யேசுவின் வேதனை

நிக்கோஸ் கஸான்ஸாகிஸ் (NIKOS KAZANTZAKIS) என்ற புகழ் பெற்ற கிரேக்க நாவலாசிரியரால் எழுதப்பட்டது, "யேசுவின் இறுதி மனமயக்கம்" (THE LAST TEMPTATION OF CHRIST) என்ற நாவல். சமீபத்தில் இந்நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ஆங்கிலத் திரைப்படம், மேற்கத்திய நாடுகளில் பலத்த விவாதத்தை கிளப்பியுள்ளது. சில வருடங்களுக்கு முன் கேரளத்தில் இந்த நாவலைத் தழுவி நிகழ்த்தப்பட்ட, "கிறிஸ்துவின் ஆறாவது திருக்காயம்" (கிறிஸ்துவின்டே ஆறாம் திருமுறிவு) என்ற மலையாள நாடகம், இங்கே பெரும் பிரச்னையை எழுப்பியது ஞாபகமிருக்கலாம் (சல்மான் ருஷ்டியின் "சாத்தானின் புயலைக் கிளப்பியுள்ளதும் இக்கட்டுரையின் சந்தர்ப்பத்தில் கவனத்திற்குரியது) இக்கட்டுரையில் கஸான் ஸாகிஸ்ஸின் நாவல் பற்றிய பிரச்னைகள் விமர்சிக்கப்படுகிறது.

கலைத்துறையில் ஆழமாகவும் நுட்பமாகவும் படைக்கிறவர்கள், வெகுஜனக் கலாச்சாரத்துடனும் மதக்காவலர்களுடனும் மோதும்போது, பல சிக்கல்கள் பிறந்து விடுகின்றன. மதக்காவலர்களுக்கு, "சாமி" என்றால் "சாமி"தான் - "பூதம்" என்றால் "பூதம்"தான். யாராவது கலைஞர்கள் தனக்குள் இருந்து பூதத்தை வெளியே அடித்துவிரட்டும் சாமியைக் காட்டினால், இந்தக் காவலர்களுக்கு எது சாமி - எது பூதம் என்று அடையாளம் தெரிவதில்லை. ஆக மொத்தத்தில் கலைஞரே பூதமாக்கப்பட்டு விடுகிறார்.

கஸான்ஸாகிஸ் தமது நாவல்களுக்காகக் கிரிஸீன் திருச்சபையால் தூஷிக்கப்பட்டவர்; மதப் பிரஷ்டம் செய்யப்பட்டவர். ஆனால் ரத்தப் புற்று நோயால் கஸான்ஸாகிஸ் படுக்கையில் கிடந்தபோது, அவரை மிகக் கௌரவித்த டாக்டர் ஷ்வைட்ஷர் வந்து பார்த்தார். ஆப்பிரிக்காவில் மருத்துவப் பணி புரிந்த ஷ்லைட்ஷர், இந்தியாவில் பணிபுரியும் அன்னை தெரஸாவைப் போன்று திருச்சபையால் மதிக்கப்பட்டவர் - சமாதான நோபல் பரிசையும் பெற்றவர். இதன் பிறகுதான் அங்கே திருச்சபையினருக்குக் கண் திறந்தது. இருந்தும், கஸான்ஸாகிஸின் சடலத்துக்கு மதச் சடங்கு செய்ய, பாதிரி எவரும் முன் வரவில்லை.

"யேசுவின் இறுதி மனமயக்கம்" என்ற கஸான் ஸாகிஸின் நாவலில், யேசுவின் மனித ரீதியான குணங்களும் அவரது தெய்வீக அனுபவங்களும் அருகருகே காட்டப்படுகின்றன. வழிப்பாட்டுக்கு மட்டுமே உரிய தெய்வப் பொம்மையாக அவர் காட்டப்படவில்லை. கஸான்ஸாகிஸ் கம்யூனிஸ்டாக இருந்து, சோவியத் ரஷ்யாவுக்கு அழைக்கப்பட்டு, அங்கே கம்யூனிஸ மோட்சம் எப்படி இருக்கிறது என்று நேரில் கண்டவர். இதன் விளைவாக புத்த மதத்துக்குத் திரும்பியவர். கடுமையான தபசுகளையும் செய்திருக்கிறார் கஸான்ஸாகிஸ். தமது அனுபவங்களையே நாவலில், யேசுவின் ஆத்மானுபவங்களாகவும் காட்டி இருக்கிறார். ஆன்மானுபவத்தில் வேதனை மயமான சுத்திகரிப்பு ஒன்று உண்டு என்ற ரகசியத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தவர் ஜே. கிருஷ்ணமூர்த்தி. கஸான்ஸாகிஸின் இந்த நாவலில் கூட இந்த ரகசியம் கிருஷ்ணமூர்த்தி இதுபற்றி எழுதுமுன்பே வெளிப்பட்டிருக்கிறது. யேசு அறிமுகமாவதே இந்த அனுபவத்துடன்தான். இது நாவலின் தகுதிக்கே சான்றாகும். இந்தச் சுத்திகரிப்பு பற்றி கிறிஸ்துவ திருச்சபை சார்ந்தவர்கள் உட்பட எவரும் இதற்கு முன் குறிப்பிட்டதில்லை.

யேசுவைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றித் தலையாட்டிக் கொண்டிருக்கும் மற்றய சீடர்களிலிருந்து வித்யாசமானவராகவே யூதாஸை கஸான்ஸாகிஸ் சித்தரிக்கிறார். இதற்கும் ஆதாரம் இல்லாமல் இல்லை. முப்பது வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ், தானே நேரில் ஒரு அற்புத மனிதராகக் கண்ட யேசுவைக் காட்டிக்கொடுத்திருப்பானா என்ற பிரச்னை கிறிஸ்தவ மதத்தத்துவமான "தியாலஜி"யில் விசாரிக்கப்பட்டுள்ளது. ரோமசாம்ராஜ்யத்தின் பிடியில் இருந்த யூதர்களை விடுவிக்க யேசு தமது தெய்வீக சக்தியுடன் வெளிப்பட்டு இன்னொரு மோஸஸ் ஆக ரோமர்களை எதிர்க்க வேண்டும் - மோஸஸ், எகிப்தியர்களை தெய்வீக அற்புதங்கள் மூலம் கலங்க அடித்ததுபோல், யேசுவும் செய்ய வேண்டும் என யூதாஸ் நினைத்தான் யூதர்கள் எதிர்பார்த்திருந்த "ரட்சகர்", மோஸஸைப் போன்ற அரசியல் ரட்சகரைத்தான். யேசுவுக்கு அரசியல்தனமான விடுதலை முக்யமில்லை. எனவே, ரோமர்களிடம் அவர் மாட்டிக் கொண்டால், மோஸஸாக மாறுவார் என நினைத்தான் யூதாஸ். இதற்காகவே அவன் யேசுவைக் காட்டிக் கொடுத்தான் என்ற கோட்பாடு உண்டு. சிலுவையில் அறையப்பட்ட பின்பு கூட, அவர் மோஸஸ்போலக் கிளம்பாமல், முந்திய யேசுவாகவே இருந்ததினால், யூதாஸ் தற்கொலை செய்துகொண்டான்.

யூதாஸைப் பற்றி உள்ள இந்தப் பார்வையைச் சற்றே மாற்றிய கஸான்ஸாகிஸ், யேசுவின் தெய்வீகக் கடமையை அச்சுறுத்தித் தெரிவிப்பவனாக அவனைச் சித்தரிக்கிறார். சிலுவையில் அறையப்படுகிற வரைக்கும் தமது தெய்வீகக் கடமை மனிதகுலத்திற்காகப் பலியாவதுதான் என யேசு உணர்ந்து நடந்து கொள்கிறார். சிலுவையில் அறையப்பட்ட பின்பு "ஏலி, ஏலி, லாமாசபக்தாமி?" (ஆண்டவரே, ஆண்டவரே, என்னை ஏன் கைவிட்டீர்) என்று யேசு கூவியதாகப் புதிய ஏற்பாடு கூறுகிறது. நாவலில் யேசு, முதல் தடவை "ஏலி" என்று கூவி, அடுத்த "ஏலி" கூவுமுன் ஒருகணம் மனமயக்கத்துக்கு ஆட்படுகிறார். இதுதான் அவரது Last Temptation அந்த ஒரு விநாடிக்குள் -

