இலங்கை நாடாளுமன்றத்தேர்தல்: ஜூலை ஆறாம் தேதி வேட்புமனு தாக்கல் துவக்கம்

சனி, 27 ஜூன் 2015 (17:10 IST)
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகள் ஜூலை மாதம் ஆறாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை ஜனாதிபதியால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்ரிய தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தேர்தல் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ளதுடன் புதிய நாடாளுமன்றம் செப்டம்பர் மாதம் முதல் தேதி கூடவுள்ளது.

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை 2014 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலுக்கு அமைய நடத்தப்படுமென்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிப்போரின் விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 3ஆம் தேதி முதல் 14 ஆம் தேதிவரை ஏற்றுக்கொள்ளப்படுமென்றும் அவர் கூறினார்.

ஜூலை ஆறாம் தேதி முதல் அரசாங்க மற்றும் காவல் சேவையில் மேற்கொள்ளப்படும் சகல இடமாற்றங்களும் நிறுத்தப்படுமென்று கூறிய தேர்தல்கள் ஆணையாளர், உயர்தரப்பரீட்சை நடைபெறுகின்ற காரணத்தினால் வாக்களிப்பு நிலையங்களாக பாடசாலைகளை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வதற்கு கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறிவித்தார்.

தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் ஒரு வாரத்துக்குள் தமக்கு அதனை அறிவிக்கவேண்டுமென்றும் தனியாக போட்டியிடுவதா இல்லாவிட்டால் கூட்டமைப்பாக போட்டியிடுவதா என்பதை அரசியல் கட்சிகள் தனக்கு அறிவிப்பது அவசியமென்றும் தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரசவளங்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று கூறிய தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷபிரிய, இதனை மேற்கொள்ளும்போது அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பயன்படுத்தப்படுமென்றும் அறிவித்தார்.

இதேவேளை நியாயமான தேர்தலொன்றை நடத்துவதற்கு சகலநடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்று காவல்துறையின் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வேட்பு மனு தாக்கல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தேர்தல்கள் ஆணையாளரின் ஆலோசனைக்கு அமைய தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென்று கூறிய ருவன் குணசேகர பாரபட்சமின்றி தேர்தல் சட்டங்களை அமல் படுத்த காவல்துறை எல்லா நடவடிக்கைகளையும் எடுக்குமென்றும் கூறினார்.

எதிவரும் தேர்தலின்போது ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தமது கடைகளின் போட்டியிட வாய்ப்பளிக்கவேண்டாம் என்று தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் கஃபே அமைப்பு அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கஃபே அமைப்பின் பணிப்பாளர் ரஜித் கிர்த்தி தென்னகோன் இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது உழல் மற்றும் கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நபர்கள் தற்போது அரசியலில் ஈடுபட்டுவருவதாக கூறிய ரஜித் தென்னகோன் இதன்மூலம் அரசியல் சம்பந்தமாக மக்களுக்குள் பாரிய வெறுப்பு எற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்கும் விதத்தில், அதற்கான தகுதிவாய்ந்த நபர்களை அரசியல் கட்சிகள் தம் வேட்பாளர்களாக தேர்தலில் நிறுத்துமாறு இலங்கயின் அரசியல் கட்சிகளிடம் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்