வித்யா வழக்கு - சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

திங்கள், 1 ஜூன் 2015 (14:14 IST)
புங்குடுதீவு மாணவி வித்யாவின் வன்புணர்வு கொலைச் சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் வரும் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.


 
இந்தச் சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஊர்காவற்றுறை நீதவான் லெனின்குமார் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட மாணவி வித்யாவின் குடும்பத்தினருடைய சார்பில் சட்டத்தரணி தவராசா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
 
சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்தக் கொலைச் சம்பவத்தின் தடயப் பொருட்கள் அனைத்தையும் இந்த வழக்கு விசாரணையைப் பொறுப்பேற்றுள்ள புலனாய்வு காவல்துறையினரிடம் கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
யாழ்ப்பாணம் நீதிமன்ற தாக்குதல் விவகாரம்
 
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீது கற்கள் எறிந்து தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்தமைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 130 பேரில் ஒரு தொகுதியாகிய 47 பேர் யாழ்ப்பாணம் நீதவான் பி.சிவகுமார் முன்னிலையில் காவல்துறையினர் திங்களன்று ஆஜர் செய்திருந்தனர்.
 
இந்த சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
 
இவர்களில் 16 வயதுக்கு உட்பட்ட 2 மாணவர்களை 3 லட்சம் ரூபா மற்றும் ஆட்பிணையில் செல்ல அனுமதித்துள்ள நீதிமன்றம் ஏனைய 45 பேரையும் வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
 
அதேவேளை, இவர்களில் 16 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 7 பேர் தொடர்பில் அவர்கள் மாணவர்கள்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான, பாடசாலை அதிபர்களின் சத்தியக்கடதாசியுடன் விண்ணப்பித்தால், பிணை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்