மேரி மக்தலேனாவை யேசு காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்; ஒழுங்காகக் குடும்பம் நடத்துகிறார்; சம்பாதிக்கிறார்; மதச் சடங்குகளைச் செய்கிறார். அதாவது மதங்களை சம்பிரதாயமாகப் பின்பற்றுகிறவர்களுடைய உணர்வற்ற - ஆழமற்றவாழ்வை நடத்திக் கிழவராகிறார். ஆனால் மனிதகுலத்தையும் அதற்காகத் தாம் அர்ப்பணிக்கப்பட்டவர் என்பதையும் மறந்து போகிறார். தலையாட்டிச் சீடர்களும் தலைகளை ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தோன்றுகிறான் யூதாஸ். அவன் கண்களில் நெருப்புப்பொறி பறக்கிறது. அவனை கண்டதும்தான் யேசுவுக்குத் தமது கடமை மின்னல்போல் வந்து அடிக்கிறது. அடுத்த விநாடி தொடர்கிறது. இரண்டாவது தடவையாக அவர் ஆண்டவனை அழைக்கும் கூவல். அதாவது நாவலின் முக்கியமான பகுதி, ஒரு விநாடிக்குள் அடங்கிய நீண்டகால வாழ்க்கையின் விபரமான சித்தரிப்பு.



கஸான்ஸாகிஸ் இந்திய மரபுகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர். நாராயணனிடம் நாரதர், "உங்கள் மாயா சொரூபம் எப்படிப்பட்டது? என்று கேட்ட கதையை கஸான்ஸாகிஸ் அறிந்திருக்கிறார் என நாவல் காட்டுகிறது.

நாராயணன் "முதலில் ஒரு சொம்பு குடிதண்ணீர் கொண்டுவா. எனக்குத் தாகமாக இருக்கிறது" என்றார். குடிதண்ணீர் தேடிப்போன நாரதர், ஒரு பெண்ணைச் சந்தித்துக் காதலித்துக் கல்யாணம் செய்து குடும்பஸ்தராகிறார். குழந்தை குட்டிகள் எல்லாமாகின்றன. ஆனால் நாராயணின் தாகத்தை அடியோடு மறந்து போகிறார். அப்பொழுது பெருமழை பிடித்து வெள்ளம் வருகிறது. வெள்ளத்தில் எல்லாமே அடிபட்டுப் போகிறது. அப்போது "நாராயணா" என்கிறார் நாரதர். எங்கே குடிதண்ணீர்? என்று பதில் கொடுக்கிறார் நாராயணன். விழிப்படைந்த நாரதர், அதுவரை தாம் வாழ்ந்த நீண்டகால வாழ்க்கை, உண்மையில் ஒரு கணத்திற்குள் - நாராயணன் முன் நின்று பேசிக் கொண்டிருக்கும்போதே நடந்திருக்கிறது என உணர்கிறார். "இதுவே எனது மாயா சொரூபம்" என்கிறார் நாராயணன். இக்கதையைத் தழுவியே கஸான் ஸாகிஸ், தமது "டுயளவ கூநஅயீவயiடிn டிக hசளைவ" என்ற அற்புத நாவலை படைத்தார் என்று எனக்குத் தோன்றுகிறது.

கஸான்ஸாகிஸ் சித்தரித்த பிரச்னை, மனிதத் தன்மையின் கற்பனைக்கும் தெய்வீகத்தின் தூய்மைக்கும் ஏற்படும் பிரச்னை. இதனைப் புரிந்து கொள்ளவேண்டுமானால், யேசுவை மனிதராகவும் நாம் காணவேண்டும். அவர் சவுக்கடி பட்டதும் சிலுவையில் அறையப்பட்டதும் மனிதராகத்தான். இவற்றை மனித வேதனையுடன்தான் அவர் அனுபவித்தார். கடவுளை நோக்கி அவர் அப்போது கூவியதும் மனிதக் குரலில்தான். அந்த மனிதனே, "இப்படி நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்? சுகமாக வாழலாமல்லவா?" என்று நாவலில் சபலப்படுகிறான். இந்தப் பலவீனம் நம் எல்லோருக்குமே உண்டு. மனித உடலின் வடிவில் மட்டுமின்றி மனித மனத்தின் வடிவிலும் நமது பலவீனங்களை ஏற்றுக்கொண்ட யேசுவே, கஸான்ஸாகிஸின் யேசு. இதற்காக கஸான்ஸாகிஸ் அவரது காலத்தில் திருச்சபையினால் ஒதுக்கி வைக்கப்பட்டாலும், போகப் போக அவரது நாவலின் கருத்தம்சம் "தியாலஜி"க்காரர்களுக்கு அர்த்தமுள்ளதாகத் தென்பட்டிருக்கிறது.

