இங்கிலாந்திடம் தோல்வி: இந்தியாவின் அரையிறுதி கனவு தகர்ந்தது
திங்கள், 15 ஜூன் 2009 (10:40 IST)
இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர்-8 ஆட்டத்தில் தோல்வியுற்றதன் மூலம் இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.
கடந்த 2007இல் நடந்த இருபது-20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, இம்முறை சூப்பர்-8 சுற்றிலேயே வெளியேறியதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சூப்பர்-8 சுற்றில் நேற்று நடந்த முக்கிய ஆட்டத்தில் இ-பிரிவில் உள்ள இந்தியாவும், இங்கிலாந்தும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சந்தித்தன. இரு அணிகளுக்குமே இது வாழ்வா-சாவா? போட்டியாக அமைந்ததால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இர்பான் பத்தான், பிரக்யான் ஓஜாவுக்கு பதிலாக ஆர்.பி.சிங், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பூவா-தலையா வென்ற இந்திய அணித்தலைவர் டோனி, இங்கிலாந்து அணியை முதலில் பேட் செய்யக் கேட்டுக் கொண்டார்.
இங்கிலாந்து அணி துவக்க வீரர்களாக லூக் ரைட், ரவி போபா ரா ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே துவக்க வீரர் லூக் ரைட் ஒரு ரன்னில் ஆர்.பி.சிங் பந்து வீச்சில் யூசுப் பத்தானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன் பின்னர் ரவி போபாராவுடன் இணைந்த பீட்டர்சன் தனது வழக்கமான அதிரடியை காண்பித்தார். இந்த ஜோடி அணி நல்ல நிலைமைக்கு வர உதவியது. முதல் 10 ஓவரில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டு இழப்புக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது.
அணியின் ரன் எண்ணிக்கை 74 ஆக இருந்த போது, இந்த இணை ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் உடைந்தது. போபாரா 37 ரன்களில் போல்டு ஆனார். ஜடேஜா தனது அடுத்த ஓவரில் ஆபத்தான பீட்டர்சனையும் (46 ரன், 27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியனுக்கு அனுப்பினார். அப்போது அவர் 27 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்திருந்தார்.
அடித்து விளையாட வேண்டிய இடத்தில் 2 விக்கெட்டுகளை இழந்ததால் இங்கிலாந்தின் ரன் வேகம் குறைந்தது. இதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது.
மாஸ்கரன்ஹாஸ் 25 ரன்களுடன் இறுதி வரை களத்தில் இருந்தார். கேப்டன் காலிங்வுட் 7 ரன்னும், ஓவைஸ் ஷா 12 ரன்னும் எடுத்தனர். உதிரிகள் வகையில் இந்தியா 14 வொய்ட் உட்பட மொத்தம் 16 ரன்களை வாரி இறைத்தது கவலைக்குரிய விஷயமாகும்.
இந்திய தரப்பில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், ஜாகீர்கான், ஆர்.பி.சிங் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக வந்த ரோஹித் ஷர்மா 9 ரன்களில், சைடு பாட்டம் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
இதன் பின்னர் இறங்கிய சுரேஷ் ரெய்னா (2 ரன்), பவுன்ஸர் பந்தை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். 24 ரன்னுக்குள் 2 விக்கெட் விழுந்ததால் இந்திய அணி தடுமாறியது.
இதன் பின்னர் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீருடன், ரவீந்திர ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் அபாரமான பந்து வீச்சினாலும், கட்டுக்கோப்பான பீல்டிங்காலும் ரன் எடுக்க தடுமாற்றம் கண்டது. குறிப்பாக நெருக்கடியான நேரத்தில் எப்படி ஆடுவது என்று தெரியாமல் ஜடேஜா திணறினார். ரசிகர்களை வெறுப்புக்குள்ளாக்கிய அவரது மந்தமான ஆட்டத்தால் இந்தியாவுக்கு ரன் தேவை வீதம் அதிகரித்து கொண்டே வந்தது.
முக்கியமான கட்டத்தில் அனுபவம் வாய்ந்த யுவராஜ் சிங்கை களமிறக்காமல், ஜடேஜாவை களமிறங்கிய தோனியின் முடிவு முற்றிலும் தவறானது என்பதை ஆட்டத்தின் முடிவு நிரூபித்தது. அணியின் ரன் எண்ணிக்கை 62 ஆக இருந்த போது காம்பீர் 26 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து களம் புகுந்த துணை கேப்டன் யுவராஜ்சிங் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அட்டகாசமாக தொடங்கினார். மறுமுனையில் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா, ஸ்வான் பந்துவீச்சில் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். அவர் 35 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதே ஓவரில் யுவராஜ்சிங் எதிர்பாராத விதமாக ஸ்டம்பிங் ஆனார். அவரது விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. அவர் 2 சிக்சருடன் 17 ரன்கள் எடுத்தார்.
யுவராஜ் சிங் வெளியேறியதும் இந்திய ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த தோனியும், யூசுப் பத்தானும் பலமாக போராடிப் வெற்றி பெற முயற்சித்தனர். ஆனால் இங்கிலாந்தின் சூப்பரான பந்துவீச்சின் முன்னால் அவர்களால் நினைத்த மாதிரி ஆட முடியவில்லை.
பரபரப்பான கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தது. சைடு பாட்டம் கடைசி ஓவரை வீசினார். இதில் முதல் பந்தில் யூசுப் பத்தான் ஒரு ரன்னும், 2வது, 3வது பந்தில் முறையே 2 மற்றும் ஒரு ரன்னும் தோனி எடுத்தார்.
இதன் பின்னர் 4வது பந்தில் யூசுப் பத்தான் சிக்ஸர் அடித்தார். இதனால் 2 பந்தில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்தில் பத்தானால் ஒரு ரன்னே எடுக்க முடிந்தது. இதையடுத்து கடைசி பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. அதில் தோனி ஆறுதலாக ஒரு பவுண்டரி அடித்தார். இதையடுத்து இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியை விட்டு வெளியேறியது. இந்தியா ஏற்கனவே சூப்பர்-8 சுற்றின் முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது. இனி தனது கடைசி ஆட்டத்தில் நாளை தென்ஆப்ரிக்காவை வென்றாலும் அரையிறுக்குள் இந்தியா நுழைய முடியாது.
எனினும் நேற்றைய வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டது. இன்று மேற்கிந்திய தீவுகளுடன் மோதும் இங்கிலாந்து அணி அதில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழையலாம். இந்த பிரிவில் 2 வெற்றியுடன் தென்ஆப்பிரிக்கா தனது அரையிறுதியை உறுதி செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.