வவுனியாவில் கடையடைப்பு - யாழ்ப்பாணம் வழமைக்கு திரும்புகிறது

வியாழன், 21 மே 2015 (17:52 IST)
புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக தண்டிக்கக்கோரி வவுனியாவில் இன்று கடையடைப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதேசமயம் இதே கோரிக்கைக்காக முழுமையான கடையடைப்பும் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் நிலவிய யாழ் நகரம் வியாழனன்று வழமைக்குத் திரும்பியுள்ளது.



யழ்ப்பாண நகரத்தில் கடைகள், அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன செயற்படுகின்றன. பதட்டம் நீங்கியுள்ள போதிலும், நீதிமன்ற வளாகப் பிரதேசத்தில் கலகம் அடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
நேற்று புதன்கிழமை நீதிமன்ற கட்டிடத்தின் மீது கல்லெறிந்து தாக்கிய சம்பவத்தையடுத்து காவல்துறையினரால் 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒரு இந்தியப் பிரஜையும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. உல்லாசப் பயணியாக வந்திருந்த இவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இவர்கள் அனைவரையும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்போவதாக காவல்துறையினர் அறிவித்திருந்ததையடுத்து, நூற்றுக்கணக்கில் அவர்களுடைய உறவினர்கள் நீதிமன்ற வளாகப் பிரதேசத்தில் காலையில் இருந்து கூடியிருக்கின்றனர்.
 
நண்பகல் நேரம் கைது செய்யப்பட்டவர்களில் முதல் தொகுதியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட 45 பேரை ஜூன் மாதம் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 
இதேபோன்று, ஆர்ப்பாட்டப் பேரணிகள் பணிப்புறக்கணிப்பு கடையடைப்பு என எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய நகரப்பகுதிகளிலும் இன்று நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளது.
 
வவுனியாவில் கடையடைப்பும் கைதும்
 
எனினும் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அழைப்பின் பேரில் வியாழனன்று வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் நகர வீதிகள் வெறிச்சோடியிருக்கின்றன. ஆயினும் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது. இன்றைய கடையடைப்பு குறித்து நேற்று புதன்கிழமை வர்தகர் சங்கத்தின் சார்பில் ஒலிபெருக்கிகளில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இப்டியானதொரு வேண்டுகோளை விடுப்பதற்கு காவல்துறையின் முன் அனுமதியைப்பெறவில்லை என்கிற குற்றச்சாட்டின் பேரில் வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் டி கே ராஜலிங்கம் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
 
மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாத காரணத்தினால் பாடசாலைகள் மாணவர்களின்றி வெறிச்சோடிக் கிடந்தன. அரச செயலகம், பிரதேச செயலகம், அஞ்சல் அலுவலகம், விவசாயக் கல்லூரி, இராசேந்திரன்குளம் ஆடைத்தொழிற்சாலை என்பவற்றின் எதிரில் அரச ஊழியர்கள், மாணவர்கள் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீதியோரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
அரச செயலகம் மற்றும் பிரதேச செயலக அரச ஊழியர்கள் அரச செயலகத்தில் இருந்து பிரதேச செயலகம் வரையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.
 
காவல் துறையினர் பெரும் எண்ணிக்கையில் குண்டாந்தடிகள் தடிகளுடன் காவல் கடமையில் நகர வீதிகளின் பல இடங்களிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வேடிக்கை பார்ப்பதற்காக ஆங்காங்கே வீதிகளில் கூடியிருந்தவர்களை காவல்துறையினர் கலைத்து துரத்தினர். சிலர் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 
திருநாவற்குளம், பூந்தோட்டம், வைரவப்புளியங்குளம், பண்டாரிகுளம் ஆகிய இடங்களில் வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டிருந்தன. திருநாவற்குளத்தில் டயர்கள் எரிக்கப்பட்டதை படமெடுத்த இரண்டு செய்தியாளர்களை காவல்துறையினர் தடுத்து வைத்து, காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்ற வாக்குமூலம் பதிவு செய்து கொண்டு விடுவித்தனர். இவர்களிடம் செய்தியாளர்களுக்குரிய அடையாள அட்டைகள் இல்லாத நிலையிலேயே அவர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாக காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
இவர்கள் பிடித்துச் செல்லப்பட்டதை அறிந்து காவல் நிலையத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், காவல்துறை பிடித்து வைத்திருப்பவர்கள் செய்தியாளர்கள் தான் என்பதை உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.
 
வவுனியா நீதிமன்றப் பகுதியிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
 
நகரின் பல இடங்களிலும் மாணவி வித்யாவின் மரணத்தைக் கண்டித்து கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அவருடைய உருப்படத்துடன் கூடிய பதாதைகளும் காணப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்