மனதுக்குப் பிடித்தால் தமிழ் இளைஞனையே திருமணம் செய்வேன் - கேதரின் தெரேசா பேட்டி

செவ்வாய், 26 ஜனவரி 2016 (18:18 IST)
மெட்ராஸ் படத்தில் அறிமுகமான கேதரின் தெரேசா கதகளி, கணிதன் என்று சரியான திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். பூர்வீகம் கேரளா என்றாலும் வளர்ந்தது துபாயில். நாளை கணிதன் படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் உற்சாகத்தில் இருந்தார் கேதரின்.


 
 
கதகளி படத்தின் வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 
நான் நடித்த மெட்ராஸ் படத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமான படம் இது. அனைவருக்கும் பிடித்தமான விஷயங்கள் நிறைந்த படம். படம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
 
சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ளதாக நினைக்கிறீர்களா?
 
சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று ஒரேயடியாக கூறிவிட முடியாது. பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வர ஆரம்பித்துள்ளன. இதற்கு உதாரணமாக மாயா படத்தை கூறலாம். ஆண்களுக்கு இணையாக பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. சினிமாவிலும் அது வரவேண்டும் என்று விரும்புகிறேன்.
 
நடிகைகளின் விலங்கு பாசம் பிரசித்தம். நீங்க எப்படி?
 
மிருகங்கள் மீது அன்பு செலுத்துவதில் நான் ஆர்வமாக இருக்கிறேன்.
 
தமிழகத்தில் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் என்ன?
 
தமிழ் மக்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்கள். அன்பானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருக்கிறார்கள். சென்னை எனக்கு பிடித்து இருக்கிறது. சென்னையில் வசிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
 
எப்போது தமிழில் டப்பிங் பேசப் போகிறீர்கள்?
 
எனக்கு தமிழ் கொஞ்சம் தெரியும். மெட்ராஸ் படத்தில் எனக்கு இரவல் குரல் தான் என்றாலும் என் உதட்டு அசைவுகள் வசனங்களுக்கு பொருத்தமாக இருந்ததாக எல்லோரும் பாராட்டினார்கள். தமிழ் அழகான மொழி. அதை பேசுவதற்காக பெருமைப்படுகிறேன். விரைவில் நானே என்னுடைய படங்களுக்கு டப்பிங் பேசுவேன்.
 
எதிர்காலத்தில் தமிழ் இளைஞரை திருமணம் செய்து கொள்வீர்களா?
 
என் மனதுக்கு பிடித்து விரும்பத்தக்கவராக இருந்தால் நிச்சயமாக ஒரு தமிழ் இளைஞரை திருமணம் செய்து கொள்வேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்