காசும், போதை பழக்கமும்தான் மனித குணத்தை மிருக குணமாக மாற்றுகிறது - கஸ்தூரிராஜா பேட்டி

வெள்ளி, 22 மே 2015 (10:53 IST)
என் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோவிலிலே, தூது போ செல்லக்கிளியே, நாட்டுப்புற பாட்டு, துள்ளுவதோ இளமை, சோலையம்மா உள்பட பல படங்களை டைரக்டு செய்த கஸ்தூரிராஜா, சில வருட இடைவெளிக்குப்பின், காசு பணம் துட்டு என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார். படம் குறித்துப் பேச அவரிடம் நிறைய இருக்கிறது.
 

 
காசு பணம் துட்டு என்ன மாதிரியான படம்?
 
என் பழைய படங்களில் இருந்து மாறுபட்ட படம் இது. தினமும் கொலை-கொள்ளை என்று வரும் பத்திரிகை செய்திகளில், 16 வயதில் இருந்து 20 வயதுக்குள் உள்ள இளைஞர்களே குற்றவாளிகளாக இருக்கிறார்கள். போதை பழக்கம், பெண் சகவாசம், ஆடம்பர வாழ்க்கை போன்றவைகளுக்கு ஆசை காட்டி, அவற்றுக்கு அடிமைகளாக்கி, சமூகத்தில் குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள்.

சாதாரண குடிமகனில் இருந்து சட்டசபை வரை இவர்களின் உதவி தேவைப்படுகிறது. இதுபோன்ற இளைஞர்கள் மூலம் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இவர்களை யார் உருவாக்குவது? இதற்கு தீர்வு என்ன? என்பதே காசு பணம் துட்டு படத்தின் கதை.
 
ஆழமான சமூகப் பிரச்சனையை சொல்லும் கதை. இதற்கு எப்படி தயாரானீர்கள்?
 
இந்த கதைக்காக 4 வருடங்கள் ஆராய்ச்சி செய்து, 460 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, படத்தை உருவாக்கி உள்ளேன். புதுமுகங்கள் மித்ரன், சுயேஷா சாவந்த், பாலா, மென்டீஸ், பிரமிட் நடராஜன் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். 

பிரபு, ராதிகா இருப்பதாகவும் கேள்விப்பட்டோம்?
 
படத்தின் கதையோட்டத்துக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க பிரபு, ராதிகா இருவரிடமும் கேட்டேன். உடனே நடிக்க ஒத்துக் கொண்டார்கள். இருவரின் கதாபாத்திரமும் வலிமையானது.
இந்த கதையை படமாக்க என்ன காரணம்?
 
இன்று உறவுகள், பாசம், அன்பு இதையெல்லாம் மீறிய  விஷயமாக பணம் மாறி விட்டது. பிறக்கும் போதே யாரும் திருடனாக பிறப்பதில்லை. திருடன், பிக்பாக்கெட், ரவுடி, கொலைகாரன், கொள்ளைக்காரன் என அவர்களை மாற்றியது யார்? இந்த சமுதாயம் தான். காசும், போதை பழக்கமும் தான் மனித குணத்தை மிருக குணமாக மாற்றி விடுகிறது என்கிற ஒரு வரி கதையை இரண்டு மணி நேர திரைக்கதையாக்கி இருக்கிறோம்.
 
படத்தில் பணிபுரிந்திருப்பவர்கள் யார்?
 
சாஜித் இசையமைக்க, பிரசாத் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி நான் இயக்கியிருக்கிறேன். படத்துக்கு தணிக்கை குழு, யு ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். கஸ்தூரிமங்கா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் ஆரம்பத்தில் திரைக்கு வரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்