விக்ரம் சார் எனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டார் – மனம் திறந்த “கடாரம் கொண்டான்” இயக்குனர்

வியாழன், 4 ஜூலை 2019 (19:27 IST)
ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் ”கடாரம் கொண்டான்” படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
 

அதில் பேசிய இயக்குநர் ராஜேஷ் M.செல்வா "ராஜ்கமல் பிலிம்ல இரண்டு படம் மட்டும் அல்ல. நிறைய படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். படம் நல்லா வந்திடும் என்பது தெரியும். ஆனாலும் ஒரு பயம் இருந்தது. விக்ரம் சார் இங்கு எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் செட்டிலும் இருப்பார்.  காலையில் 9 மணிக்கு சூட்டிங் என்றால் சரியாக வந்துவிடுவார். அதிகநேரம் சூட்டிங் நடந்தால் கமல்சார் திட்டுவார். ஒரு தயாரிப்பாளரா அவர் சந்தோசம் தான் படணும். ஆனால் அவர் அப்படியில்ல. இந்தப்படம் கமல் சார் எனக்காகவே தயாரித்தார்.

சியான் விக்ரம் சாரோட வொர்க் பண்ணும் போது என் நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். அவருக்குப் பிடித்து விட்டால் நம்மை குழந்தை மாதிரிப் பார்த்துக்கொள்வார் என்றார்கள். சொன்னது போலவே என்னை குழந்தைப் போலவே பார்த்துக்கொண்டார். நிறைய முறை அவர் எனக்கு சாப்பாடு ஊட்டி கூட விட்டிருக்கிறார். என் வீட்டில் என்னை நம்புகிறதை விட கமல் சார் என்னை நம்புகிறார்" என்றார்

நடிகர் விக்ரம் "ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க.  அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே  படத்தை ரிமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது.
 

அக்‌ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்கார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் சார் இந்தப்படத்தில் இன்னொரு நடிகர். அழகா நடிக்கச் சொல்லித் தருவார். எல்லாரும் நான் துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள்.ஆனால் இந்த படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப்படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்" என்றார்

கடைசியாக பேசிய நடிகர் கமல்ஹாசன் "ராஜ்கமல் நிறுவனத்தை துவங்கும் போது அக்‌ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் ஆசைப்பட்டோம். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் ஊபர் வாகனம் அல்ல இந்தக் கம்பெனி. நல்ல சினிமாவை கொண்டு வர வேண்டும் என்றுதான்  துவங்கியுள்ளாம். விக்ரம் சியான் விக்ரமாக மாற இவ்வளவு காலம் ஆகி விட்டதே என்று கவலைப் பட்டிருக்கேன். சேது இன்னும் பல காலத்திற்கே முன்பே வந்திருக்க வேண்டும். கடாரம் கொண்டான் படத்தை நான் பார்த்தேன். 
 

கலைஞன் ஆவதற்கு முன்பாகவே நான் ரசிகன். படத்தை மிகவும் என்ஜாய் பண்ணிப் பார்த்தேன். ஒருபடத்திற்கு எல்லாமே அமையாது. ராஜ்கமலின் கடாரம் கொண்டான் படத்திற்கு அது அமைந்தது சந்தோஷம். இனி சியான் விக்ரமை கே.கே விக்ரம் என்று அழைப்பார்கள். நான் படப்பிடிப்பு நடக்கும் போது எந்தப்பதட்டமும் இல்லாமல் இருந்தேன். அதற்கான காரணம் இயக்குநர் ராஜேஷ். நிச்சயமாக இந்தப்படம் இன்னொரு நகர்வுக்கு அழைத்துச் செல்லும்.

ஜுலை 19-ஆம் தேதி சந்தோசமான நாள். அன்று கடாரம் கொண்டான் வெளியாகிறது. மற்ற நடிகர்களை நடிக்க விட்டு அழகுப் பார்ப்பதில் தான் ஒரு நடிகனின் சிறப்பு இருக்கிறது. திருவிளையாடல் படத்தில் நடிகர் சிவாஜி நாகேஷை நடிக்கவிட்டு ரசித்துக் கொண்டிருப்பார். ரசிகர்கள் நல்லபடத்தை கொண்டாட வேண்டும். விக்ரம் சொன்னார் இங்கிலிஷ் படம் போல இருக்கும் என்றார். அப்படி சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்..நிஜமாகவே இது ஆங்கிலப்படம் போலதான். இங்கு எல்லோரையும் வாழ்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்