பிராவோ அபார ஆட்டம்; உலக சாம்பியன்களை வீழ்த்தியது மேற்கிந்திய அணி

சனி, 13 ஜூன் 2009 (01:30 IST)
லார்ட்சில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கோப்பை சூப்பர் - 8 பிரிவு முதல் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கை மேற்கிந்திய அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ பேட்டிங்கில் 4ஆம் நிலையில் களமிறங்கி 36 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்து வெற்றி நாயகனாக திகழ்ந்தார். ஜாகீர் கான் வீசிய பந்தை மிக அழகாக எக்ஸ்ட்ரா கவர் திசையில் சிக்சருக்கு தூக்கி அடித்து பிராவோ வெற்றியை ஈட்டித் தனதார்.

துவக்கத்தில் பிளெட்சர் விக்கெட்டை இர்ஃபான் பத்தான் அவர் ரன் எடுக்காத நிலையில் வீழ்த்த, 2 ஓவர்களில் பத்தான் 9 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கக்ப்பற்றினார். ஆனால் அதன் பிறகு அவருக்கு பௌலிங் வழங்கப்படாததன் மர்மம் தோனிக்கு மட்டுமே புரிந்த விஷயம்.

அதே போல் இந்தியாவின் அனுபவமிக்க பந்து வீச்சாளர் ஜாகீர் கான் முதல் ஓவரில் 2 பவுண்டரிகளை கொடுத்தார் என்பதற்காக அடுத்த ஓவரை 13-வது ஓவரில் வீசியதும் தவறான முடிவாகப் படுகிறது.

கிறிஸ் கெய்லுக்கு ஹர்பஜன் சிங் அபாரமான மைடன் ஓவரை வீச அவர் அதன் பிறகு அழுத்தம் காரணமாக யூசுஃப் பத்தான் பந்தை சிக்சர் அடிக்க முயன்று கொடி ஏற்றி ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளை சந்தித்து 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது 7.4 ஓவர்களில் மேற்கிந்திய அணி 42/2 என்று இருந்தது. இந்திய வெற்றி சற்று தொலைவில் தெரிந்தது.

ஆனால் கெய்ல் அபாரமான முடிவை அந்த தருணத்தில் எடுத்தார். டிவைன் பிராவோவை அவர் களமிறக்கினார். பிராவோவும், லென்டில் சிம்மன்சும் ஆடிய ஆட்டம் அபாரமானது.

இவர்கள் ரிஸ்க் எதுவும் எடுக்காமல் இடைவேளியில் பந்தை அடித்து விட்டு இரண்டு ரன்களை அதிகம் எடுத்தி வெறுப்பெற்றினர். டிவைன் பிராவோ இன்சைட் அவுட் சென்று ஆளில்லா எக்ஸ்ட்ராகவர் திசையில் எடுத்த ரன்கள் அபாரமானவை, அதுவே வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.

சிம்மன்ஸ் அவருக்கு உறுதுணையாக விளையாடினார். இருவரும் இணைந்து அடுத்த 7 ஓவர்களில் 58 ரனகளை சேர்த்தனர். 14.3 ஓவர்களில் 100 ரன்கள் இருந்தபோது 37 பந்துகளில் 44 ரன்களை எடுத்திருந்த லென்டில் சிம்மன்ஸ் ஹர்பஜன் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்று இர்ஃபானிடம் கேட்ச் கொடுத்தார்.

33 பந்துகளில் 54 ரன்கள் என்று இருந்த போது கூட இந்தியாவிற்கு சிறிய நம்பிக்கை இருந்தது.

ஆனால் இஷாந்த் ஷர்மா வீசிய 17-வது ஓவரும், அதற்கு அடுத்ததாக வீசிய ஹர்பஜன் ஓவரும் ரன்கள் அதிகமாக எடுக்கப்பட்ட ஓவராக அமைய இலக்கு சுலபமானது. சந்தர்பால் 9 பந்துகளை சந்தித்து 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டிவைன் பிராவோ 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததோடு, 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதால் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மேற்கிந்திய அணி சூபர்- 8 சுற்றில் இரண்டு புள்ளிகளை பெற்றது.

இந்திய அணியின் பந்து வீச்சு இர்ஃபான் வீசிய 2 ஓவர்கள், நெருக்கடியில் வீசிய யூசுஃப் பத்தான் ஓவர் மற்றும் ஹர்பஜன் கெய்லுக்கு வீசிய மைடன் ஓவர் தவிற சொல்லிக்கொள்ளுமாறு இல்லை.

அடுத்த சூப்பர் - 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா ஞாயிறன்று இரவு 10 மணிக்கு இங்கிலாந்தை சந்திக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்