விஜய், அஜித்தான் இலக்கு - நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்டி

சனி, 14 ஜனவரி 2017 (11:48 IST)
சென்ற வருடம் கவனம் ஈர்த்த அறிமுக நடிகைகள் பெரும்பாலும் கேரளாவிலிருந்து வந்தவர்கள். ஒரேயொரு தமிழ் நடிகை, ஒரு நாள் கூத்து படத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ். அறிமுக நடிகைக்குரிய நம்பிக்கையும், ஆர்வமும் நிவேதாவின் பேச்சில் சுடர்விடுகிறது.


 
 
உங்கள் பூர்வீகம் எது?
 
என்னுடைய பூர்வீகம் கோவில்பட்டி. வளர்ந்தது துபாய்.
 
முதல்பட அனுபவம் எப்படி இருந்தது?
 
ஒரு நாள் கூத்து என்னுடைய முதல்படம். ரசிகர்கள் அதற்கு இப்படியொரு வரவேற்பு கொடுப்பார்கள் என்று தெரியாது. இயக்குனர் சொன்னபடி நடித்தேன். முதல்படம் வெற்றிப்படமாக அமைந்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
 
நல்ல நடிகை பெயர் முதல் படத்திலேயே எப்படி கிடைத்தது?
 
அந்தப் படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது. அதில் ஒன்றி நடித்ததால் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.
 
உதயநிதியின் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது?
 
ஒரு நாள் கூத்து படத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்துதான், பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்கள்.
 
முதல் படத்துக்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளதா?
 
முதல் படத்தில் நாகரீக பெண்ணாக நடித்தேன். இந்த படத்தில் தேனி பகுதியில் உள்ள கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன்.
 
இந்த புதிய வேடம் எப்படி இருந்தது?
 
நகரத்தில் வளர்ந்த எனக்கு கிராமத்து பெண்களுக்குரிய பாவாடை, தாவணி அணிந்து நடித்தது புதுமையாக இருந்தது. இந்த வேடத்தை ரசித்து நடித்திருக்கிறேன்.
 
அடுத்து என்ன தமிழ்ப் படத்தில் நடிக்கிறீர்கள்...?
 
ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன்.
 
பிறமொழிகளில் நடிக்கும் எண்ணம் உண்டா?
 
வாய்ப்புகள் வருகின்றன. முதலில் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன்.
 
சினிமாவில் உங்களின் தற்போதைய ஆசை...?
 
தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

வெப்துனியாவைப் படிக்கவும்