இந்திய ஆன்மிகமரபில், தெய்வங்களின் விலைகளை பற்றிய புராணக் கதைகளுக்கு, ஆழ்ந்த அர்த்தங்களை ஏற்றி ஒத்துக் கொள்வதுண்டு. ஆனால் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இதே விதத்தில் யேசுவையும் நபியையும் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. மோஹினியாக விஷ்ணுவும், பிக்hடனனாகச் சிவனும் மாறி நடத்திய கூத்தைவிடவா - கஸான் ஸாகிஸ் நாவலில் - யேசு செய்த காரியம் மோசம்!

சிலுவையில் அறையப்பட்டதன் விளைவாகக் கைகளிலும் கால்களிலும் ஆக நான்கு மற்றும் விலாவில் ஈட்டியால் குத்தப்பட்டதுடன் ஐந்து காயங்களே பைபிளில் குறிப்பிடப்படுகிறது. யேசு தமது சீடர்களுடன் செய்த இறுதி போஜனத்தில் (மத்தேயு - 6:28), தமது உடல் என்று ரொட்டியைப் பகிர்ந்து கொடுத்தபின்பு, மதுக்கிண்ணத்தில் இருக்கும் திராட்சை மதுவைப் பகிர்ந்து அதுவே தமது ரத்தம் என்று கூறுகிறார் யேசு. அது மற்றவர்களுக்காகச் சொரிவதாகவும் கூறுகிறார். தமது உடல் என்று குறிப்பிடுவது, உண்மையில் பூதசரீரமல்ல ; எல்லையற்ற ஆவி (ஆன்மா) தான். இதே அடிப்படையில் தமது ரத்தத்தை மதுவாகக் குறிப்பிடும்போது, மதுக்கிண்ணமே அவரது இருதயத்தின் குறியீடாகிறது. அது உடைந்திருப்பதையே, அதன் ரத்தம் பிறருக்காகச் சொரிவது பற்றி அவர் கூறுவதில் காணலாம்.

"உடைந்த இதயம்" என்பது பிறருக்காக ஆழ்ந்த வருத்தம் கொள்கிற மனோபாவம். "காது உள்ளவர்கள் கேட்கட்டும்" என்று யேசு கூறுகிறார். "கேட்கக் கூடிய காது" என்பதே, உடைந்த இதயத்தைத்தான் குறிப்பதாகப் பைபிள் நிபுணர்கள் கருதுகின்றனர். பிறருக்காக ஆழ்ந்த வருத்தம் கொள்ளக்கூடியவர்களே யேசுவின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் என்பதுதான் "காது உள்ளவர்கள் கேட்கட்டும்" என்பதன் உட்பொருள். இதுவே, யேசுவின் இறுதி போஜனத்து மதுக்கிண்ணக் குறியீட்டிலும் பிரபலிக்கிறது. அவரது உடைந்த இதயத்தை இன்னொரு உடைந்த இதயம்தான் புரிந்து கொள்ள முடியும்.

இன்று வெகுஜனக் கலாச்சாரத் தளத்தில், உண்மையான ஆன்மீக ஞானம் உணரப்படாமல் இருப்பதால்தான், கஸான் ஸாகிஸின் நாவலைத் தழுவிய நாடகம், சினிமா போன்றவை பல எதிர்ப்புகளுக்கு இலக்காகின்றன. ஆபாசமான உள்ளார்த்தங்களும் மனித உடலின் உன்னதத்தைக் கீழ்மைப்படுத்தி காட்டும் நடனங்களும், ரசித்துத் தள்ளப்படுகின்றன, இந்திய வெகு ஜனத்தினரால். உண்மையில் இது அவர்களது வெகுளித்தனத்தின் விளைவுதான். அவர்களின் வெகுளித்தனத்தை நீக்கிப் பார்வையில் தெளிவு ஏற்படுவதைவிட்டு, வெகுளித்தனத்தைத் திருப்திபடுத்திச் சுரண்டுகிறவர்களே ஆபாசத்தை மறைமுகமாகப் பயன்படுத்துகிறார்கள். எந்தத் திருச்சபைக்காரரும் இதைத் திருத்த முன்வரவில்லை. தங்கள் மத அதிகாரம் ஆடிவிடுமோ என்று மட்டும்தான் அவர்கள் கவனிக்கிறார்கள் போல இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்