இளையராஜாவின் இசை மிகப்பெரிய வரம் - தனுஷ் பேட்டி

வியாழன், 9 ஜூன் 2016 (11:42 IST)
தனது தயாரிப்பில் பிற நடிகர்கள் நடிக்கும் படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் கலந்து கொள்வதில்லை.


 


விதிவிலக்காக அம்மா கணக்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். பேட்டியளித்த தனுஷிடம் அந்த சந்தேகத்தையே முதல் கேள்வியாக்கினர்.
 
உங்க தயாரிப்பில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நடித்த போதெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வராத நீங்கள் இதற்கு வர என்ன காரணம்?
 
இதற்கு முந்தைய படங்களில், அந்தப் படங்கள் அதில் நடித்தவர்களின் படங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் வரவில்லை. வேறு எந்த காரணமும் இல்லை.
 
அம்மா கணக்கு படத்திற்கு மட்டும் வர என்ன காரணம்?
 
அம்மா கணக்கு படத்தை என்னுடைய படமாக நினைக்கிறேன். அதனால்தான் வருகிறேன் என்றேன், வந்தேன்.
 
இந்திப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய எது தூண்டுதலாக அமைந்தது?
 
ஆனந்த் எல்.ராயை பார்க்கப் போன போது, நில் பேட்டே சனாட்டா படத்தின் ட்ரெய்லரை காண்பித்தார். அதைப் பார்த்த உடனேயே, தமிழ் ரீமேக் உரிமையை எனக்கு கொடுங்கள் என்று கேட்டேன். அதற்குப் பிறகுதான் முழுப் படத்தையும் பார்த்தேன். அந்தளவு தாக்கத்தை ட்ரெய்லர் ஏற்படுத்தியது. ஒரு அம்மா தன் மகள் மீது வைத்துள்ள பாசம், கனவு பற்றிச் சொல்கிற படம்.
 
அம்மா கணக்கின் முக்கியத்துவம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
 
இந்த சமூகத்துக்கு சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இந்தப் படத்தில் இருக்கிறது. பலருக்கும் கணக்குப் பாடம் கடினமாக இருக்கிறது. நான்கூட பிளஸ்டூவில் கணக்கில் பெயிலானவன்தான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது, அவர்கள் படிப்பின் மீது ஒரு கனவுடன் கவலையுடன் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளுக்கோ படி படி என்றால் பிடிப்பதில்லை. ஏன் பெற்றோர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்று பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை. இந்தப்படம் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி இருக்கும்.
 
இசை மற்றும் ஒளிப்பதிவு...?
 
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அது மிகப்பெரிய வரம். ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிகிர்தண்டாவின் ஒளிப்பதிவாளர் அவர். ஹாலிவுட் தரத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
அமலா பால் குறித்து...?
 
படத்தில் நடித்து முடித்த பிறகு, தன்னுடைய நடிப்பைப் பற்றி அமலா பால் கேட்டுக் கொண்டே இருந்தார். அவரது க்ளோஸ் அப் காட்சிகளுக்கெல்லாம் இளையராஜா இசையமைத்துள்ளார். இதைவிட என்ன வேண்டும்? அமலா பால் ஏற்று நடித்த கதாபாத்திரம் சிறப்பானது. இதுதான் அவர் நடித்ததிலேயே பெஸ்ட். இந்தப் படம் அமலா பாலுக்கு தேசிய விருதை பெற்றுத் தரும்.
 
காக்கா முட்டை, விசாரணை என்று நீங்கள் தயாரிக்கும் படங்களுக்கு தொடர்ந்து விருதுகள் கிடைக்கிறதே?
 
எல்லாம் கடவுள் அருளால் அமைவதுதான். திட்டமிட்டு விருதுக்கென படம் எடுப்பதில்லை. அம்மா கணக்கு படத்தை எடுத்ததற்காக பெருமைப்படுகிறேன்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்