செம லோக்கல் அஜித், துணிச்சலான அஜித் - வேதாளம் பட இயக்குனர் சிவா பேட்டி
வியாழன், 5 நவம்பர் 2015 (18:24 IST)
அஜித்தின் வேதாளம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. அதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்படத்தின் இயக்குனர் சிவா. அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
வேதாளம் பேய் படமா?
பேய் படம் கிடையாது. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படம். சிலர் சொல்வது போல் இது டான் படமும் கிடையாது. படத்தில் திடீர் திருப்பங்கள், உணர்ச்சிகரமான காட்சிகள், நிறைய நகைச்சுவை காட்சிகள் இருக்கும்.
அப்படியானால் வேதாளம் படத்தின் மையம் எது...?
அண்ணன், தங்கை பாசம்தான் வேதாளம் படத்தின் அடிநாதம். அந்தவகையில் பெண்களுக்கான படம் என்று இதை சொல்லலாம். அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.
அஜித்தின் கதாபாத்திரம் என்ன?
நிஜ வாழ்க்கையில் அஜித் பெண்கள் மீது மரியாதை உள்ளவர். அவருடைய உண்மையான சுபாவத்தையே படத்தின் கதாபாத்திரமாக்கியிருக்கிறேன். அதனால், அவரது கதாபாத்திரம் கச்சிதமாக இருக்கும். நமக்கு இப்படியொரு அண்ணன் இல்லையே என்று நினைக்க வைக்கும்.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....
வேதாளம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா?
செம லோக்கல் ஆக ஒரு தோற்றத்திலும், மிக துணிச்சலான இன்னொரு தோற்றத்திலும் அவர் வருகிறார். இரட்டை வேடமா என்பது, சஸ்பென்ஸ்.
அஜித்தின் நடிப்பு எப்படி?
புதிய அஜித்தை இந்தப் படத்தில் பார்க்கலாம். வித்தியாசமாக நடித்திருக்கிறார். அவர் நடித்த எந்தப் படத்திலும் வேதாளம் அளவுக்கு நடிப்பில் ஸ்கோர் செய்தது இல்லை.
படம் பார்த்துவிட்டு அஜித் என்ன சொன்னார்?
டப்பிங் பேசிய போது படத்தைப் பார்த்தார். முழுப் படத்தையும் அப்போது பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் கை குலுக்கினார்.
வீரம் படம் முடிந்ததும், உடனே அடுத்தப் படம் பண்ணலாம் என்று அஜித் உங்களிடம் கூறினார். வேதாளம் பார்த்த பின் என்ன சொன்னார்?
வீரம் படத்தின் போது சொன்னதைதான் இப்போதும் சொன்னார். அடுத்தப் படம் எப்போது? என்ன படம்? என்பதையெல்லாம் அவர்தான் சொல்ல வேண்டும்.
மறக்க முடியாத அனுபவம்...?
கொல்கத்தா ரோடுகளில் அஜித் ஓடியதும், இத்தாலி கப்பலில் ரிஸ்க்கான காட்சியில் நடித்ததும் மறக்க முடியாது. இதுவரை நடித்தப் படங்களிலேயே இந்தப் படத்துக்குதான் அதிகம் உழைத்ததாக அஜித் கூறினார்.