20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 8 சுற்றில் இ பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்கா-இந்தியா அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா எடுத்த 130 ரன்களைக் கூட துரத்தி எடுக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்து பரிதாபத் தோல்வி த்ழுவியது.
தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட போதிலும் சம்பிரதாய மோதலாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியை தென் ஆப்பிரிக்க அணி அதன் தீவிரம் குறையாமல் விளையாடியது.
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணியில் காலிஸிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக மோர்னே மோர்கல் சேர்க்கப்பட்டார்.
டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்தது. 2-வது ஓவரிலேயே தொடக்க விக்கெட்டை (கிப்ஸ்௫ ரன்) இழந்த தென்ஆப்பிரிக்க அணியில் அதன் பிறகு கேப்டன் ச ஸ்மித் (26 ரன்), டிவில்லியர்ஸ் (63 ரன், 51 பந்து, 7 பவுண்டரி) ஆகியோரின் ஆட்டம் குறிப்பிடும்படி இருந்தது.
அதே சமயம் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசி ரன் விகிதத்தை கட்டுப்படுத்தியதால் தென்ஆப்பிரிக்க அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. மொத்தம் 8 பவுலர்களை இந்திய கேப்டன் டோனி பயன்படுத்தினார். ரவீந்திர ஜடேஜா 3 ஓவர்கள் பந்து வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஜாகீர்கான், ஆர்.பி.சிங், ஹர்பஜன்சிங், ரெய்னா ஆகியோருக்கும் தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
இஷாந்த் ஷர்மா எதற்காக அணியில் எடுக்கப்பட்டார் என்று தெரியவில்லை அவருக்கு 1 ஓவர் மட்டுமே அளிக்கப்பட்டது அதில் அவர் 6 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் அதற்குப் பிறகு ஓவரே கொடுக்கப்படவில்லை. இதற்கு இர்ஃபான் பத்தானை அணீயில் வைத்துக் கொண்டிருக்கலாம் என்பது நியாயமானதே.
அடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. கவுதம் கம்பீரும், ரோகித் ஷர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் விளாசி ஓரளவு நல்ல தொடக்கத்தை அமைத்து தந்தனர். கம்பீர் 21 ரன்களில் (19 பந்து, 3 பவுண்டரி) போத்தா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
போத்தாவின் அடிக்க முடியாத பந்துகளை நல்ல துவக்கம் பெற்ற பிறகும் தப்பும் தவறுமான ஷாட் தேர்வினால் கம்பீர், ரோஹித் ஆகியோர் ஆட்டமிழந்தனர். பிறகு அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் சுரேஷ் ரெய்னாவும் வான்டெர் மெர்வ் பந்தில் ஒரு மோசமான ஷாட்டிற்கு ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு தோனி 5 ரன்கள் எடுத்த நிலையில் யுவ்ராஜ் சிங்கின் தவறான முடிவால் ஆட்டமிழந்தார். பந்து வைடாக சென்றது. பௌச்சர் அதனை பிடிப்பதில் கோட்டைவிட பந்து சற்றே தள்ளி செல்கிறது. பேட்ஸ்மெனுக்கு பின்னால் செல்லும்போது ரன்னர் ரன்னுக்கு அழைத்தால் ஓட வேண்டியதுதான் பேட்ஸ்மென் முனை வீரருக்கு அழகு. ஆனால் யுவ்ராஜ் ஸ்தம்பித்து நின்று விட, தோனி கிட்டத்தட்ட யுவ்ராஜ் அருகே சென்று திரும்பி ரன்னர் முனைக்கு வருவதற்குள் ரநவுட் செய்யப்பட்டார். காயமடைந்த இந்திய அணிக்கு இது போன்ற மோசமாஅன ஆட்டம் மேலும் பலவீனங்களை ஏற்படுத்தியிருக்கும்.
அடுத்து வந்த யூசுப் பதானும் (0) வந்த வேகத்திலேயே நடையை கட்டி, இந்திய அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளினார். 69 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் பரிதாபமான நிலையில் இந்தியா காட்சி அளித்தது.
இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு துணை கேப்டன் யுவராஜ்சிங்கும், ஹர்பஜன்சிங்கும் அணியை தோல்வியில் காப்பாற்ற போராடினார்கள். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஹர்பஜன்சிங் 14 ரன்களில் (15 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். இதனால் யுவராஜ்சிங் மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருந்தார். ஆனால் அவர் 19-வது ஓவரில் பந்தை விளாச முயற்சித்து, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். அவர் எடுத்த ரன்கள் 25 ரன்கள் (25 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்).
கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட போது, இந்திய வீரர்களால் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. தென்ஆப்பிரிக்க தரப்பில் போத்தா 3 விக்கெட்டுகளும், ஸ்டெயின் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.
ஆட்ட நாயகனாக ஏ.பி.டிவிலியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.