சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் திமுக கூட்டணிக்குச் செல்வார்?

வெ.சுரேஷ் வெங்கடாச்சலம்

புதன், 27 ஜனவரி 2016 (13:55 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ளது. அதற்கான கூட்டணி வேலைகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


 


இந்த தேர்தலில் திமுக, அதிமுக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

சென்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகள் அந்த கூட்டணி மீதான அவ நம்பிக்கை காரணமாக வெளியேறியுள்ளன. பாமகவோ அன்புமணி ராமதாஸை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் அன்புமணியை முதலைமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த முடிவை ஏற்றுக்கொண்டு பாமகாவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள எந்த கட்சியும் முன்வரப்போவதாக தெரியவில்லை. எனவே பாமக தேர்தலில் தனித்து நிற்கவேண்டிய நிலையில் உள்ளது. 

 
இந்நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் சேரும், விஜயகாந்த் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதே இன்றுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

 
விஜயகாந்துடன் மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அதேபோல திமுக தனது கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது. பாஜகவோ விஜயகாந்த் தங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார் என்று கூறிவருகிறது.

ஆனால் விஜயகாந்தோ ஜனவரிமாதம் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று கூறினார். அதன்படி ஜனவரி மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கின்றன. ஆனால் இதுவரையில் கூட்டணி குறித்த தனது முடிவை விஜயகாந்த் தெரிவிக்கவில்லை.


தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள இந்த பரபரப்பான சூழ்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது ஏறத்தாழ முடிவாகிவிட்டது. மக்கள் நலக் கூட்டணியினர் ஜி.கே.வாசனின் தமாகா விடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக்கட்சியைத் தொடங்கியுள்ள வாசன் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியுடன் சேருவாரா என்ற கேள்வி ஒருபுறம் எழுந்தாலும், அவர் சென்ற ஆட்சியில், மத்திய அமைச்சராக இருந்தவர், ஆட்சியை கைப்பற்றுவற்கான பலம் பொருந்திய கூட்டணியில், இணைய விரும்புவார் எனவே, காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றாலும், அதனால் வாசன் கட்சிக்கு எந்தவித தீங்கும் நிகழப் போவதில்லை, எனவே திமுக கூட்டணியில் தமாகா இணைய வாய்ப்பிருக்கின்றது. 


வரவுள்ள 2016 சட்டமன்றத் தேர்தலிலும் வழக்கம்போல திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் கூட்டணியே பலமானதாக காணப்படுகின்றது.


மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் சேர்ந்து மூன்றாவது அணியை பலமாக அமைக்க முயற்சித்து வருகின்றன. அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் ஊழலில் சிக்கவில்லை. மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் என்று சொல்லப்பட்டாலும் மக்கள் மத்தியில் அந்த கட்சிச்கு பெரிய செல்வாக்கு இல்லை.


இந்நிலையில், விஜயகாந்தின் முடிவைப் பொருத்துதான் எதிர்வரும் தேர்தலின் கூட்டணி பலம் அமையப் போகிறது. அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, தேமுதிகவின் ஆதரவு திமுக கூட்டணிக்கா, மக்கள் நலக் கூட்டணிக்கா அல்லது பாஜகவுக்கு என்பதே அரசியல் வட்டாரத்தில் இன்றைய பெரும் கேள்வியாகும். 


மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தேமுதிக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குவங்கியை வைத்துள்ள கட்சி.

சட்டமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்த்தில் உள்ளகட்சி எனவே தனது பலத்தை தொடர்ந்து அதிகரிப்பதற்கான முயற்சியைத்தான் மேற்கொள்வார்கள். அதுதான் அந்த கட்சிக்கான வளர்ச்சியாக இருக்கும். இதனால் மக்கள் மத்தியில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லாத மக்கள் நலக் கூட்டணியில் சேருவது கடினம்.


பாஜக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக பாஜகவினர் கூறிவந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலின் நிலைமையும், சட்டமன்றத் தேர்தலின் நிலைமையும் வேறுவிதமாக அமைவதை கடந்தகால வரலாறுகள் உணர்த்துகின்றன.நாடாளுமன்றத் தேர்தலில் “மேடி அலை” என்று பேசப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் அமர்ந்த பின்னர் அந்த கட்சி மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது. அதன் வெளிப்பாட்டை தமிழகத்தில் அந்த கூட்டணியில் இருந்து பிற கட்சிள் வெளியேறியதே உணர்த்துகின்றன. 


எனவே, 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக அமைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால், அதிக தொகுதிகளை தேமுதிகவிற்கு கொடுப்பதாக பாஜக கூறுவதற்கு வாய்ப்புள்ளது.

ஆனால் தனது வாக்கு வங்கியை காட்டுவற்குப் பதிலாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் கூட்டணிக்குச் செல்வதற்கே தேமுதிக விரும்பும். எனவே பாஜக கூட்டணியில் சேர விஜயகாந்த் விரும்பமாட்டார். இதரக் கட்சிகளுக்கு பெரிய வாக்கு வங்கிகள் இல்லை. எனவே, அவை இந்த தேர்தலின் வெற்றிக்கு தீர்மானகரமான சக்தியாகத் திகழப்போவதில்லை. 


கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அதிமுகவுடனான முரண்பாடு காரணமாக பின்னர் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது. எனவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 150 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு தேமுதிக தொண்டர்களின் ஆதரவும் இருந்தது. அதேபோல அதிமுக தொண்டர்களின் ஆதரவு இந்த கட்சிக்கும் இருந்தது.


கடந்த தேர்தலில் 2G வழக்கு உள்ளிட்ட காரணங்களால் திமுகவிற்கு மக்கள் மத்தியில் அதிருப்தியும் ஆட்சி மாற்றத்தை விரும்பிய காரணத்தினாலும் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. மக்களின் இந்த மனநிலை தேமுதிகவிற்கு அதிக செல்வாக்கை ஏற்படுத்த ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
ஆனால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் அதிமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில்  உள்ளனர். அத்துடன் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதை கடந்தகால தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.


சென்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக திமுகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், வாக்கு வங்கி திமுகவிற்குத்தான் அதிகம் (2011 சட்ட மன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் – 8,249,991, தேமுதிக – 2,903,828) எனவே திமுகவின் செல்வாக்கு அதிகம் மட்டுமல்ல இது பல முறை ஆளும் கட்சியாகவும் இருந்துள்ளது.
 
எனவே, திமுக கூட்டணியில் தேமுதிக சேந்தால், அந்த கூட்டணியின் பலம் அதிகரிப்பதுடன் ஆட்சியை கைப்பற்றவும் வாய்ப்பு அதிகம். அவ்வாறு அமைந்தால் தேமுதிகவின் அரசியல் பலம் அதிகரிப்பதுடன் அமைச்சரவையிலும் இடம்பெற முடியும்.

அத்துடன் அதிமுகவை வீழ்த்தவேண்டும் என்ற அக்கட்சியின் கனவும் நனவாகும் என்பதை விஜயகாந்த் கருதக்கூடும். எனவே திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு கூட்டணிகள் அமைந்தால் திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகன வாய்ப்பாக அதிகரிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்