பிறந்த நாளன்று கதறி அழுதேன் - கமல்ஹாசன் ஓபன் டாக்

செவ்வாய், 8 நவம்பர் 2016 (16:48 IST)
கவுதமியின் பிரிவு மற்றும் வீட்டு மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து, கால் வலியால் அவதிப்பட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் கடந்து போன தனது பிறந்த நாட்களை பற்றி மனம் திறந்துள்ளார்.


 

 
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்துவிட்டாலும், இன்னும் ஓய்வில்தான் இருக்கிறார் கமல்ஹாசன். சரியாக நடக்க முடியாத நிலையில்தான் இருக்கிறார். மேலும், கடந்த 13 வருடங்களாக உடன் இருந்த நடிகை கவுதமி சமீபத்தில் அவரை விட்டு பிரிவதாக அறிவித்தார்.  
 
கமல்ஹாசனின் 62வது பிறந்தநாள் கடந்த 7ம் தேதி வந்தது. ஆனால், அதை அவர் கொண்டாடவில்லை. இந்நிலையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அவர் சமீபத்தில் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:
 
ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட விபத்தால் என் காலில் இன்னும் வலி இருக்கிறது. அந்த வலியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே பிறந்த நாளை கொண்டாட முடியவில்லை. 
 
ஒவ்வொரு வருடமும், என் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு யாரையும் நான் அழைக்கவில்லை.  உடலில் ஏற்பட்ட வலி தாங்கிக் கொண்டேன். ஆனால் மனதில் ஏற்பட்ட வலிகளை பற்றி மக்களிடம் நான் பகிரிந்து கொள்ள விரும்பவில்லை.
 
வலி ஒன்றும் எனக்கு புதிதல்ல.. வாழ்நாள் முழுவதும் வலிகளை கடந்தே வந்திருக்கிறேன். ஆனால், இந்த பிறந்த நாளன்று யாரையும் சந்திக்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. ஆனால், இதுதான் எனக்கு மோசமான பிறந்த நாளா என்றால் இல்லை...
 
எனது 16வது பிறந்த நாளன்று எனது தந்தை என்னை அழைத்து கண்டபடி திட்டினார். ஏனெனில் அப்போது என்ன செய்வது என்று முடிவெடுக்காமல் இருந்தேன். இலக்கு இல்லாமல் இருந்தேன். எனவே, அவர் திட்டியதும், ஒரு அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டு கதறி அழுதேன். எனக்கு தெரிந்து அதுதான் எனக்கு மோசமான பிறந்த நாள். 
 
தற்போது, நடக்க முடியாமல் படுத்திருப்பது கவலையாக இருக்கிறது. நான் முடிக்க வேண்டிய படம் எனக்காக காத்திருக்கிறது. வேலை இருக்கிறது. ஆனால் நான் விட்டில் வலியோடு போராடிக் கொண்டிருக்கிறேன். இது எனக்கு பிடிக்கவில்லை. நான் விரும்புவதெல்லாம் வேலை மற்றும் வீடு திரும்ப எனக்காக ஒருவர் காத்திருப்பது” 
 
என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்