இந்தியாவிற்கு அதிர்ச்சியளிப்போம் - ஆப்கான் பயிற்சியாளர்
வெள்ளி, 30 ஏப்ரல் 2010 (15:52 IST)
இந்திய அணிக்கு அருமை பெருமைகளைக் கண்டு தங்கள் அணி அஞ்சாது என்றும் முதல் போட்டியில் இந்தியாவிற்கு அதிர்ச்சியளிக்கத் தாயாராகி வருகிறோம் என்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கபீர் கான் தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கும் ஐ.சி.சி. இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளில் நாளை இந்தியா ஆப்கான் அணியை தன் முதல் போட்டியில் சந்திக்கிறது.
"அவர்களுக்கு எங்கள் அணியைப் பற்றி ஒன்றும் தெரியாது. அதிர்ஷ்டவசமாக இந்திய வீரர்களின் ஆட்டத்தை நான் ஐ.பி.எல். போட்டிகளின் போது பார்த்தேன். இதனால் இந்திய அணிக்கு அதிர்ச்சியளிப்போம் போட்டிக்கு பிறகு எங்களை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் விதமாக நாங்கள் விளையாடுவோம்."என்று கூறினார் கபீர் கான்.
ஆல்ரவுண்டர் கரீம் சாதிக் கூறும் போது ஆப்கான் அணியில் பல வீரர்களின் ஆதர்சமாக பல இந்திய நட்சத்திர வீரர்களே இருந்துள்ளனர். குறிப்பாக தங்கள் விக்கெட் கீப்பர் மொகமட் ஷாஜதின் ஆதர்ச இந்திய வீரர் இந்திய கேப்டன் தோனிதான். தோனியை எப்படி எம்.எஸ். என்று அழைக்கிறார்களோ இவரும் அதே போல் தன்னை எம்.எஸ். என்றே அழைத்துக் கொள்கிறார்.
ஆனால் இந்திய நட்சத்திர வீரர்களைப் பார்த்து அசந்து விடமாட்டோம், நாங்கள் இங்கு வந்திருப்பது கடினமான கிரிக்கெட்டை விளையாட. நாங்கள் சவாலாகத் திகழ தயாராயுள்ளோம். என்று சாதிக் கரீம் கூறியுள்ளார்.