அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

வெள்ளி, 30 ஏப்ரல் 2010 (15:28 IST)
கயானாவில் நடைபெற்ற நேற்றைய உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் அயர்லாந்து அணியை புதிதாகத் தகுதி பெற்றுள்ள ஆ‌ப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணியை 133 ரன்களுக்கு மட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தான் பிறகு வெற்றி ரன்களை 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்தது.

ஆப்கான் வேகப்பந்து வீச்சாளர்கள் டவ்லத் அஹ்மட்சாய், ஷபூர் ஜத்ரான், சமியுல்லா ஷென்வாரி, ஆகியோர் சிறப்பாக வீசினர். இதில் வேகப்பந்து வீச்சாளர் அகமட்சாய் 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

32/5 என்று திணறிய அயர்லாந்து அணி வில்சன் (32), மூனி (42) ஆகியோரது ஆட்டத்தால் 133 ரன்களை எட்டியது.

ஆப்கானிஸ்தான் இலக்கைத் துரத்தியபோது நோர் அலி (14), கரீம் சாதிக் (14) மொகமட் ஷஜாத் (1) ஆகியோர் ஆட்டமிழக்க மந்தமாக 10.2 ஓவர்களில் 50 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.]

ஸ்கோர் 13-வது ஓவரில் 66 ரன்களையே எட்டியது. அப்போது நவ்ரோஸ் மங்கல் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அப்போது 7 ஓவர்களில் 68 ரன்கள் தேவைப்பட்டது. இது இயலாத விஷயம் என்று அயர்லாந்து நினைத்துக் கொண்டிருந்தபோது அஸ்கர் ஸ்டானிக்சாயும், மொகமட் நபியும் ஜோடி சேர்ந்தனர்.

கிட், போத்தா ஆகிய் அயர்லாந்து வீச்சாளர்களின் 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசப்பட்டது.

இருவரும் இணைந்து அடுத்த 6 ஓவர்களில் 66 ரன்களை விளாசினார். ஸ்டானிக்சாய் 27 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 39 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

மொகமட் நபி 17 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 28 ரன்கள் விளாசினார். இருவரும் சாத்தியமில்லாத வெற்றியை ஈட்டினர்.

ஆப்கான் அணி இந்தியாவுடன் முதல் போட்டியை விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்