இரண்டாண்டுகளில் இரணைமடு குடிநீர் திட்டம்: அமைச்சர் அறிவிப்பு

செவ்வாய், 23 ஜூன் 2015 (11:43 IST)
இரணைமடு குடுநீர் விநியோகத் திட்டத்தை இரண்டு ஆண்டு இரண்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தரவிட்டிருப்பதாக நீர் வழங்கல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.

இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

இரணைமடு குடிநீர்த் திட்டத்தை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் மழை நீர் சேகரிப்பு வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா வைபவத்தில் கலந்து கொண்டு பேசிய ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிகழ்வில் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் விநியோகம் செய்வதற்கான திட்டம் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் கொண்டு வரப்பட்டு யுத்தச் சூழல் உட்பட பல காரணங்களினால் தாமதமடைந்திருந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், விவசாயத் தேவைக்கே இந்தக் குளத்து நீர் போதாதிருப்பதைச் சுட்டிக்காட்டி, கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் புதிதாகப் பதவியேற்ற வடமாகாணசபை கடல் நீரைச் சுத்தம் செய்து குடிநீராக விநியோகம் செய்வதற்கான மாற்றுத் திட்டம் ஒன்றை முன்வைத்து அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில்தான் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் வழங்கும் திட்டம் இரண்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியிருக்கின்றார்.

கொள்ளளவு அதிகரிப்பு

எண்பதினாயிரம் ஏக்கர் கன அடி நீரைக் கொள்ளத்தக்க இரணைமடு குளத்தின் நீர் கொள்ளளவை மேலும் நாற்பதாயிரம் ஏக்கர் கன அடியாகக் கூட்டுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

அதேவேளை, கடல் நீரைச் சுத்திகரித்து குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாகவும், இதற்காக அடுத்த மாதம் துறைசார்ந்த நிபுணர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ள மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் தாங்கள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி விவசாயிகளின் அச்சத்தைப் போக்கி, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டபைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இருந்தபோதும், ரவூப் ஹக்கீமின் இந்த அறிவிப்பு தங்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக இரணைமடு விவசாயிகள் சங்க சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்திருக்கின்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்