சசிகலா முதல்வர் ஆவதை விரும்பவில்லை - கமல் ஓபன் பேட்டி

சனி, 11 பிப்ரவரி 2017 (13:39 IST)
சமீபமாக அரசியல் விஷயங்களில் ஆர்வமாக கருத்து கூறி வருகிறார் கமல். மற்ற திரைபிரபலங்கள் கருத்து சொல்ல அஞ்சும்  விஷயங்களிலும் கமலின் கறாரான விமர்சனம் தொடர்கிறது. தமிழகத்தில் தற்போது நிலவிவரும் பதவிச் சண்டை குறித்து  அவர் பேட்டியளித்தார்.

 
கோபமும் எரிச்சலும்
 
அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். எனது கருத்துகளை யாரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திவிடக் கூடாது  என்பதில் கவனமாக இருக்கிறேன். முக்கியமாக வன்முறையாளர்கள் கையில் என் கருத்து தவறாக போய் சேர்ந்துவிடக் கூடாது.  இதுவரை என்னிடம் இருந்த கோபங்கள் இப்போது எரிச்சலாக வெளிப்படுகிறது.
 
உழைப்பாளிதான் வேண்டும்
 
40 வருடங்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் இங்கே இருக்கிறது. இதற்காக எந்த அரசியல் கட்சியையும் குறை  சொல்லவில்லை. ஆனால், ஜனநாயக நாட்டில் அதை சுட்டிக்காட்ட எங்களுக்கு உரிமை இருக்கிறது. நாங்கள் ஆட்டுமந்தைகள்  அல்ல. எங்களை மேய்ப்பதற்கு மேய்ப்பன்களோ தலைவர்களோ தேவையில்லை. எங்களைப் போல் உழைக்கிற  உழைப்பாளிதான் வேண்டும்.
 
பன்னீர் ஒரு ஜனநாயக கருவி
 
ஓ.பன்னீர் செல்வம், சசிகலா இருவர் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. பன்னீர் செல்வம் இப்போது முதல்வராக இருக்கிறார்.  அவரது ஆட்சி திறனில் திறமையின்மைக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவர் ஏன் சிலகாலம் முதல்வராக நீடிக்கக்  கூடாது. மக்களுக்கு அவரது ஆட்சி பிடிக்கவில்லையென்றால் பிறகு நீக்கிக் கொள்ளலாம். மக்களுக்கு உதவும் ஒரு ஜனநாயக  கருவிதான் அவர். இப்படிச் சொல்வதால் நான் பன்னீர் செல்வம் ஆதரவாளர் கூட்டத்துடன் சேரப்போவதில்லை. ஓட்டுப்போடும்  போது மட்டும் விரலில் கறைபட்டுக் கொள்கிறேன். நான் அரசியலை சாராதவனாக இருந்தாலும் எனக்கென்று சில  சித்தாந்தங்கள் இருக்கிறது.
 
சசிகலா முதல்வராகும் யதார்த்தம் காயப்படுத்துகிறது
 
மக்களுக்கு எது நல்லதோ அதை ஆதரிக்கிறேன். அதனால் சசிகலா முதல்வராவதை நான் விரும்பவில்லை. இப்போதிருக்கும்  சூழ்நிலை மோசமான இறுதிக்காட்சி. சசிகலா முதல்வராகும் யதார்த்தம் என்னை காயப்படுத்துகிறது. சசிகலாவிடத்தில் அதிக  ஆதரவு இருப்பது என்னை ஈர்க்கவில்லை. தேசத்தை வழிநடத்துவது எப்படி என்று தெரியவில்லையென்றால் அவர்கள் அந்த  இடத்தில் இருப்பதற்கு உரிமையில்லை. நான் யாருக்கும் தலைவன் அல்ல. தமிழக மக்களை ரசிப்பவன் மட்டுமே.
 
- இவ்வாறு கமல் பேட்டியின் போது கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்