முத்தின கத்திரிக்காய் உங்களை சிரிக்க வைக்கும் - இயக்குனர் வெங்கட் ராகவன்

சனி, 28 மே 2016 (15:01 IST)
சுந்தர் சி. நடிப்பில் வெளிவரவிருக்கும் முத்தின கத்திரிக்காய் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் என்று ஒரு பேச்சு நிலவுகிறது.


 


இந்தப் படத்தின் ஒரிஜினலான மலையாளப் படம் வெள்ளிமூங்காவில் இரட்டை அர்த்த வசனம் முதற்கொண்டு எந்த கெட்ட விஷயமும் கிடையாது. பிறகு ஏன் அதன் ரீமேக்கிற்கு இப்படியொரு கெட்ட பெயர்? 
 
சந்தேகங்கள் அனைத்தையும் விளக்கினார் படத்தின் இயக்குனர் வெங்கட் ராகவன். 
 
அதென்ன முத்தின கத்திரிக்காய்...? 
 
கல்யாணமாகாமல் இருக்கும் ஆண்களை முத்தின கத்திரிக்காய் என்பார்கள். இந்த கதையின் நாயகன் 40 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறான். அதனால் இந்தப் பெயர். 
 
இரட்டை அர்த்த வசனங்கள் படத்தில் அதிகமிருப்பதாக சொல்லப்படுவது...? 
 
சுத்த பொய். இந்தப் படத்தைப் பொறுத்தவரை யார் மனதையும் புண்படுத்தாத வகையில், அனைத்துக் காட்சிகளிலும் நகைச்சுவை இழையோடியிருக்குமாறு பார்த்துக் கொண்டோம். ரசிகர்கள் அனைத்துக் காட்சிகளிலும் சிரிக்க வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளாக இருந்தது. 
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க..........

 


வெங்ளிமூங்காவை தேர்வு செய்ய என்ன காரணம்? 
 
இப்போது பேய் கதைகள், காதல் கதைகள், போலீஸ் கதைகள் என்று வந்து கொண்டிருக்கின்றன. வெளிவராத ஒரு ஜானரில் படம் இயக்கலாம் என்று யோசித்து அரசியல் களத்தை தேர்வு செய்தோம். மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற வெள்ளிமூங்கா படத்தை நானும் சுந்தர் சி. சாரும் பார்த்தோம். இருவருக்கும் 
பிடித்திருந்தது. இதையே தமிழில் ரீமேக் செய்யலம் என்று முடிவு செய்தோம். 
 
மலையாளப் படத்தின் அரசியல் சூழல் தமிழுக்கு பொருந்துமா? 
 
மலையாளப் படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் அதிலிருந்து ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி மாற்றி எடுத்திருக்கிறோம். அதாவது அந்தப் படத்திலிருந்து ஒரு கோடு மட்டும் எடுத்துக் கொண்டு நாங்க ரோடு போட்டிருக்கிறோம். மலையாளப் படத்தை இயக்கியவர் இதனைப் பார்த்தால், இந்தக் கதையை இப்படிகூட எடுக்கலாமா என்று ஆச்சரியப்படுவார். 
 
நீங்கள் போட்ட ரோட்டை விளக்க முடியுமா? 
 
ஒரு அரசியல்வாதியின் இயல்பான வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். 40 வயதான அரசியல்வாதி ஒருவர் வாழ்க்கையிலும், அரசியலிலும் எதுவும் சாதிக்க முடியாமல் இருக்கையில் ஒரு பெண் காரணமாக அவரது வாழ்வில் நடைபெறும் நிகழ்வு அவரை அரசியலில், சொந்த வாழ்க்கையில் எந்த நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதுதான் முத்தின கத்திரிக்காயின் கதை. 
 
சிரிக்க வைக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் நிறைவேறுமா? 
 
நிச்சயமாக நிறைவேறும். முத்தின கத்திரிக்காய் உங்களை சிரிக்க வைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்