20- 20 உலகக் கோப்பை இறுதியில் பாகிஸ்தான்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது

வெள்ளி, 19 ஜூன் 2009 (01:47 IST)
ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணியை பாகிஸ்தான் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. அஃப்ரீடி ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதன் மூலம் தொடர்ந்து 2-வது முறையாக 20- 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் பாகிஸ்தான் நுழைந்துள்ளது.

காலிஸ் அபாரமான ஷாட்களுடன் துவங்க தென் ஆப்பிரிக்க அணி முதல் 6 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் விக்கெட் எடுப்பது போலவே பந்து வீசவில்லை.

ஆனால் கிரேம் ஸ்மித் 10 ரன்கள் எடுத்திருந்தபோது மொகமட் ஆமீர் ஓவரில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்காவின் சரிவு துவங்கியது.

பேட்டிங்கில் 51 ரன்களைக் குவித்த ஷாஹித் அஃப்ரீடி 7-வது ஓவரில் கிப்சையும் 9-வது ஓவரில் டீவிலியர்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தி அந்த அணியை 50/3 என்று தடுமாறச் செய்தார்.

அஃப்ரீடி 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். எதிர் முனையில் சயீத் அஜ்மல் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஜாக் காலிஸ் மட்டுமே சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 64 ரன்கள் எடுத்தார். ஆனால் இவரையும் நடுவில் பவுண்டரி அடிக்க விடாமல் தடுத்தனர்.

14 ஓவர்களில் 83 ரன்கள் இருந்த போது யூனிஸ் கான் ஒரு தவறான முடிவை எடுத்தார். ஃபவாத் ஆலம் என்பவரிடம் பந்தை கொடுக்க அந்த ஓவரில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி உட்பட 15 ரன்களை எடுத்தனர் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள்.

கடைசி 5 ஓவர்களில் 52 ரன்கள் தேவை என்ற நிலையில் உமர் குல் அனைத்து பந்துகளையும் துல்லியமாகவும் சீராகவும் யார்க்கராக வீச தென் ஆப்பிரிக்க அணியால் ரன்களை எடுக்க முடியவில்லை.

இதனால் 20 பந்துகளில் 40 ரன்கள் தேவை என்ற நிலை உருவாகியது. கடைசியில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தாலும் 142 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி இது போன்று முக்கிய தருணத்தில் தோல்வி தழுவி வெளியேறும் துயரம் அந்த அணியை இந்த முறையும் விட்டு நீங்கவில்லை.

இந்த உலகக் கோப்பை போட்டித் தொடரில் ஒரு போட்டியைக் கூட தோற்காமல் அரையிறுதி வந்த தென் ஆப்பிரிக்க அணி கடைய்சியில் ஸ்டீவ் வாஹ் ஒரு முறை கூறியது போல் பெரிய தருணங்களில் தோற்கும் 'chokers' களாகவே உள்ளனர்.

மற்றொரு அரையிறுதியில் வெள்ளியன்று இலங்கையும், மேற்கிந்திய அணியும் மோதுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்