பெருமைக்குரியவன்

திங்கள், 3 அக்டோபர் 2011 (12:53 IST)
காவிரிப்பூம்பட்டிணத்திலே ஒரு பெரிய வணிகர் இருந்தார். அவர் அயல்நாடுகளிலே சென்று வாணிபம் செய்து பெரும் பொருள் சேர்த்திருந்தார். அவருடைய மகனோ செல்வமாக வளர்ந்த காரணத்தால் தன்னிச்சையாகத் திரிந்தான். தீயவர்களோடு சேர்ந்து அவனுமொரு தீயவனாய்த் திரிந்தான். தான் பாடுபட்டுச் சேர்த்த செல்வத்தையெல்லாம் மகன் தீய வழியில் செலவழித்து விடுவானோ என்று செல்வருக்கு அச்சமாக இருந்தது. தன் மகனைத் திருத்த என்ன வழியென்று சிந்தித்துப் பார்த்தும் அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை.

ஒருநாள் வணிகரும் அவர் மகனும் கப்பல்துறைக்குச் சென்றார்கள். கப்பல்களில் தம் சரக்குகள் ஏற்றுவதைக் கண்காணிப்பதற்காக வணிகர் சென்றார். கூடவே மகனை அழைத்துச் சென்றார்.

துறையின் ஒரு பக்கத்திலே தெப்பம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. சிலை செய்வதற்குரிய பளிங்குக் கல் ஒன்றைத் தொழிலாளர்கள் அத்தெப்பத்தில் ஏற்ற முயன்று கொண்டிருந்தார்கள். அதை வணிகருடைய பிள்ளை கவனித்தான்.

"அப்பா, இவ்வளவு பெரிய கல்லை ஏற்றினால் அந்தத் தெப்பம் அமிழ்ந்து விடாதா?" என்று கேட்டான் பிள்ளை.

வணிகர் அந்தக் காட்சியைக் கண்டார். உடனே அவருள்ளத்திலே ஓர் அருமையான எண்ணம் உண்டாயிற்று. "மகனே பார்த்துக் கொண்டேயிரு" என்றார்.

மகன் பார்த்துக் கொண்டு நின்றான். சிறிது நேரத்தில் தொழிலாளர்கள் பளிங்குக்கல்லைத் தெப்பத்தில் ஏற்றிவிட்டனர். தெப்பம் அமிழவில்லை.கல்லை ஏற்றிய பின் சிலர் தெப்பத்தைத் தள்ளிக் கொண்டு புறப்பட்டனர்.

"மகனே, கல் பெரியதுதான்; கனமானதுதான். ஆனால் இலேசாசான தெப்பத்தையடைந்தவுடன் அது தன் கனத்தையும் பெருமையையும் இழந்து விட்டது. தெப்பத்தோடு அதுவும் மிதக்கிறது. இது போலத்தான் பெருமையோடு வாழ்பவர்கள் அற்பர்களோடு சேர்ந்தால் தங்கள் பெருமையை இழக்கிறார்கள்," என்றார் வணிகர்.

தந்தை தன்னைச் சுட்டித்தான் பேசுகிறார் என்று மகன் தெரிந்து கொண்டான். அவர் கூற்று அவன் மனதில் சுருக்கென்று தைத்தது. நாணித் தலை குனிந்தான். அன்று முதல் தீயோர் சேர்க்கையை விட்டு விட்டான்.

[நன்றி: நல்வழிசசிறுகதைகள் -3ஆமபாகம
ஆசிரியர்: நாரா. நாச்சியப்பன
வானதி பதிப்பகம், மார்ச் 2008 ]

வெப்துனியாவைப் படிக்கவும்