புலி எதை நோக்கி பாயுது என்பது கிளைமாக்சில் புரியும் - விஷால் பேட்டி

வியாழன், 16 ஜூலை 2015 (20:08 IST)
அவ்வப்போது நற்பணி, அடிக்கடி ஆவேசப் பேட்டி என விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் விஷால். சுசீந்திரன் இயக்கத்தில் பாயும் புலி, பாண்டிராஜ் இயக்கத்தில் புதுப்படம், முத்தையா இயக்கத்தில் ஒன்று, லிங்குசாமியின் சண்டக்கோழி இரண்டாம் பாகம் என படங்களிலும் கவனம் சிதறவில்லை விஷாலுக்கு.


 
 
பாயும் புலி படத்தின், சிலுக்கு மரம் பாடல் வெளியீட்டு நிகழ்வில் விஷாலின் பேச்சில் அனுபவத் தெளிவும், சாதிக்கும் ஆர்வமும் ஒருங்கே கலந்திருந்தன.
 
பாடல்கள், படம் வெளியீட்டு தேதி?
 
படத்தின் பாடல்களை ஆகஸ்ட் 2ல் வெளியிடவுள்ளோம் செப்டம்பர் 4ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
 
பாயும் புலியில் விஷாலின் கதாபாத்திரம்?
 
நான் இதுவரை இரண்டு படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் மூன்றாவது. நான் எந்த இயக்குனரின் படத்தில் நடித்தாலும், அது அந்த இயக்குனரின் சிறந்த படமாக அமைய வேண்டும் என நினைப்பேன். இந்தப் படம் சுசீயின் சிறந்த படமாக இருக்கும்.
 
படத்தின் சிறப்பம்சம்?
 
படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது கிளைமாக்ஸ் சிறப்பாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். அதுதான் பார்ப்பவர் மனதில் தங்கும். பாண்டி நாடு படத்தில் அப்படி அமைந்தது. இதில் அனல் அரசு அமைத்த க்ளைமாக்ஸ் காட்சி பேசப்படும்.

இமானும் பாடல்களும்?
 
பாயும் புலி இமானின் சிறந்த படைப்பு என பேசப்படும். சிலுக்கு மரமே பாடல் வெளியாகியிருக்கிறது.  இதைவிட எனக்கு, யார் அந்த முயல் குட்டி பாடல்தான் அதிகம் பிடித்தது. 
 
தயாரிப்பு நிறுவனம் வேந்தர் மூவிஸ்?
 
எங்களை மாதிரி நடிகர்களுக்கு நல்ல தயாரிப்பாளர்கள் அமைய வேண்டும். இந்த படத்தில் நல்ல தயாரிப்பாளர் கிடைத்தார். நடிகர்கள் முழு உழைப்பையும் கொடுத்து கஷ்டப்பட்டு நடிக்கிறோம். ஆனால், சில படங்கள் திசைமாறி போய்விடும். குறித்த நேரத்தில் வராது. இந்த தாமதம் வருத்தத்தை ஏற்படுத்தும். பயத்தோடுதான் இந்த படத்தின் வேலைகளையும் துவக்கினோம். முதல்நாளே வேந்தர் மூவிஸ் பயத்தை போக்கிவிட்டது.
 
காஜல் அகர்வால் மற்றும் சூரி?
 
காஜலுடன் முதல்முறையாக நடித்திருக்கிறேன்.  சூரி படப்பிடிப்பில் நன்றாக பழகினார். சூரிக்கும் சேர்த்து என்னுடைய வீட்டிலிருந்து கேரியரில் சாப்பாடு வரும். அந்தளவுக்கு நெருக்கமாக பழகினார். 
 
பாயும் புலி தலைப்பு?
 
இது ஆக்ஷன் கதை. பாயும்புலி தலைப்பு பொருத்தமாக இருந்தது. அந்தத் தலைப்பை கேட்டபோது ஏவிஎம் பாலசுப்ரமணியம் அவர்கள் மறுப்பு கூறாமல் உடனே கொடுத்தார். இந்தப் பாயும்புலி தலைப்பு படத்துக்குப் பெரியபலம். சக்தியும் ஊக்கமும் தரும் தலைப்பு இது. புலி எதை நோக்கிப் பாயுது என்பது படத்தின் க்ளைமாக்ஸில் புரியும்.
 
உண்மைக் கதையா?
 
இந்தக் கதை உண்மைச் சம்பவமா என்று கேட்கிறார்கள். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல இந்தப் படம். மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் சாயல் இதில் தெரியலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்