கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறேன் - விஷால் பேட்டி

சனி, 2 ஜனவரி 2016 (13:24 IST)
பாண்டிய நாடு படத்துக்குப் பிறகு கிடைத்த ஸ்டார் அந்தஸ்து, நடிகர் சங்க பொறுப்பை கைப்பற்றியது என்று 2016 விஷாலுக்கு வெளிச்சத்துடன் விடிந்திருக்கிறது. 


 
 
இந்த வருடத்தின் முதல் படம் பாண்டிராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரும் கதகளி. பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதறாமல் பதிலளித்தார்.
 
கதகளி என்று பெயர் வைக்க என்ன காரணம்?
 
இதற்கு முன்பே பலர் என்னிடம் ஏன் கதகளி என்று தலைப்பு வைத்தீர்கள் என்று கேட்டனர். நாங்கள் கதகளி தலைப்பு தமிழ் தான் என்று தெரிந்த பின்னர்தான் படத்துக்கு கதகளி என்று பெயர் வைத்தோம். 
 
கதகளியின் சிறப்பு என்ன?
 
நான் முதன் முறையாக இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். இது மிகவும் சிறப்பான கதை. என்னுடைய படங்களில் இரண்டாம் பாதியில் பாடல்கள் இல்லாமல் வருவது இது தான் முதல் முறை. 
 
சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்கும் போலிருக்கிறதே?
 
படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகள் அனைத்துக்கும் ஒரு காரணமும், லீடும் நிச்சயம் இருக்கும். 
 
படத்தின் கதை என்ன? கோடிட்டு காட்ட முடியுமா?
 
ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால் ஒருவனுடைய வாழ்க்கையே மாறிவிடும். அது தான் கதகளி. என்ன அழைப்பு என்பதை எல்லாம் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
படத்தின் இசை, பாடல்கள்...?
 
படத்துக்கு இசையமைப்பாளர் ஆதி மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார். படத்தில் அவருடைய பின்னணி இசை பெரிதும் பேசப்படும் விஷயமாக இருக்கும். 
 
இரண்டு பாடல்களும் பிரமாதமாக வந்துள்ளன.
 
இளம் நடிகர்கள் இணைந்து நடிப்பதாகச் சொன்னது என்னானது?
 
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஒரு படத்தில் பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கிறோம். அதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா ஆகியோருடன் நானும் இணைந்து நடிப்பது என்று ஏற்கனவே முடிவு செய்திருக்கிறோம். இந்த படத்தில் மேலும் பல கதாநாயகர்கள் இணையலாம். இதற்கான டைரக்டர் தேர்வு நடைபெறுகிறது. 
 
கதகளி படத்தின் ட்ரெய்லரில் வரும் காண்டம் வார்த்தை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறதே?
 
கதகளி படத்தின் டிரெய்லரில் ‘காண்டம்’ என்ற வார்த்தை இடம்பெறுகிறது. இதுபற்றி ஒருவர் தனது டுவிட்டரில் விமர்சித்து இருக்கிறார். ‘காண்டம்’ என்பது தவறான வார்த்தை அல்ல. செக்ஸ் கல்வி அவசியம் என்று பேசப்படுகிற இந்த காலகட்டத்தில், ‘காண்டம்’ தவறான வார்த்தை என்று கூறுவது தவறு. எந்த உள்நோக்கத்துடனும் படத்தில் இந்த காட்சி வைக்கப்படவில்லை. சினிமாவுக்கு தணிக்கை என்று ஒன்று இருக்கிறது. அதை தாண்டி தவறுகள் நடைபெறாது.
 
வருகிற பொங்கல் பண்டிகைக்கு ‘கதகளி’ படத்துடன் உங்கள் நண்பர்களின் தாரை தப்பட்டை, ரஜினி முருகன், கெத்து ஆகிய 3 படங்களும் மோதுகிறதே?
 
இந்த போட்டியை தவிர்க்கமுடியாது. பொதுவாக எல்லா படங்களுமே வெற்றி பெறவேண்டுமென்று வேண்டுபவன் நான். 4 படங்களும் பெரிய வெற்றி பெறவேண்டும் என்று கூடுதலாக வேண்டிக்கொள்வேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்