தில்ஷான், மேத்யூஸ் அபாரம்; இலங்கை இறுதிக்குள் நுழைவு

சனி, 20 ஜூன் 2009 (11:18 IST)
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட் செய்து 158/5 என்று இலக்கை எட்டியது. தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய அணி 17.4 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய தில்ஷான் 57 பந்துகலில் 12 பவுண்டரி 2 சிக்சர் சகிதம் 96 ரன்களை விளாசினார். பந்து வீச்சில் அஞேலோ மேத்யூஸ் முதல் ஓவரிலேயே மார்ஷல், சிம்மன்ஸ், பிராவோ ஆகியோரின் ஸ்டம்புகளை பெயர்த்தார். இவர்கள் மூவரும் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் கிறிஸ் கெய்ல் ஒரு முனையில் 63 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட்-அவுட்டாக இருந்தும் அவருக்கு கைக் கொடுக்க எந்த ஒரு வீரரின் ஆட்டமும் முன் வரவில்லை.

3 பூஜ்ஜியங்களுக்கு பிறகு சந்தர்பால் (7), சர்வாண் (5), போலார்ட் (3), ராம்தின் (9), டெய்லர் (2), டேரன் சம்மி (1), சுலைமான் பென் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியனுக்கு வரிசையாக ரயில் பெட்டிபோல் நடையைக் கட்டினர்.

இலங்கை அணியில் முரளிதரன், மேத்யூஸ் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், அஜந்தா மென்டிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முன்னதாக பூவாதலையா வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஏதோ தாங்கள் இலக்கை துரத்துவதில் புலி என்று நினைத்துக் கொண்டு முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தனர்.

ஜெயசூர்யாவும், தில்ஷனும் இலங்கையின் இன்னிங்சை தொடங்கினார்கள். ஜெயசூர்யா வழக்கத்துக்கு மாறாக மிகவும் தடுமாறினார். அதே சமயம் சூப்பர் பார்மில் உள்ள தில்ஷன் பட்டையை கிளப்பினார். இந்த இணை அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. 10 ஓவரில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்திருந்தது. 11-வது ஓவரில் ஜெயசூர்யாவின் திணறல் முடிவுக்கு வந்தது. பிராவோ பந்து வீச்சில் ஷாட்பைன் லெக் திசையில் எளிதாக கேட்ச் ஆனார். அவர் 37 பந்துகளில் 24 ரன்கள் (3 பவுண்டரி) எடுத்தார்.

அடுத்து வந்த கேப்டன் சங்கக்கராவும் (0) அதே ஓவரில் வீழ்ந்தார். இதற்கு அடுத்த ஓவரில் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனேவும் (2 ரன்) வெளியேற்றப்பட்டார்.

எட்டு பந்துகள் இடைவெளியில் மேற்கண்ட 3 விக்கெட்டுகள் சரிந்தாலும், தில்ஷன் அசரவில்லை. தனி ஒரு வீரராக நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். எந்த ஒரு பவுலரையும் அவர் விட்டு வைக்கவில்லை. மறுமுனையில் மேலும் சில விக்கெட்டுகள் விழுந்தாலும், இறுதி கட்டத்தில் அவரது தாக்குதல் பலமாக இருந்தது. ஆனால் அவருக்கு ஒரே ஒரு ஏமாற்றமாக சதத்தை நிறைவு செய்ய முடியவில்லை.

20 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. கடைசி 4 ஓவரில் மட்டும் இலங்கை அணி 50 ரன்களை விளாசியது. தில்ஷன் 96 ரன்களுடன் (57 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) இறுதி வரை களத்தில் இருந்தார். இந்த உலக கோப்பையில் ஒரு வீரரின் அதிகபட்ச ரன் இது தான். அது மட்டுமின்றி இந்த தொடரில் அவர் மொத்தம் 317 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி தொடர்ச்சியாக பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்