யுவ்ராஜ் அபாரம் இந்தியா 153/7 (20 ஓவர்)

சனி, 13 ஜூன் 2009 (00:02 IST)
லார்ட்ஸில் நடைபெற்று வரும் 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணிக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர்களில் 153 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டனர். யுவ்ராஜ் சிங் அபாரமாக விளையாடி 43 பந்துகளில் 67 ரன்களை விளாசினார்.

துவக்கத்திலேயே முக்கிய வீரர் ரொஹித் ஷர்மா புல் ஷாட் விளையாட முயன்று 5 ரனக்ளில் எட்வர்ட்ஸ் பந்தி சிம்மன்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதற்குள் கம்பீர் 2 பவுண்டரிகளை விளாச ரெய்னா களமிறங்கி 5 ரன்களையே எடுக்க முடிந்தது.ஃபிடல் எட்வர்ட்ஸ் அவருக்கு 4 ஷாட் பிட்ச் பந்துகளை வீசி நிலை தடுமாறச் செய்து அதன் பிறகு ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீச அதனை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக பிராவோ ஓவரில் அவர் ஒரு நல்ல பவுன்சரை வீச அதனை கம்பீர் ஹுக் ஷாட் விளையாடினார். பந்து மிட் விக்கெட் திசையில் மேலெழும்பி சென்றது. அதனை சிம்மன்ஸ் 20 அடி பின்னால் ஓடிச் சென்று அபாரமாக பிடித்தார். இந்த உலக கோப்பை போட்டிகளில் சிம்மன்ஸ் பிடித்த இந்த கேட்ச் ஆகச் சிறந்த கேட்ச் என்றால் அது மிகையாகாது.

கம்பீர் 14 ரன்களில் ஆட்டமிழக்கும்போது இந்தியா 4.2 ஓவர்களில் 29/3 என்று ஆனது. அதன் பிறகு தோனி களமிறங்கினார். அவர் பவுண்டரி அடிக்கும் மனோ நிலையில்ல் இல்லை. எனவேதான் போல்லார்ட் வீசிய 3 பூப்பந்துகளையும் ஃபீல்டர் கைக்கு நேராக் ஆடித்து ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் செய்தார்.

தோனி அறுத்த அறுவையில் அதாவது 23 பந்துகள் 11 ரன்கள் என்று போட்டார் மட்டையை. இதனால் அடுத்த 8 ஓவர்களில் இந்தியா 37 ரன்களை மட்டுமே எடுத்து 115 ரன்கள் வருவதே பெரும்பாடு என்ற நிலை இருந்தது.

ஆனால் அதன் பிறகு யுவ்ராஜ் சிங்கும், யூசுப் பத்தானும் இணைந்தனர். ஆனால் யுவ்ராஜ் அதிரடியை துவக்கினார். சுலைமான் பென் பந்தை சிக்சருக்கு தூக்கி அதிரடியைத் துவங்கிய யுவ்ராஜ் தொடர்ந்து அடித்து வந்தார்.

இருவரும் இணைந்து அடுத்த 5 ஓவரில் 64 ரன்கள் ஈட்டினர். இது மிகவும் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. யுவ்ராஜ் 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 67 ரன்கள் எடுத்து முக்கிய கட்டத்தில் பிடல் எட்வர்ட்ஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

யூசுஃப் பத்தான் ஏற்கனவே டெய்லர் ஓவரில் ஒரு சிக்சருடன் 17 ரன்களை விளாசியிருந்தார். அவர் மேலும்3 பவுண்டரிகளை விளாசி 31 ரன்களை 18 பந்துகளில் விளாசி ஆட்டமிழந்தார்.

கடைசி பிராவோ ஓவரில் ஹர்பஜன் சிங் அபாரமாக 3 பவுண்டரிகளை விளாச இந்தியா சற்றே சவால் ஏற்படுத்தக் கூரிய 153 ரன்களை எட்டியது.

மேற்கிந்திய தரப்பில் எட்வர்ட்ஸ் 3 விக்கெட்டுகளையும் பிராவோ 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்