தமிழில் பேசும் நம்பிக்கை வந்திருக்கிறது – சுனேனா

செவ்வாய், 20 ஜூலை 2010 (20:37 IST)
WD
வம்சம் படத்தின் பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பில் உணர்ச்சிமிகுதியில் கண்ணீர் விட்டார் சுனேனா. இதுவரை இப்படி கஷ்டப்பட்டு எந்தப் படத்திலும் அவர் நடித்ததில்லையாம். இதற்காகவா அழுகை? இல்லை, நாமா இப்படி நடித்திருக்கிறோம் என்ற ஆச்ச‌ரியத்தில் எழுந்த ஆனந்த கண்ணீர் அது. வம்சம் படத்தில் நடித்ததிலிருந்து புதுக்கோட்டை வாசியாகவே மாறியிருக்கும் அவருடனான உரையாடலிலிருந்து.

காதலில் விழுந்தேன் படத்துக்குப் பிறகு இப்போதுதானே உங்கள் பெயர் பரபரப்பாக அடிபடுகிறது, ஏனிந்த இடைவெளி?

இடைவெளியெல்லாம் இல்லை. முதல் படம் காதலில் விழுந்தேனுக்குப் பிறகு மாசிலாமணியில் நடித்தேன். அந்தப் படமும் எனக்கு பெயர் வாங்கித் தந்தது. பிறகு கதிர்வேல், திருத்தணி என்று இரண்டு படங்கள். பாடல் காட்சி முடிந்தால் அந்தப் படங்களும் வெளிவந்துவிடும். இடையில் வந்த யாதுமாகி மட்டும் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

மாடர்ன் பெண்ணாக நடித்து வந்த நீங்கள் முதல் முறையாக கிராமத்து பெண் வேடத்தில் நடித்திருக்கிறீர்கள். கிராமத்து‌ப் பெண் வேடம் உங்களுக்கு பொருந்தி வந்திருக்கிறதா?

அசல் கிராமத்து‌ப் பெண்ணாக வம்சத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை நான் நடித்தப் படங்களில் இந்தப் படத்தில்தான் எனக்கு சிறந்த கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. மலர்கொடி என்ற இந்த கதாபாத்திரத்தில் நான் ூறு சதவீதம் பொருந்தியிருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன்.

இந்த மாற்றத்துக்கு யார் காரணம்?

நிச்சயமாக இந்த வாய்ப்பை தந்த பாண்டிரா‌ஜ் சார்தான். புதுக்கோட்டை பக்கமுள்ள கிராமங்களில் வம்சம் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அந்த கிராமத்து மக்களின் பேச்சு வழக்கு வித்தியாசமாக இருக்கும். அவர்களைப் போலவே நான் பேசி நடித்திருக்கிறேன். இந்தப் படத்துக்குப் பிறகு என்னாலும் தமிழ் பேசி நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

படப்பிடிப்பில் இயக்குன‌ரிடம் திட்டு வாங்கினீர்களா?

ச‌ரியாக வசனம் பேசாததற்காக பல நேரம் இயக்குன‌ரிடம் திட்டு வாங்கியிருக்கிறேன். ஆனால் அந்தக் காட்சிகளை திரையில் பார்த்த போது, திட்டு எல்லாம் மறந்தேவிட்டது. அவ்வளவு சிறப்பாக காட்சிகள் வந்திருக்கிறது.

WD
புதுமுகம் அருள்நிதியுடன் நடித்தது பற்றி...?

நான் எப்போதும் ஹீரோ யார் என்று பார்ப்பதில்லை. கதை, இயக்குனர், தயா‌ரிப்பு நிறுவனம் இதை மட்டும்தான் பார்ப்பேன். அதனால் புதுமுகம் எல்லாம் எனக்கு பிரச்சனையாக இருந்ததில்லை. அருள்நிதியைப் பொறுத்தவரை பெ‌ரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் பந்தா இல்லாமல் பழகினார். ‌ிறப்பா நடிச்சிருக்கார்.

புதுக்கோட்டையின் கத்தி‌ி வெயிலில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

அருமை. கத்தி‌ி வெயிலில் காய்ந்து, கண்மாயில் குளித்து, வாய்க்கால் வரப்புகளில் ஓடி... நிச்சயமாக மறக்க முடியாத அனுபவம். இதற்கு தயா‌ரிப்பாளர் தமிழரசு சாருக்குதான் நன்றி சொல்லணும். அனைவரையும் அவர்தான் பத்திரமாக பார்த்துகிட்டார்.

கிளாமராக நடிப்பீர்களா?

இதுவரை அப்படி நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான விதத்தில்தான் இதுவரை நடித்திருக்கிறேன். ரசிகர்கள் விரும்பினால் கிளாமராக நடிக்கவும் தயங்க மாட்டேன்.

வம்சம் உங்களை அழ வைத்தது பற்றி...?

நான் சிறப்பாக நடித்திருப்பதாக பாண்டிரா‌ஜ் சார் சொன்னார். படத்தை பார்த்தால் சுனேனா அழுதது ச‌ரிதான் என்று நீங்களும் சொல்வீர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்