மகளிர் 20- 20: ஆஸி.யை வீழ்த்தியது இங்கிலாந்து

இங்கிலாந்தில் நடந்து வரும் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் இறுதிகட்டத்தை எட்டி விட்டது. லண்டன் ஓவலில் நேற்று நடந்த பரபரப்பான 2-வது அரைஇறுதியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய இங்கிலாந்து மகளிர் அணியினர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தனர்.

ஆஸ்ட்ரேலிய அணியில் ஷெல்லி நிட்ஸ்கி (37 ரன்), லியோ பவுல்டன் (39 ரன்), கரன் ரோல்டன் (38 ரன்), தலேகர் (28 ரன்) ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் ரன் உயர்வுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

கடின இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, தொடக்க வீராங்கனைகள் சாரா டெய்லர் (6 ரன்), கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ் (25 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகளை விரைவில் பறிகொடுத்தது. இதன் பின்னர் 3-வது விக்கெட்டுக்கு இணைந்த நட்சத்திர வீராங்கனை கிளாரி டெய்லரும், பெத் மோர்கானும் அபாரமாக ஆடினார்கள். நெருக்கடியான நிலையில் இருந்து அணியை மீட்ட இவர்கள் இறுதி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது, கிளாரி டெய்லர் பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார். இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 165 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கிளாரி டெய்லர் 76 ரன்களுடனும் (53 பந்து, 8 பவுண்டரி), மோர்கான் 46 ரன்களுடனும் (34 பந்து, 5 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது சிறப்பம்சமாகும். கிளாரி டெய்லர் ஆட்டநாயகி விருதினை பெற்றார்.

நாளை லண்டன் லார்ட்சில் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்