தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்க தெரியாதவர்கள் அல்ல - கார்த்தி, ஞானவேல்ராஜா பேட்டி

வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (10:02 IST)
கொம்பன் படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. எங்கெல்லாம் கலவரம் வெடிக்கும் என்றார்களோ, அங்கு வண்டி கட்டி வந்து பார்க்கிறார்கள் என்றார்கள் கார்த்தியும், ஞானவேல்ராஜாவும். அவர்கள் இந்தத் தகவலை சொன்னது, கொம்பன் சக்சஸ் மீட்டில். அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி இங்கே உங்களுக்காக.
 

 
கார்த்தி
 
கொம்பன் நல்ல படம். நல்ல கருத்தை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கும் படம். சிலர் சொல்வதைப் போல் தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்க தெரியாதவர்கள் அல்ல. வன்முறை கலாச்சாரம் நம்முடையதல்ல. ராமநாதபுரம் மண்ணும் அப்படித்தான்.
 
பொள்ளாச்சி, போடிநாயக்கனுnர் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினால் ஆரவாரம், சலசலப்பு இருக்கும். ஆனால், ராமநாதபுரம் மக்கள் அமைதியானவர்கள். மரியாதையும் அன்பும் மிக்கவர்கள். அப்படிதான் நடந்து கொண்டார்கள்.
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர்கள் முன்னேறாமல் இருக்கின்றன. அதைப் பார்த்து வருத்தப்பட்டேன். கொம்பன் படம்போல் பல படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடக்க வேண்டும். அந்த ஊர்கள் எல்லாம் எல்லா வசதிகளும் பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. கொம்பன் மாதிரி ஆழமான அழுத்தமான மனிதம் பேசும் கிராமத்து கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
ஞானவேல்ராஜா
 
கொம்பன் படத்துக்கு பிரச்சனை ஏற்பட்ட போது நான் மூன்று பேரிடம் போனேன். தெய்வத்திடம் போய் முறையிட்டேன். என் அப்பாவிடம் சென்று அழுதேன். அடுத்து ஊடகங்களிடம் வந்தேன். சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்துக்கு இப்படியொரு பிரச்சனையா என்ற போது நீங்கள் ஆதரவு தந்தீர்கள்.
 
இந்தப் பிரச்சனையால் நான் மட்டுமின்றி கொம்பன் படக்குழுவினரும் முப்பது நாள்கள் படாதபாடுபட்டோம். குறித்த தேதியில் படம் வருமா என்ற பயம் கலக்கம் எங்களுக்கு இருந்தது.
 
எந்தெந்த இடங்களில் பிரச்சனை பதட்டம் என்று கூறினார்களோ, அங்குதான் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வந்து சந்தோஷமாக படத்தைப் பார்த்துச் செல்கிறார்கள். மதுரையில் வழக்கத்தைவிட இப்போது வசூல் இரு மடங்காகியிருக்கிறது. இப்படத்துக்கு தடை கேட்ட கிருஷ்ணசாமி சார் வெறும் அம்பு தான். அவர் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அதற்கான வழிமுறைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
 
அவருடைய எதிர்ப்பால் சுமார் 120 திரையரங்குகள் குறைவாகத் தான் வெளியானது. வரும் புதன்கிழமை முதல் திரையரங்குகளை அதிகரிக்க இருக்கிறோம். அதுமட்டுமன்றி, கிருஷ்ணசாமி சாரின் எதிர்ப்பால் வெளிநாட்டுக்கு சரியான நேரத்தில் எங்களால் படத்தை அனுப்ப முடியவில்லை.
 
படத்தை தாமதமாக அனுப்பினால், அதற்கான பணத்தை கழித்துக் கொண்டுதான் கொடுப்போம் என்று ஒப்பந்தத்தில் இருக்கிறது. அந்த பணத்தையும் ஒப்பந்தப்படி கழித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்