில்லனாக்குகிறார்கள் இயக்குனர்கள். சுமன், சிபி என்றும் நீளும் இந்தப் பட்டியலின் புதுவரவு, ராஜீவ் கிருஷ்ணா.

ஆஹா படத்தில் ஹீரோவாக நடித்த ராஜீவ் கிருஷ்ணாவுக்கு பிறகு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. ஒன்றிரண்டு படங்களில் சின்ன வேடங்களில் நடித்தார்.

இந்நிலையில், நியூட்டனின் 3ஆம் விதி திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. ஆஹாவில் வெள்ளந்தி ஹீரோவாக நடித்தவர் நியூட்டனின் 3ஆம் விதியில் வில்லனாக வெளுத்து வாங்கினார். விளைவு...? வில்லன் வாய்ப்புகள் துரத்துகிறது ராஜீவ் கிருஷ்ணாவை!

அஜித்தின் அசல் படத்தில் வில்லனாக நடிக்க ராஜீவ் கிருஷ்ணாவை தேர்ந்தெடுத்திருக்கிறார் சரண். அசல் பழிவாங்கும் கதை. பல்வேறு வெளிநாடுகளில் கதை நடக்கிறது. கதையின் சர்வதேச 'டச்'சுக்கு ஏற்ற வில்லன் தேவை.

ராஜீவ் கிருஷ்ணாவின் தோற்றமும், நடிப்பும் அதற்கு நூறு சதம் பொருந்தும் என்பதால் அவரை தேர்வு செய்திருக்கிறார் சரண். பரத்வாஜ் இசையமைக்கும் இந்தப் படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்