இருபது-20 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்
திங்கள், 22 ஜூன் 2009 (10:40 IST)
இங்கிலாந்தில் நடந்த இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த மே 5ஆம் தேதி துவங்கிய 2வது ஐ.சி.சி. இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு, பயங்கர கூச்சலால் லார்ட்ஸ் மைதானமே அதிர்ந்தது.
இறுதிப்போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான், இலங்கை ஆகிய 2 அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அரையிறுதியில் வெற்றி பெற்ற அணிகளே களம் கண்டன.
இப்போட்டியில் பூவா-தலையா ஜெயித்த இலங்கை அணித்தலைவர் சங்கக்கரா முதலில் பேட் செய்ய விரும்புவதாக அறிவித்தார். இதன்படி தில்ஷனும், ஜெயசூர்யாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் களம் புகுந்தனர்.
இத்தொடரில் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தி வந்த தில்ஷான் முக்கியமான இறுதிப்போட்டியில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து இலங்கை அணிக்கு பேரதிர்ச்சி அளித்தார். முகமது அமீர் பந்து வீச்சில் ஷாட் பைன் லெக் திசையில் கேட்ச் ஆன அவர் 5 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமலேயே வெளியேறினார்.
அடுத்து களமிறக்கப்பட்ட முபாரக்கும் டக்-அவுட் ஆனார். இதனால் இலங்கை அணியின் துவக்கம் ஆட்டம் கண்டது. தூக்கி நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெயசூர்யா 17 ரன்னிலும், அடுத்து வந்த ஜெயவர்த்தனே ஒரு ரன்னிலும் அப்துல் ரஸாக் பந்தில் ஆட்டமிழந்தனர். இதனால் 32 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை மிகவும் மோசமான நிலையில் தத்தளித்தது.
இந்த சூழலில் அணித்தலைவர் சங்கக்கராவுடன் இணைந்த சமர சில்வா அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். ஆனால் நீண்ட நேரம் நீடிக்காத சமர சில்வா 14 ரன்களில் உமர்குல் பந்துவீச்சில் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து உள்ளே வந்த உதானா அஃப்ரிடி பந்தில் போல்டு ஆனார். இதனால் இலங்கை அணி 70 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற பரிதாபமான நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் துடிப்புடனும், ஆக்ரோஷத்துடன் களத்தில் செயல்பட்டனர். ஆட்டத்தின் 13வது ஓவர் வரை ஆட்டம் பாகிஸ்தானின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது.
எனினும், 7வது விக்கெட்டுக்கு சங்கக்கராவுடன் ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் நிலைமை சற்று மாற்றினார். இதனால் இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டது மட்டுமின்றி, அடித்து ஆடி வேகமாக ரன்களையும் சேகரித்தது.
அணித்தலைவர் சங்கக்கராவின் பொறுப்பான இன்னிங்சுக்கு, மேத்யூஸ் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தார். இதனால் இலங்கை அணி எதிர்பார்த்ததை விட ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்தது. இதில் கடைசி 5 ஓவர்களில் மட்டும் இலங்கை 59 ரன்களை விளாசியது.
சங்கக்கரா 64 ரன்களுடனும், மேத்யூஸ் 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த கூட்டணி 7வது விக்கெட்டுக்கு 42 பந்துகளில் 68 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு 139 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கம்ரான் அக்மலும், ஷாசைய் ஹசனும் நேர்த்தியான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்து தங்கள் அணியின் வெற்றிக்கு அடித்தளம் போட்டனர்.
கம்ரான் அக்மல் 37 ரன்னிலும், ஷாசைப் ஹசன் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதை தொடர்ந்து 3வது விக்கெட்டுக்கு அஃப்ரிடியும், சோயப் மாலிக்கும் ஜோடி சேர்ந்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் அபாரமாக இருந்ததால் இவர்கள் அடித்து ஆடுவதில் சற்று தடுமாற்றம் கண்டனர். எனினும் பாகிஸ்தான் அணியின் வெற்றி பயணம் சிக்கலின்றி நகர்ந்தது.
கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட போது, 18வது ஓவரை வீசிய உதானா பந்து வீச்சில் அஃப்ரிடி ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் நொறுக்க அந்த ஓவரில் 19 ரன்கள் வந்தது. இதனால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட லேசான நெருக்கடியும் விலகியது. இதன் பின்னர் அடுத்த ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது.
இன்னிங்சின் 18.4வது ஓவரில், 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து உலக சாம்பியன் பட்டத்தை பாகிஸ்தான் கைப்பற்றியது. ஆல்-ரவுண்டர் அஃப்ரிடி 54 ரன்களுடனும், சோயப் மாலிக் 24 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இத்தொடரின் அரைஇறுதியில் தென்ஆப்பரிக்காவை வீழ்த்தக் காரணமாக இருந்த அஃப்ரிடி இறுதிப்போட்டியிலும் பாகிஸ்தானின் வெற்றிக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007இல் நடந்த முதலாவது இருபது-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியிடம் கோப்பையை பறிகொடுத்த பாகிஸ்தான், இந்த முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி ஆட்டநாயகன் விருதினையும், இந்த தொடரில் அதிகபட்சமாக 317 ரன்களை குவித்த இலங்கை வீரர் தில்ஷான் தொடர் நாயகன் விருதினையும் பெற்றனர்.
உலக சாம்பியன் ஆன பாகிஸ்தான் அணிக்கு அந்த நாட்டு அதிபர் சர்தாரி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர். அந்த நாட்டு ரசிகர்கள் வெற்றியை ஆடிப்பாடி உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.