சந்தோஷத்துக்காகவே சமூகப் பணிகளை செய்கிறேன் - நடிகை சமந்தா பேட்டி
சனி, 6 ஆகஸ்ட் 2016 (12:08 IST)
நடிகை சமந்தா, பிரதியுஷா என்ற சமூக சேவை அமைப்பை தொடங்கி அதனை சிறப்புற நடத்தி வருகிறார்.
இளம் நடிகை ஒருவர், பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டே இப்படியொரு அமைப்பை தொடங்குவதும், அதனை தன்னலம் கருதாதவகையில் வெற்றிகரமாக நடத்துவதும் சாதாரணமான விஷயமல்ல. அதற்குப் பின்னால் சமந்தாவை இயக்கும் சக்தி எது? சமந்தாவே அதற்கு பதிலளிக்கிறார்.
சமூக சேவையில் ஈடுபடும் எண்ணம் எப்படி வந்தது?
எனக்கு சமூக சேவைகளில் ஈடுபாடு அதிகம். சிறுவயதில் இருந்தே மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் என்னிடம் இருக்கிறது. இப்போது சினிமாவில் நிறைய சம்பாதிக்கிறேன். அதனால், தாராளமாக உதவ முடிகிறது.
இப்படியொரு உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் என்று நினைத்தீர்களா?
இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. புத்திசாலித்தனமோ திறமையோ எனக்கு பணத்தை சம்பாதித்து கொடுக்கவில்லை.
பிறகு...?
என்னைவிட திறமையானவர்கள் பலர் இருக்கிறார்கள். அதிர்ஷ்டம்தான் என்னை உயர்த்தி இருக்கிறது.
பிரதியுஷா சமூக சேவை அமைப்பை தொடங்க என்ன காரணம்?
இந்த நிலைக்கு என்னை உயர்த்திய சமூகத்துக்கு பிரதிபலனாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது அதற்காகத்தான் பிரதியுஷா என்ற சமூக சேவை அமைப்பை தொடங்கி இருக்கிறேன். இதன் மூலம் ஏழைகளுக்கு உதவிகள் வழங்குகிறேன். கல்விக்கும் உதவுகிறேன்.
சமூக சேவை விஷயத்தில் உங்கள் கொள்கை என்ன?
ஒவ்வொருவரும் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு உதவுவதற்காக ஒதுக்க வேண்டும்.
மனரீதியாக இந்த சமூக சேவை உங்களுக்கு உதவுகிறதா?
அதைத்தான் சொல்ல வந்தேன். நான் நடிகையாக இருக்கிறேன். எனது நடிப்பை பலர் பாராட்டுகிறார்கள். அது கொஞ்ச நேரம் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கும். ஆனால் மற்றவர்களுக்காக உதவுவது, ஏழைகள் நலனுக்காக பாடுபடுவது, அவர்களுக்காக பணத்தை செலவிடுவது போன்றவற்றில் கிடைக்கும் சந்தோஷம் வாழ்நாள் முழுவதும் நம்முடனேயே இருக்கும். அந்த சந்தோஷத்துக்காகத்தான் சமூக சேவை பணிகளை என் வாழ்க்கையின் ஒரு பங்காக மாற்றி இருக்கிறேன்.”