நான் சின்ன படங்கள் பெரிய படங்கள்னு பார்க்கிறதில்லை - நடிகர் சண்முகராஜன் பேட்டி

சனி, 6 டிசம்பர் 2014 (10:59 IST)
விருமாண்டி படத்தில் இயல்பான நடிப்பை தந்தவர்களை வரிசைப்படுத்தினால் அந்த வரிசை பேய்க்காமனாக நடித்த சண்முகராஜனிடமிருந்துதான் தொடங்கும். அறிமுகப் படத்தில் அற்புதமான நடிப்பை தந்த அவரை அதன் பிறகு தமிழ் சினிமா, சென்டிமெண்ட் சித்தப்பா வேடம் தந்தே சீரழித்தது. சவரிக்காடு படத்தில் மீண்டும் தனது மிடுக்கான நடிப்புக்கு அவர் திரும்பியிருப்பதாக பேச்சு. 
 
மிகக் குறைவான படங்களில்தானே நடிக்கிறீர்கள்? பெரிய படங்களில் மட்டுமே நடிப்பது என்று ஏதேனும் முடிவா?
 
விருமாண்டி வந்து பத்து வருஷம் ஆயிடுச்சி. அதற்கு பிறகு அறுபதுக்கு மேற்பட்ட படங்கள் பண்ணிருக்கேன். நான் பெரிய படங்கள் சின்னப் படங்கள் அப்படி பார்க்கிறதில்லை. 
 
இந்த பத்து வருடங்களில் என்ன மாற்றத்தை பார்க்கிறீங்க?
 
கடந்த பத்து வருடங்களை பார்க்கிறப்போ எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்னன்னா, பாக்யராஜ் சார் மணிவண்ணன் சார் அவங்க காலகட்டத்தை தாண்டி இப்போ வர்ற இயக்குனர்கள் ஒவ்வொருவரும் அவங்க கதையை எடுக்கிறாங்க, அவங்க வட்டார கதையை படமாக்குறாங்க. அவங்க வட்டாரத்துக்கு போய் போராடி அந்தக் கதையை படமாக்குறாங்க. 
 
அந்தப் படங்களின் வெற்றி கேள்விக்குறியாக இருக்கே...?
 
படங்களோட வெற்றி தோல்வி பற்றி பேசுவோம், அது பொருளாதாரம் சார்ந்தது. ஆனா இதேமாதிரி படங்களை உருவாக்கும் போது சில நல்ல அம்சங்கள், உதாரணமா சவரிக்காடு படத்தை எடுத்துகிட்டா, பழனி பக்கத்துல இருக்கிற சவரிக்காடுங்கிற அற்புதமான அடர்ந்த காடு இந்தப் படத்துல பதிவாகியிருக்கு. இதுபோன்ற அம்சங்கள்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதுபோன்ற தனித்துவமான தமிழ் மண்சார்ந்த பதிவுகளை சின்னப் படமாக இருக்கட்டும் பெரிய படமாக இருக்கட்டும் போகிற போக்குல பதிவு பண்ணுது. இது தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு போகுது. 
ஏதாவது உதாரணம்...?
 
மெட்ராஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரி வித்தியாசமான படைப்புகள் கடந்த மூணு நாலு வருஷமா வந்திட்டு இருக்கு. ஒரு நவீனமயமான மாற்றம் சினிமாவில் ஏற்பட்டிருக்கு. ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு விதமா முயற்சி பண்றாங்க. இதெல்லாம் நமக்கு சொத்து. 
 
இதை தமிழ் சினிமா தக்க வச்சுக்கிற மாதிரி இல்லையே?
 
தமிழ் சினிமாவில் இன்னசென்டான தயாரிப்பாளர்கள் வர்றாங்க. அதேமாதிரி சந்தர்ப்பவாதம் இல்லாத இயக்குனர்கள் வர்றாங்க. அவங்களை தக்க வச்சுக்கிற சிஸ்டம், அடுத்த தளத்துக்கு கொண்டு போறதுக்கான முயற்சி இன்னும் அதிகமாக்கப்பட வேண்டும். 
 
எப்படி...?
 
பாலா இப்போ மிஷ்கின், சற்குணத்துக்கு படம் தந்து படம் மூலமா சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு போறார். அதேமாதிரி தயாரிப்பாளர் சதீஷ்குமார் சார் நிறைய பண்றார். சிறந்த இயக்குனர்களை தக்க வச்சுக்கிற முயற்சி இதேபோல இன்னும் பரவலா செய்யப்படணும்.

வெப்துனியாவைப் படிக்கவும்