இருபது-20 அரையிறுதி: மே.இ.தீவுகள்-இலங்கை இன்று பலப்பரீட்சை
வெள்ளி, 19 ஜூன் 2009 (15:28 IST)
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் இலங்கை- மேற்கிந்திய தீவு அணிகள் மோதுகின்றன.
இன்று நடைபெறும் 2வது அரையிறுதியில் சூப்பர்-8 சுற்று எஃப்-பிரிவில் முதலிடம் பிடித்த இலங்கையும், இ-பிரிவில் 2வது இடம் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியும் லண்டன் ஓவல் மைதானத்தில் சந்திக்கின்றன.
இவ்விரு அணிகளும் லீக்கில் ஒரே பிரிவில் (சி பிரிவு) இடம் பெற்றிருந்தது. இதில் இரு அணியும் நேருக்கு நேர் சந்தித்த ஆட்டத்தில் இலங்கை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அந்த தோல்விக்கு பழிவாங்க மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இன்று வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இத்தொடரில் இதுவரை எந்த தோல்வியும் சந்திக்காத இலங்கை அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ளது. அந்த அணியினர் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆல்-ரவுண்டர் தில்ஷன் 5 ஆட்டத்தில் 221 ரன்கள் குவித்து முன்னணியில் இருக்கிறார். ஜெயசூர்யா, அணித்தலைவர் சங்கக்கரா, ஜெயவர்த்தனே ஆகியோரும் பார்மில் உள்ளனர்.
முரளிதரன், மென்டிஸ் நிச்சயம் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருப்பர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியை விட இலங்கையின் கையே சற்று ஓங்கி இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஒருநாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, இருபது-20 நடப்பு சாம்பியன் இந்தியா ஆகிய அணிகளை தனது முந்தைய சுற்றில் இந்த அணி தோற்கடித்து இருக்கிறது.
கெய்ல் விசுவரூபம் எடுத்து விட்டால் இலங்கை அம்பேல் ஆகிவிடும். பிராவோ, சந்தர்பால், சர்வான், சிமோன்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் அணிக்கு வலு சேர்க்கின்றனர். எட்வர்ட்ஸ், ஜெரோம் டெய்லரின் தாக்குதலை பந்துவீச்சில் அதிகம் நம்பி இருக்கிறது.
இலங்கைக்கு நிகராக மேற்கிந்திய தீவுகளும் சவால் மிகுந்த அணியாக இருப்பதால் ஆட்டத்தில் நிச்சயம் கடும் போட்டியை எதிர்பார்க்கலாம். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.