எனக்கு கணவராக வருகிறவர் எப்படி இருக்க வேண்டும்? - அஞ்சலி அதிரடி பேட்டி

திங்கள், 13 பிப்ரவரி 2017 (13:11 IST)
என் மனதுக்குப் பிடித்தவரை சந்தித்துவிட்டேன், ஆனால், அவரை திருமணம் செய்யும் மனநிலைக்கு இன்னும் நான்  வரவில்லை என ஹைதராபாத்தில் பேட்டியளித்தார் அஞ்சலி. அவரது பேட்டியின் முழு வடிவம் தமிழில்...

 
இவ்வளவுநாள் சினிமாவில் தாக்குப் பிடிப்போம் என்று நினைத்தீர்களா?
 
சினிமாவில் அறிமுகமானபோது இவ்வளவு நாட்கள் எனது மார்க்கெட் நிலைத்து இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டமும் கடின உழைப்பும் எனக்கு வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுத்தருகிறது.
 
சினிமா தவிர்த்து வேறு தொழில்களில் ஈடுபடும் எண்ணமுண்டா?
 
இதுவரை இல்லை. அதேநேரம், எனது படங்கள் தோல்வி அடையும்போது வியாபாரத்தில் முதலீடு செய்வேன்.
 
உங்களுக்கு ஒருவர் கார் பரிசாக தந்ததாக செய்தி வெளிவந்ததே?
 
நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய காரை பரிசாக வாங்கினேன் என்று பேசுவது அபத்தம். கார் வாங்க கூட வசதி  இல்லாமலா இருக்கிறேன். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் படத்தில் ஒரு பாடலுக்கு 48 மணிநேரம் இரவு பகலாக கஷ்டப்பட்டு  நடனம் ஆடினேன். சித்ராங்கதம் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் கடும் குளிரில் நடந்தபோது அதிலும் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன். இப்படி ஒவ்வொரு படத்திலும் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் இருந்துதான் கார் வாங்கி  இருக்கிறேன். அதை பரிசு என்று பேசுவது வேதனையாக இருக்கிறது.
 
உங்களுக்கு இருந்த குடும்பப் பிரச்சனைகள் தீர்ந்துவிட்டனவா?
 
எந்த வீட்டில் பிரச்சினை இல்லை? சின்னச்சின்ன சண்டை, கருத்து மோதல்கள் எல்லா குடும்பத்திலுமே இருக்கிறது. ஆனால்  அவை நிரந்தரம் இல்லை. நடந்ததை நினைத்து வருத்தப்படாமல் வாழ்க்கையை நகர்த்துவதில்தான் சந்தோஷம் இருக்கிறது.  நான் இப்போது பழைய விஷயங்களை மறந்து விட்டு உற்சாகமாக இருக்கிறேன்.
 
உங்கள் திருமணம் எப்போது?
 
அதுபற்றி இன்னும் சிந்திக்கவில்லை. நேரம் வரும்போது நடக்கும்.
 
உங்கள் மனதுக்கு பிடித்தவர் எப்படி இருக்க வேண்டும்?
 
எனக்கு கணவராக வருகிறவருக்கு நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். கௌரவமானவராகவும், நாகரிகமானவராகவும்,  அழகானவராகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட என்னை வாழ்க்கை முழுவதும் ராணி மாதிரி வைத்துக்கொள்பவராக இருக்க வேண்டும்.
 
இவை அனைத்தும் கொண்டவரை சந்தித்துவிட்டீர்களா?
 
சந்தித்து விட்டேன். ஆனால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு இன்னும் வரவில்லை. பொறுத்திருந்து  பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்