தோனிக்காக வருந்துகிறேன் - ஸ்மித்

செவ்வாய், 16 ஜூன் 2009 (15:16 IST)
இங்கிலாந்தில் நடைபெறும் 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து தோற்று வெளியேறிய இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார் தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித்.

"மகேந்திர சிங் தோனி ஒரு அமைதியான நபர், அவரது சில உத்திகள் தற்போது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது, இது போன்ற சூழ் நிலை தவிர்க்கவியலாதது, இது போன்ற சூழ் நிலைகளை ஒரு அணித் தலைவராக எதிர்கொள்வது கடினமான ஒன்றே" என்று கூறியுள்ளார் கிரேம் ஸ்மித்.

"ஒருவர் நீண்ட நாட்களாக கேப்டனாக இருக்கும் போது உங்கள் கிரிக்கெட் வாழ்வில் இது போன்ற தருணங்களை சந்திக்க நேரிடும், ஒரு கேப்டனாக சாதகமான விஷயங்கள் உங்கள் பக்கம் இல்லையெனில், புகார்கள் உங்கள் மேல் திரும்பும், இந்த சூழ் நிலைகளை எவ்வாறு கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே ஒருவரது கிரிக்கெட் வாழ்வு நீடிக்கும்.

இது போன்ற தருணங்கள் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது ஆனால் இந்த தொடரில் நிச்சயம் இல்லை, அந்த தருணம் தற்போது வேறு ஒருவர் பக்கம் சென்றுள்ளது" என்றார்.

இன்றைய இந்தியாவிற்கு எதிரான போட்டி குறித்து குறிப்பிட்ட கிரேம் ஸ்மித், இது முக்கியமான போட்டி இல்லையென்றாலும் இது ஒரு சர்வதேச போட்டியே. எனவே இதிலும் சிறப்பாகவே விளையாடுவோம் என்றார்.

"இந்திய அணியில் திறமை அதிகம் உள்ள வீரர்கள் உள்ளனர், அவர்களிடம் நிறைய தெரிவுகள் உள்ளது, இதனாலேயே அவர்கள் இந்த தொடரில் வெளியேறியது ஆச்சரியமளிக்கிறது" என்றார்.

இன்று நடைபெறும் போட்டியில் ஜாக் காலிஸிற்கு பதிலாக மோர்னி மோர்கெலை களமிறக்க முடிவு செய்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

வெப்துனியாவைப் படிக்கவும்