நான் மக்களை மகிழ்விக்கிற பக்கா கமர்ஷியல் இயக்குனர் இயக்குனர் ஹரி பேட்டி

சனி, 10 டிசம்பர் 2016 (14:17 IST)
படத்தையே ட்ரெய்லர் மாதிரி வேகமாக எடுப்பவர் ஹரி. அவரது எஸ் 3 படத்தின் ட்ரெய்லர் பார்த்து மூர்ச்சையாகி கிடக்குது சமூகம். அந்தளவு பார்ஸ்ட் பார்வர்டில் பார்ப்பது போல் அப்படியொரு வேகம். படம் குறித்து ஹரி சொன்னவை உங்களுக்காக...

 
சிங்கம் 3 - அதாவது எஸ் 3 க்கு ஏன் இவ்வளவு தாமதம்?
 
சிங்கம் 2 முடிந்த பிறகு நானும், சூர்யா சாரும் ஆளுக்கு இரண்டு படம் முடித்த பிறகு சிங்கம் 3 தொடங்கலாம் என்று இருந்தோம். அதற்குள் ரசிகர்களே சிங்கம் 3 போஸ்டர் டிசைனை வரைந்து தள்ளிவிட்டார்கள். ரசிகர்களே இவ்வளவு ஆர்வமாக இருக்கும் போது தள்ளிப் போட வேண்டாமே என்று தொடங்கிவிட்டோம்.
 
படத்தின் கதை...?
 
படத்தை தொடங்கலாம் என்று யோசித்த போது கதை கிடைக்கவில்லை. பிறகு தமிழ்நாடு போலீசும், ஆந்திரா போலீசும் இணைந்து பல வருடங்களுக்கு முன்பு நடத்திய ஆபரேஷன் ஒன்றை படிக்க நேர்ந்தது. அதை வைத்து ஒன் லைன் கிடைத்தது.
 
பிறகு...?
 
அசிஸ்டெண்ட்களுடன் வெளிநாடு சென்று கதைவிவாதம் நடத்தி ஸ்கிரிப்டை முழுமை செய்தோம். எஸ் 3 க்கான கதை தயாரானது.
 
கதை பற்றி கொஞ்சம் விவரமாக சொல்ல முடியுமா?
 
சிங்கத்தில் துரைசிங்கம் உள்ளூர் பிரச்சனையை டீல் பண்ணினார். சிங்கம் 2 படத்தில் கொஞ்சம் நகர்ந்து கடற்கரையோரம் உள்ள பிரச்சனையை தீர்த்தார். இதில் கடலைத் தாண்டிச் சென்று சில பிரச்சனைகளை டீல் செய்கிறார்.
 
இதுதவிர இந்தப் படத்தில் என்ன வித்தியாசம்?
 
முதலில் சுமோக்கள் பறந்தது, இரண்டாவது படகுகள் பறந்தன, இதில் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் பறக்கின்றன.
 
படத்தின் கதைக்களம்?
 
திருநெல்வேலியில் ஆரம்பிக்கிற கதை ஆந்திரா, மலேசியா, ருமேனியா, ஜார்ஜியா என்று சுற்றி கடைசியில் ஆஸ்ட்ரேலியாவில் முடியும்.
 
அனுஷ்கா...?
 
அனுஷ்கா சூர்யாவின் ஜோடி என்பதால் அடுத்த பாகம் எடுத்தாலும் அதிலும் அனுஷ்கா இருப்பார்.
 
ஸ்ருதி...?
 
ரொம்பவும் சேட்டைக்கார பெண்ணாக அவர் இதில் வருகிறார். சூரியுடன் சேர்ந்து காமெடியும் செய்திருக்கிறார்.
 
வில்லன்...?
 
வில்லன் கதாபாத்திரம் பவர்புல்லானது. இந்தி நடிகர் தாகூர் அனுப் சிங்கை தேடிப்பிடித்து வில்லனாக்கியிருக்கிறோம். இவர் உலக ஆணழகன் பட்டம் வென்றவர்.
 
கமர்ஷியல் படங்களே எடுக்கிறீர்களே, அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்கவில்லையா?
 
எனக்கு சினிமாவில் தத்துவம் சொல்லவோ, யதார்த்தமான படங்கள் எடுக்கவோ தெரியாது. நான் மக்களை மகிழ்விக்கிற பக்கா கமர்ஷியல் இயக்குனர். என் படத்துக்கு வந்தால் இரண்டரை மணி நேரம் உலகத்தை மறந்து ரசிக்கணும். இந்தப் படமும் அதை நிச்சயம் செய்யும்.

வெப்துனியாவைப் படிக்கவும்