வாழ்வா? சாவா?- இந்தியாவுடன் இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

ஞாயிறு, 14 ஜூன் 2009 (13:12 IST)
இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோல்வியடையும் அணி இருபது-20 உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறும்.

இங்கிலாந்தில் நடந்து வரும் ஐ.சி.சி. இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர்-8 சுற்றில் நுழைந்துள்ள அணிகளில் ஈ-பிரிவில் இடம்பெற்ற இந்தியாவும், இங்கிலாந்தும் இன்றிரவு 10 மணிக்கு நடக்கும் போட்டியில் விளையாட உள்ளன.

முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியாவும், தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தும் தோல்வியுற்றதால், இரு அணிகளுக்குமே இன்றைய போட்டி மிக முக்கியமானதாகும். இதில் தோல்வியடையும் அணி தொடரை விட்டு வெளியேறுவது நிச்சயம்.

இந்தியாவைப் பொறுத்தவரை சேவாக் இல்லாத குறையைத் தவிர அனைத்துமே சாதகமாகவே உள்ளது. துவக்க ஆட்டக்காரர்கள் வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், பின் வரும் வீரர்கள் நல்ல ஸ்கோரை எட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இத்தொடரின் முதல் லீக் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்ததால் மனதளவில் துவண்டிருந்த இங்கிலாந்து அணி, சூப்பர்-8 சுற்றுக்குள் போராடி நுழைந்தது. ஆனால் இங்கும் அந்த அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. பீட்டர்சன் உட்பட ஒரு சில வீரர்கள் கை கொடுத்தால் மட்டுமே இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்