காணாமல் போனோர் : 'முழுமையான விசாரணை, நடவடிக்கை தேவை'

வெள்ளி, 1 மே 2015 (15:43 IST)
இலங்கையில் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, முழுமையான விசாரணைகளை மட்டுமே நடத்தி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, ஜனாதிபதி ஆணைக்குழுவினரை வியாழனன்று கொழும்பில் சந்தித்துப் பேசிய வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரியிருக்கின்றனர்.


 
கொழும்பில் உள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான அமைப்பு உட்பட பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அந்த ஆணைக்குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தத்தக்க வகையில் செயற்பட வேண்டும், அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரியிருக்கின்றனர்.
 
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒருவராகிய காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களுடைய சார்பில் பணியாற்றி வருகின்ற அருட் தந்தை யோகேஸ்வரன் கருத்து வெளியிடுகையில், இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றவற்றை மாத்திரமே பதிவு செய்து வருகின்றார்கள். அவர்கள் தெரிவித்துள்ள விடயங்களில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணைகள் நடத்தவில்லை. அல்லது பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் காணாமல் போயிருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான மேல் நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் குழுவின் செயற்பாடுகள் அர்த்தமற்றவை என்று ஆணைக்குழுவின் தலைவரிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.
 
காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் பலர் ஆதாரங்களுடன் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விபரங்களையும் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அவற்றால் எந்தவித பயனும் ஏற்படவில்லை.
 
எனவே, புதிதாக அந்தக் குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளிலும் பார்க்க, காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் சுதந்திரமாகவும் நேரடியாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருப்பதாகவும் அருட்தந்தை யோகேஸ்வரன் கூறினார்.
 
அது மட்டுமல்லாமல் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துவதற்கு ஐநா சபையினர் முன்வந்துள்ள போதிலும் அந்த உதவியை இந்த ஆணைக்குழு பெற்றுக்கொள்ளவில்லை. அதனைச் சரியாகப் பயன்டுத்தத் தவறியுள்ளது. எனவே, சர்வதேச மட்டத்தில் நம்பகத்தன்மையுள்ள வகையில் விசாரணைகளை இந்தக்குழு தனித்துவமாக நடத்த வேண்டும். அதற்கான உதவிகளை ஐநா சபையிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாங்கள் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்தச் சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்வைத்த இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியே முடிவு செய்ய வேண்டும், என்றும், ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திற்குரிய நிவாரண உதவிகள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் ஆணைக்குழுவினருக்கு வேலைப்பளுவை அதிகரிக்கச் செய்திருப்பதாகவும், அவற்றைக் கைவிட்டு காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை அதிகார பலத்துடன் நடத்த வேண்டும் என அவர்கள் கோரியிருப்பதாகவும் தெரிவித்தார்.
 
எனினும் ஆதாரங்களுடன் கூடிய பல விடயங்கள் தொடர்பில் இதுவரையில் கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் மேல் விசாரணைகளை நடத்துவதற்கான விசாரணை குழுக்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ள, விசாரணைகளின்போது உரிய மொழிபெயர்ப்பு வசதிகளைச் செய்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.
 
சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் 16 ஆயிரம் பேர் வரையிலானவர்கள் தொடர்பாகவே முறைப்பாடுகள் அல்லது தகவல்கள் கிடைத்திருப்பதாக ஜனாதிபதி ஆணைக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்