வைரமுத்துக்கு இன்னொரு தேசியவிருது நிச்சயம் - இயக்குனர் சாமி

வெள்ளி, 14 மார்ச் 2014 (14:23 IST)
உயிர், மிருகம், சிந்து சமவெளி போன்ற படங்களின் மூலம் தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்திக் கொண்டவர் சாமி. அவர் இயக்கும் அடுத்த படம்தான் கங்காரு. தான் இதுவரை இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது கங்காரு என்ற சாமி படம் குறித்து பேசியவை உங்களுக்காக.
FILE

கங்காரு என்று பெயர் வைக்க கதைதான் காரணமா?

கங்காரு எப்படி தன் குட்டியை மனசோடும் உடம்போடும், அது தானே இரை தேடும்வரை சுமந்து திரிகிறதோ அப்படி தன் தங்கையை சுமக்கும் ஒரு அண்ணனின் கதைதான் கங்காரு. அண்ணன் தங்கை பாசத்துக்கு இதுவரைக்கும் பாசமலர் படத்தைத்தான் உதாரணம் சொல்கிறார்கள். இனி கங்காருவை கூறுவார்கள். இது ஒரு நவீன பாசமலர்.
FILE

பாடகர் ஸ்ரீநிவாஸை இசையமைப்பாளராக்கியிருக்கிறீர்கள்?

இசையமைப்பாளர் புதிதாகத் தேடிய போது ஒரு நண்பர் மூலம் ஸ்ரீநிவாஸ் அறிமுகமானார். அவரை ஒப்பந்தம் செய்யும் முன்பே மெட்டு போட்டுக்காட்டி என்னைக் கவர்ந்தார். உடனே ஒப்பந்தம் செய்தோம். கதையை கேட்கும் முன் அவர் போட்ட பாடல்களைக் கேட்டுதான் தயாரிப்பாளர் இந்தப் படத்தை எடுக்க முன்வந்தார்.

வைரமுத்து முல்முறையாக உங்கள் படத்துக்கு பாடல்கள் எழுதியுள்ளாரே...?

எப்படிப்பட்ட படத்திலும் தன் முத்திரையைப் பதிப்பவர் வைரமுத்து. இப்படத்திலும் ஐந்து பாடல்களை பஞ்சரத்ன கீர்த்தனைகள் போல பிரமாதமாக எழுதியுள்ளார்.

FILE
காதல், பாசம், தத்துவம் என்று பலவித நிறங்களில் பாடல்கள்.

பேஞ்சாக்கா மழைத்துளியோ
மண்ணோடு - நான்
வாழ்ந்தாக்கா வாழுவது
ஒன்னோடு...

- இந்தப் பாடல் காலர் டியூனில் கலக்குகிறது.

கருவழியா வந்த எதுவும்
நிரந்தரமில்ல
கட்டையில போறவரையில்
சுதந்திரம் இல்ல
தாயும் கொஞ்ச காலம்
தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் - வந்த
உறவும் கொஞ்ச காலம்
நெனச்சு நெனச்சுப் பாத்தாக்கா
நீயும் கொஞ்ச காலம் - ஒன்
நெனப்பும் கொஞ்ச காலம்...

- இது படத்தில் வரும் தத்துவ முத்து.

ஒழக்கு நிலவே ஆராரோ
ஒனக்கு நானே தாயாரோ
அழுக்குத் தங்கமே ஆராரோ
எனக்கு நீதான் தாயாரோ
எட்டுவச்ச நெலவே கண்ணுறங்கு
கொட்டிவச்ச நட்சத்திரம் கண்ணுறங்கு...

- இது அண்ணன் தங்கையின் பாசப் பூங்கொத்து.

வைரமுத்துவை எப்படி ஒப்பந்தம் செய்தீர்கள்?
FILE

வைரமுத்து அவர்களை அணுக எனக்கு பயமாக இருந்தது. அவருக்கு சம்பளம் எப்படியோ என தயக்கம். ஸ்ரீநிவாஸ் மூலம்தான் அவரிடம் போனோம். எங்கள் பட்ஜெட் நிலையறிந்து எழுதிக் கொடுத்தார். தன் 5 பாடல்கள் மூலம் படத்துக்குப் பலம் சேர்த்துவிட்டார். படத்தின் மீதும் என்மீதும் அக்கறையுடன் ஆலோசனைகள் கூறி வளர்ச்சிக்கு உதவி வருகிறார். இப்படத்தின்மீது மிகவும் ஆர்வமாக இருக்கிறார். பாடல்கள் வெற்றி பெற்று விட்டன. அவருக்கு இன்னொரு தேசியவிருது நிச்சயம்.

படத்தில் நடித்திருப்பவர்கள்...?

FILE
இதில் நாயகனாக நடிக்கும் அர்ஜுனாவை நான் ஏற்கெனவே மிருகம் படத்துக்காக பார்த்திருந்தேன். ஆனால் ஆதியை நடிக்க வைத்தேன். இந்தக் கதைக்குப் பொருத்தமாகத் தோன்றியதால் அர்ஜுனாவை நடிக்க வைத்துள்ளேன். அதேபோல தங்கையாக வரும் ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஆர். சுந்தர்ராஜன் எல்லாரையுமே கதைக்காக தேர்வு செய்து நடிக்க வைத்தேன். நடிகர்களுக்காக நான் கதை செய்ய மாட்டேன்.

இது மலைப்பிரதேசத்தில் நடக்கும் கதையா?

படத்தின் பெரும்பகுதி கொடைக்கானலில் படமாக்கினோம். கொடைக்கானல் என்பது படத்தில் ஓர் ஊராக வரவில்லை. ஓர் உயிருள்ள பாத்திரமாக வருகிறது.
FILE

கேமரா சுழன்று 360டிகிரி கோணத்தில் கொடைக்கானல் முழுதும் தெரியும்படிதான் ஆரம்ப காட்சிகள் இருக்கும். இந்த மலைப்பகுதியின் பின்னணி படத்துக்கு புது நிறமும், தரமும் காட்டும். இதுவரை 45 நாட்கள் படமாகியுள்ளது. இன்னும் 12 நாட்களே மீதமுள்ளன. பழனியில் 2 நாட்களும் கொடைக்கானலில் 10 நாட்களும். அது முடிந்தால் மொத்த படமும் முடிந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்