என்னுடைய தாய், தந்தையுடன் ஒப்பிடாதீர்கள் - அக்ஷரா ஹாசன் பேட்டி

செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (08:48 IST)
முதல் படம் ஷமிதாப் இன்னும் வெளியாகவில்லை. உடன் நடித்த அமிதாப் அக்ஷராவை பிறவி நடிகை என்கிறார். அவரை இயக்கிய பால்கி, அக்ஷராவுக்கு எதுவும் சொல்லித்தர தேவையில்லை, வயதுக்கு மீறிய திறமையுடன் இருப்பதாக கூறுகிறார். நடிப்பு அவரது ஜீனிலேயே இருப்பதாக கண்டுபிடித்துள்ளார் தனுஷ்.
ஷமிதாப்பின் புரமோஷனுக்காக சென்னை மும்பை டெல்லி என்று பறந்து கொண்டிருக்கும் அக்ஷராவிடம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் உங்களுக்காக.
 
நடிக்க வருவோம் என்று எதிர்பார்த்தீர்களா?
 
இல்லை. இயக்குனராக வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருந்தது. உதவி இயக்குனராகதான் இருந்தேன். நடிக்க வந்தது எதிர்பாராமல் நடந்தது.
 
பலர் நடிக்க அழைத்தும் சம்மதிக்காத நீங்கள் ஷமிதாப்பில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்?
 
ஷமிதாப்புக்கு முன்பும் பலர் என்னை நடிக்க அழைத்தார்கள். அப்போது நான் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்ததால் நடிக்கவில்லை. நடிப்பதற்கு நான் அப்போது தயாராக இல்லை. அதனால் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். அவர்களும் என்னை புரிந்து கொண்டு என்னை வற்புறுத்தாமல் சரி என்றனர்.

ஷமிதாப்...?
 
ஷமிதாப் படத்தில் நடிக்க அழைப்பதற்கு முன்புதான், இனி நடிக்கலாம் என்ற தீர்மானத்துக்கு வந்தேன். அதனால் பால்கி கதை சொன்னதும் சம்மதித்தேன்.
முதல் படத்திலேயே அமிதாப்புடன் நடித்திருக்கிறீர்கள்...?
 
ரொம்ப த்ரில்லங்காக இருந்தது. ஷமிதாப்பில் கமிட்டான போது முதல் படத்திலேயே அமிதாப்புடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.
 
கிளாமராக நடிப்பீர்களா?
 
கிளாமராக நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. கதாபாத்திரத்துக்கு தேவைப்பட்டால் கிளாமராக நடிக்கலாம். இப்படிதான் நடிப்பேன் என்றெல்லாம் வரையறை வைத்துக் கொண்டால் நமக்கான வாய்ப்புகளை இழந்து விடுவோம்.
 
கமல் - சரிகா என்ற நட்சத்திர தம்பதியின் மகள் நீங்கள். எதிர்பார்ப்பு அதிகம் இருக்குமே?
 
நடிப்பில் எனது பெற்றேnர் கமல்ஹாசன், சரிகா அரிய சாதனைகள் பல நிகழ்த்தியவர்கள். அவர்களுக்கு முன் நான் ஒன்றுமேயில்லை. அவர்களின் நடிப்பையும் என்னுடைய நடிப்பையும் ஒப்பிடுவது தேவையில்லாத ஒன்று. அவர்களின் சாதனைகளில் சிறிதளவாவது என்னால் செய்ய முடியுமா என்பதே சந்தேகம். இப்போதைக்கு அவர்கள் இருவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

வெப்துனியாவைப் படிக்கவும்