சாயா புனிதமான ஆத்மாக்களை பேசும் படம் - இயக்குனர் பழனிவேல் பேட்டி

வியாழன், 14 ஜூலை 2016 (20:24 IST)
இது பேய்களின் சீசன். விதவிதிமான பேய்களை உருவாக்கி உலவவிடுவதில் இயக்குனர்கள் நீ நான் என்று போட்டியிடுகிறார்கள். இயக்குனர் பழனிவேல் தன் பங்குக்கு ஒரு பேய் படத்தை எடுக்கிறார். படத்தின் பெயர் சாயா. இதன் முக்கிய அட்ராக்ஷன், சோனியா அகர்வால். மீதியை பழனிவேலையே கேட்டு தெரிந்து கொள்வோம்.
 

 
 
அதென்ன சாயா...?
 
சாயா என்பதற்கு சக்தி நிறைந்த என்று பொருள். சக்தி நிறைந்த அந்த வார்த்தைக்கும், ஆத்ம சக்திக்கும் தொடர்பு இருப்பதால் சாயா என்று பெயர் வைத்துள்ளேன்.
 
யார் நடிக்கிறார்கள்?
 
சந்தோஷ் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகி டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி. இன்னொரு நாயகியாக ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்த கௌதமி சௌத்ரி நடிக்கிறார்.
 
சோனியா அகர்வால்...?
 
சோனியா அகர்வாலுக்கு இது முக்கியமான படம். வன இலாகா அதிகாரியாக அவர் நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக கடும் பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். அவருக்கு முற்றிலும் மாறுபட்ட இமேஜை இந்தப் படம் உருவாக்கிதரும். முக்கியமாக அவருக்கு ஆக்ஷன் பாதை அமைத்துதரும் படமாக சாயா இருக்கும்.
 
மற்ற பேய் படங்களிலிருந்து சாயா எப்படி மாறுபடுகிறது?
 
இதுவரை எடுக்கப்பட்ட பேய் படங்களில் ஆவிகளை பற்றி மட்டுமே பேசியிருக்கிறார்கள். பயம் காட்டுவது, சத்தங்களால் பயமுறுத்துவது என்ற வழக்கமான பாணியை விட்டுவிட்டு இந்தப் படம் புனிதமான ஆத்மாக்களை பற்றி பேசுகிறது. ஆத்மாக்களின் நல்ல நோக்கம் மாணவர்களுக்கும், சமுதாயத்திற்குமான தேவைகளை நிறைவேற்ற உதவும் என்பதை வித்தியாசமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேnம்.
 
எங்கு படத்தை படமாக்கினீர்கள்?
 
பெரம்பலூரில் உள்ள பச்சை மலைப் பகுதிகள் மற்றும் சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். சாயா ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்