தனுஷின் மனைவி நான் - அமலா பால் பேட்டி

வியாழன், 29 டிசம்பர் 2016 (11:38 IST)
விவாகரத்து முடிவுக்குப் பிறகு அமலா பாலின் பேச்சில், நடத்தையில் கூடுதல் தன்னம்பிக்கையை பார்க்க முடிகிறது.  அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் கலாச்சார வாட்ச்மேன்களால் விமர்சனத்துக்குள்ளாவதும்  நடக்கிறது. அமலா பால் எது குறித்தும் திறந்த மனதுடன் பேசும் மனநிலையில் இருக்கிறார்.

 
கிறிஸ்மஸை எங்கு கொண்டாடினீர்கள்?
 
போர்ட் கொச்சி. அது அருமையான இடம். எங்கள் வீட்டில் நான்கு நாய்கள் இருக்கின்றன. அவற்றுடன்தான் பெரும்பாலும்  நேரத்தை செலவிட்டேன். அப்பா அவற்றை மோளு (மகளே) என்றுதான் அழைப்பார். என்னைகூட அப்படி அழைக்க மாட்டார்.
 
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் என்ன?
 
எனக்குப் பிடித்த ப்ளம் கேக்கை அம்மாவிடம் செய்யச் சொல்லி சாப்பிட்டேன். இப்போது நான் அதிகம் வெஜிடரியனாகி  வருகிறேன்.
 
அதிக படங்களில் நடிக்கிறீர்களே...?
 
கை நிறைய படங்கள் இருப்பது எனக்குத் தெரியும். படப்பிடிப்பு அரங்கில் இருக்கும் போதுதான் நான் அதிக மகிழ்ச்சியாக  இருக்கிறேன். படப்பிடிப்புதளத்தில் வீட்டில் இருப்பது போலவே உணர்கிறேன்.
 
திருட்டு பயலே 2 படத்திலும் நடிக்கிறீர்கள்...?
 
திருட்டு பயலே 2 படத்தில் எனக்கு பவர்ஃபுல்லான வேடம். எனக்கு மட்டுமில்லை பாபி சிம்ஹா, பிரசன்னா, நான் மூன்று  பேருக்குமே முக்கியமான வேடங்கள்தான்.
 
வேலையில்லா பட்டதாரி 2 படம் குறித்து சொல்லுங்க...?
 
முதல்பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் வருகிறது. இதில் நான் தனுஷின் மனைவியாக நடிக்கிறேன்.
 
பிற படங்கள்...?
 
விஷ்ணுவுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். அப்புறம் வெற்றிமாறனின் வடசென்னை. கன்னடத்தில் முதல்முறையாக ஒரு  படத்தில் நடிக்கிறேன். இவை தவிர மலையாளத்தில் அச்சாயன்ஸ் என்ற படம். இந்தி குயின் படத்தின் மலையாள ரீமேக்கிலும்  நடிக்கிறேன். அது அடுத்த வருடம் தொடங்க உள்ளது.
 
இப்போதெல்லாம் நடிகைகள் பாடுகிறார்களே...?
 
ஆமாம். நானும் மலையாளப் படமொன்றில் பாடப் போகிறேன். நான் பாடுவேனா என்று சுசி கணேசன் சாரும் கேட்டிருக்கிறார்.
 
அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறீர்களே?
 
நான் என்னுடைய பெர்சனாலிட்டியை பிரதிபலிக்கிற உடைகள் அணிகிறேன். அது என்னுடைய உடலமைப்புக்கும் பொருத்தமாக  இருக்கிறது. சிலநேரம் மக்கள் எந்த காரணமும் இல்லாமல் உங்களை விமர்சிப்பார்கள். இது சினிமா இன்டஸ்ட்ரியில் இருப்பவர்களுக்கு சகஜம்தான். இந்த மலிவான விமர்சனங்களுக்கு என்னுடைய எனர்ஜியை நான் வீணாக்க விரும்புவதில்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்