ஆயிரம் கோடி வசூலை எதிர்பார்க்கிறோம் - ஐ தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், விக்ரம் பேட்டி

செவ்வாய், 13 ஜனவரி 2015 (08:57 IST)
விக்ரம்
 
நாளை ஐ வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த விக்ரம் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.


 
ஐ படத்தில் உங்க கதாபாத்திரம், கெட்டப்புகள் குறித்து சொல்லுங்கள்...?
 
ஐ படத்தில் எனக்கு நான்கு வேடங்கள், பத்து கெட்டப்புகள். இந்தப் படத்துக்காக உடல் எடையை குறைத்தும், அதிகரித்தும் கடின உழைப்பை இதற்கு தந்திருக்கிறேன். காதலும் திகிலும் கலந்த படம் ஐ. சினிமாவை நேசிப்பவர்களுக்கு இந்தப் படம் மேலும் நேசத்தை தரும் படமாக இருக்கும்.
 
படத்தின் லொகேஷன் குறித்து சொல்லுங்கள். குறிப்பாக சீனா...?
 
படப்பிடிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் நிச்சயமாக பேசப்படும். குறிப்பாக சீனா பற்றி குறிப்பிட வேண்டும். அங்கு குறிப்பிட்ட இடங்களுக்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து ரெயிலில் பயணம் செய்து, பின்னர் கார்களிலும், நடந்தும் போய் படப்பிடிப்பு தளத்தை அடைந்தோம். படத்தின் சண்டை காட்சிகளும், பாடல் காட்சிகளும் மிரட்டலாக இருக்கும்.
 
வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடுவது உண்மையா?
 
அமெரிக்காவில் மட்டும் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் 407 தியேட்டர்களில் ஐ வெளியாகிறது. இதுவரை எந்தத் தமிழ் படமும் இவ்வளவு அதிக திரையரங்குகளில் வெளியானதில்லை.

ஆஸ்கர் ரவிச்சந்திரன்
 
படம் குறித்து தயாரிப்பாளர் ரவிச்சந்திரனும் பல விஷயங்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
 
ஐ படத்தின் நீளம் குறைக்கப்பட்டதாக கூறப்பட்டதே?
 
ஐ படத்தின் நீளம் இரண்டு மணி ஐம்பது நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருந்தது. இப்போது கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியின் நீளத்தை 3 நிமிடங்கள் அதிகரித்து இரண்டு மணி ஐம்பது மூன்று நிமிடங்களாக அதிகரித்திருக்கிறோம். 
 
ரிவைஸிங் கமிட்டியில் என்ன சான்றிதழ் கிடைத்தது?
 
படம் யுஏ சான்றிதழுடன்தான் வெளியாகிறது.
 
எந்தெந்த உலக நாடுகளில் ஐ வெளியாகிறது?
 
சீனா, ஜப்பான் தவிர உலகம் முழுவதும் நாளை - புதன்கிழமை படம் வெளியாகிறது. பாகிஸ்தான், உக்ரைனிலும் நாளை படம் திரைக்கு வருகிறது.
 
சீனா, ஜப்பானில் படம் எப்போது திரைக்கு வரும்?
 
இந்த படத்தின் 40 சதவீத காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் பிப்ரவரி சீனாவில் புத்தாண்டு கொண்டாடப்படுவதால், அப்போது ‘ஐ’ படத்தை அங்கு திரையிட திட்டமிட்டு இருக்கிறோம். இதேபோல் ஜப்பானிலும் அடுத்த மாதம் வெளியிடப்படும். உலகம் முழுவதும் இந்தப் படம் 1000 கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்