இருபது-20 உலகக்கோப்பை அரையிறுதி: தென்ஆப்ரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்

வியாழன், 18 ஜூன் 2009 (10:51 IST)
இங்கிலாந்தில் நடந்து வரும் இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த தென்ஆப்ரிக்க அணியை எதிர்த்து பாகிஸ்தான் இன்று களமிறங்குகிறது.

இத்தொடரின் சூப்பர்-8 சுற்றின் முடிவில் இ-பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த தென்ஆப்பிரிக்கா (6 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (4 புள்ளி) அணிகளும், எஃப்-பிரிவில் இலங்கை (6 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி) அணிகளும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

இதில், முதலாவது அரையிறுதி ஆட்டம் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இ-பிரிவில் முதலிடம் பிடித்த தென்ஆப்பிரிக்காவும், எஃப்-பிரிவில் 2வது இடம் பெற்ற பாகிஸ்தானும் மோதுகின்றன.

கோப்பையை வெல்லக்கூடிய அணியாக கணிக்கப்பட்டிருக்கும் தென்ஆப்ரிக்கா தொடக்கத்தில் இருந்தே இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அசத்தி வருகிறது. லீக் சுற்றில் நியூசிலாந்து, ஸ்காட்லாந்து அணிகளையும், சூப்பர்-8 சுற்றில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளையும் வீழ்த்தியுள்ள தென்ஆப்ரிக்க இத்தொடரில் பாகிஸ்தானுடன் இன்று முதல் முறையாக மோதுகிறது.

தென்ஆப்ரிக்கா பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் வலுவாக திகழ்கிறது. நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டங்களில் குறைந்த ஸ்கோரை எடுத்தும் அந்த அணி வெற்றி பெற்றதற்கு இதுவே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

அந்த அணியின் டிவில்லியர்ஸ், காலிஸ் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். அதேபோல் கிப்ஸ், அணித் தலைவர் ஸ்மித், டுமினி ஆகியோரிடம் இருந்து இன்னும் முழுமையான திறமை வெளிப்படவில்லை.

வேகப்பந்து வீச்சில் வெய்ன் பார்னல், ஸ்டெயின் ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் ஜோகன் போத்தா, வான்டெர் மெர்வ் ஆகியோரும் கலக்கி வருகிறார்கள். மொத்தத்தில் ஒருங்கிணைந்த அணியாக திகழும் தென்ஆப்ரிக்காவை வீழ்த்த பாகிஸ்தான் கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

தென்ஆப்ரிக்க அணித்தலைவர் ஸ்மித் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளில் நாங்கள் பல்வேறு வெற்றிகளை கடந்து வந்திருக்கிறோம். அரையிறுதியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பாகிஸ்தான் திறமை வாய்ந்த அணி. எங்களை தோற்கடிக்கும் எதிர்பார்ப்புடன் வருவார்கள். ஆனால் யார்? வெற்றி பெறுவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. அன்றைய தினம் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அந்த அணி வெற்றி பெறும்’ என்று யதார்த்தமாகப் பேசினார்.

இத்தொடரின் துவக்கத்தில் கண்டுகொள்ளப்படாத அணியாக இருந்த பாகிஸ்தான், தற்போது அரையிறுதி வரை முன்னேறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐ.சி.எல். தடையில் இருந்து விடுபட்ட ஆல்-ரவுண்டர் அப்துல் ரஸாக் உடனடியாக அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது அந்த அணியின் உற்சாகத்தை அதிகப்படுத்தி உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் உமர்குல், நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர்-8 சுற்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் இதுவரை 11 விக்கெட்டுகள் கைப்பற்றி வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். பாகிஸ்தானின் உண்மையான பலமாக பந்துவீச்சு உள்ளது.

அணித்தலைவர் யூனிஸ்கான், கம்ரான் அக்மல் ஆகியோர் மட்டும் ஓரளவு நன்றாக ஆடி வருகிறார்கள். சீனியர் வீரர்கள் சோயிப் மாலிக், அஃப்ரிடி, மிஸ்பா உல்-ஹக் ஆகியோரிடம் இருந்து முழு ஆதரவு அணிக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவர்களும் பழைய நிலைமைக்கு திரும்பினால் பாகிஸ்தான் அணியின் கை ஓங்கும். இருப்பினும் தென்ஆப்ரிக்காவின் சவாலை முறியடிக்க அவர்கள் எல்லா வகையிலும் ஆயத்தமாகி வருகிறார்கள்.

தென்ஆப்ரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஒரே ஒரு 20 ஓவர் சர்வதேச போட்டியில் சந்தித்து உள்ளன. கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த அந்த போட்டியில் தென்ஆப்ரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதே போல் இந்த உலக கோப்பையையொட்டி நடந்த பயிற்சி ஆட்டத்திலும் தென்ஆப்ரிக்க அணி பாகிஸ்தானை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான அரைஇறுதி மோதல் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு துவங்குகிறது. தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மழை பெய்ய 10% வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்ஆப்ரிக்கா: ஸ்மித் (கேப்டன்), ஜோகன் போத்தா, யூசுப் அப்துல்லா, மார்க் பவுச்சர், டிவில்லியர்ஸ், டுமினி, கிப்ஸ், காலிஸ், மோர்னே மோர்கல், அல்பி மோர்கல், ஜஸ்டின் ஓன்டாங், வெய்ன் பார்னல், ராபின் பீட்டர்சன், ஸ்டெயின், வான்டெர் மெர்வ்.

பாகிஸ்தான்: யூனிஸ்கான் (கேப்டன்), அகமது ஷேசாத், பவாட் ஆலம், இப்திகர் அஞ்சும், கம்ரான் அக்மல், மிஸ்பா உல்-ஹக், முகமது அமிர், சயீத் அஜ்மல், சல்மான்பட், அஃப்ரிடி, ஷாகைப் ஹசன், சோயிப் மாலிக், தன்விர், உமர்குல், அப்துல் ரசாக்.

வெப்துனியாவைப் படிக்கவும்