பாகிஸ்தான் 20 ஓவர்களில் 149/4

ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. ஷாஹித் அஃப்ரீடி 34 பந்துகளில் 51 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார்.

15 ஓவர்களில் அபாரமான 120 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் கடைசி 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தாலும் 29 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. வெய்ன் பார்னெல், ஸ்டெய்ன் ஆகியோர் இறுதி ஓவர்களை அபாரமாக வீசினர்.

இன்னிங்ஸ் துவக்கத்தில் ஷாஸைப் விக்கெட்டை 0 ரன்னில் பார்னெல் வீழ்த்தினார். ஆனால் அதற்கு முன்னர் ஸ்டெய்ன் ஓவரில் கம்ரன் அக்மல் அபாரமான இரண்டு பவுண்டரிகளை விளாசியிருந்தார்.

அதன் பிறகு ஸ்டெய்னின் அடுத்த ஓவரில் நம்ப முடியாத சிக்சர் ஒன்றை அடித்தார் கம்ரன். பந்து ஷாட் பிட்சாக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்சாகி வந்தது இருப்பினும் அதனை அப்படியே மிட்-ஆஃப் திசையில் தூக்கி அடித்தார் பந்து சிக்சருக்கு சென்றது.

ஆனால் உடனேயே அடுத்த ஷாட் பிட்ச் பந்தை சற்றே வேகம் கூட்டி ஸ்டெய்ன் வீச அதனை புல் ஷாட் ஆட முயன்று ஷாட்-மிட் ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கம்ரன் அக்மல் 13 பந்துகளில் 23 ரன்களை எடுத்து முக்கிய தருணத்தில் ஆட்டமிழந்தார்.

இதனால் ஷோயப் மாலிக்கும், ஷாஹித் அஃப்ரீடியும் இணைந்தனர். காலிஸ் ஓவரை எதிர் கொண்ட அஃப்ரீடி முதல் 3 ஷாட் பிட்ச் பந்துகளில் ரன் அடிக்க முடியவில்லை, ஆனால் அடுத்த பந்தை பவுண்டரி விளாசினார். அடுத்த பந்தை விளாசி 2 ரன்கள் எடுத்தார். பிறகு காலிஸின் கடைசி பந்தை மீண்டும் பவுண்டரிக்கு விளாச காலிஸ் அவரிடம் சென்று ஏதோ கூற அஃப்ரீடி அவருக்கு முத்தம் கொடுப்பது போல் செய்கை செய்தார் இந்த செயல் காலிஸை மேலும் வெறுப்பேற்றியது.

அதன் பிறகு பவர் பிளே முடிந்தவுடன் போத்தாவின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி 18 ரன்களை எடுத்தார் அஃப்ரீடி. பொதுவாக போத்தாவின் பந்தை அவ்வளவு எளிதில் அடித்து விட முடியாது, ஆனால் அஃப்ரீடி லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு காலியான எக்ஸ்ட்ரா கவர் திசையில் 3 பவுண்டரிகளை விளாசி பிறகு கடைசிபந்தை தேர்ட் மேன் திசையில் தட்டி விட்டு 4ஆக மாற்றினார்.

அதன் பிறகு மேலும் 2 பவுண்டரிகளை விளாசி 34 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அஃப்ரீடி ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் 95/3 என்று இருந்தது.

மாலிக்கும், அஃப்ரீடியும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 10 ஓவர்களில் 67 ரன்களைச் சேர்த்தனர்.

அஃப்ரீடி ஆட்டமிழந்தவுடன் மாலிக்கும், யூனிஸ் கானும் மேலும் 3 பவுண்டரிகளை விளாச 15-வது ஓவரில் 120 ரன்களை எட்டியது பாகிஸ்தான். ஆனால் அப்போது 34 ரன்கள் எடுத்த மாலிக், வான் டெர் மெர்வ் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன் பிறகு டேல் ஸ்டெய்னும், பார்னெலும் யார்க்கர்களாக வீசித்தள்ளி வெறும் 29 ரன்களையே விட்டுக் கொடுத்தனர்.

ரசாக் தட்டுத் தடுமாறி 12 ரன்களையும், யூனுஸ் கான் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து 24 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணியில் பார்னெல் 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். ஸ்டெய்ன், டுமினி, மெர்வ் ஆகியோர் முறையே ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

களம் மிகவும் மந்தமாக இருப்பதால் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களிடம் தென் ஆப்பிரிக்கா திணற நேரிடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்