பாரீஸில் நடந்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் டென்னிஸ் உலகின் நிகரில்லா சாம்பியன் என்ற பெருமையை சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் பெற்றுள்ளார்.
இறுதிப்போட்டியில் ராபின் சோடர்லிங்கிற்கு எதிராக 3-0 என்ற நேர் செட்களில் வென்றதும், களிமண் தரையிலேயே மண்டியிட்டு ஒரு சில நொடிகள் மண்ணைப் பார்த்த பெடரர், மீண்டும் நிமிர்ந்த போது வெற்றிப் பெருக்கு அவரது கண்களில் நீராக வழிந்தோடியது.
கடந்த 1981 ஆகஸ்ட் 8ஆம் தேதி பிறந்த பெடரர், ஜூலை 1998இல் முதன் முறையாக சர்வதேச போட்டியில் களமிறங்கினார். தொடர்ந்து பல டென்னிஸ் தொடர்களில் பங்கேற்ற அவர், 1999இல் முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் (பிரெஞ்ச் ஓபன்) கால் பதித்தார். அப்போட்டியின் முதல் சுற்றிலேயே பேட்ரிக் ராஃப்டரிடம் தோல்வி அடைந்தாலும், அதே ரோலாண்ட் காரோஸில் அவர் வரலாற்றுச் சாதனைப் படைப்பார் என்று அன்றைய போட்டியைப் பார்த்தவர்கள் இம்மியளவும் யூகித்திருக்க மாட்டார்கள்.
அடுத்தடுத்து சர்வதேச, கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்ற பெடரர், முதன் முறையாக கடந்த 2003இல் விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன் பின்னர் இவரது டென்னிஸ் வாழ்க்கை தொடர்ந்து ஏறுமுகமாகச் சென்றது.
இதில் 2004ஆம் ஆண்டு அவரது டென்னிஸ் வாழ்க்கையில் பொற்காலமாக விளங்கியது என்று கூறினால் மிகையல்ல. ஒரு ஆண்டில் நடத்தப்படும் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடர்களில், பிரெஞ்ச் ஓபன் தவிர மீதமுள்ள 3 கிராண்ட்ஸ்லாம் (விம்பிள்டன், ஆஸ்ட்ரேலியா ஓபன், யு.எஸ் ஓபன்) பட்டங்களையும் கைப்பற்றி, டென்னிஸ் உலகில் தனது செங்கோல் ஆட்சியை உலகிற்கு ஆணித்தரமாக உணர்த்தினார். 2005ஆம் ஆண்டில் பெடரருக்கு சற்றே கடினமான காலமாக இருந்தது. இந்த ஆண்டில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் மட்டுமே பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் டென்னிஸ் உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படும் அமெரிக்காவின் ஆண்ட்ரே அகாஸியை 6-3, 2-6, 7-6 (7/1), 6-1 என்ற செட்கணக்கில் பெடரர் வென்றது அவரது திறமைக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்தது.
இதையடுத்து 2006, 2007ஆம் ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை தவிர, மற்ற 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் பெடரர் கைப்பற்றியதன் மூலம் உலகத் தரவரிசையில் நம்பர்-1 இடத்தில் நீண்ட காலம் நிலைத்த வீரர் (237 வாரங்கள்) என்ற சாதனையும் பெடரர் நிகழ்த்தினார்.
அதிலும் கடந்த 2007 ஆஸ்ட்ரேலிய ஓபன் தொடரில் ஒரு செட்டில் கூடத் தோல்வி அடையாமல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம், கடந்த 1980இல் ஸ்வீடன் வீரர் போர்ன் போர்க் புரிந்த சாதனையையும் ஃபெடரர் சமன் செய்தார்.
நடால் ரூபத்தில் விளையாடிய விதி: டென்னிஸ் உலகின் ஜாம்பவான்கள் பட்டியலில் நுழையும் தூரத்தை பெடரர் கடந்து கொண்டிருந்த சமயம், ஸ்பெயினில் இருந்து ரஃபேல் நடால் என்ற சூறாவளி டென்னிஸ் உலகை மையம் கொண்டது.
கடந்த 2004 முதல் ஃபெடரர்-நடால் இடையே மிகக் கடுமையான டென்னிஸ் போர் நடந்தது. இவர்கள் இருவரும் களத்தில் மோதிக் கொள்வது கிட்டத்தட்ட குருச்ஷேத்திரப் போர் போலவே இதுவரை இருந்து வந்துள்ளது. டென்னிஸ் ரசிகர்கள் அனைவரும் இந்த போருக்காக நீண்ட நாட்கள் காத்திருப்பதும் உண்டு. இந்திய பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால் கூட இவர்களின் ஆட்டத்தைப் பார்க்க சற்று நேரம் தனது பேட்மின்டன் மட்டைக்கு ஓய்வளிப்பார்.
களிமண் தரையில் நடக்கும் போட்டிகளில் தொடர்ந்து கோலோச்சி வந்த நடால், சமகால வீரரான ஃபெடரருக்கு கடும் சவாலாகவே இதுவரை விளங்கி வந்துள்ளார். கடந்த 2009 ஆஸ்ட்ரேலிய ஓபன் தொடரின் இறுதிப்போட்டியில் நடால்-ஃபெடரர் இடையிலான போட்டி டென்னிஸ் வரலாற்றிலேயே மிகவும் மதிக்கத்தக்க ஆட்டமாக உருப்பெற்றது.
அப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றால் சாம்ப்ராஸ் சாதனையை (14 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்து வரலாற்றுப் பெருமை பெறலாம் என ஃபெடரர் முனைப்புடன் விளையாடினார். மறுமுனையில் ரஃபேல் நடால் காளையின் சீற்றத்துடன் ஃபெடரரை எதிர்கொண்டு திணறடித்தார். 4 மணி நேரம் 23 நிமிடங்கள் நீடித்த இந்த மராத்தான் ஆட்டத்தில் 7-5, 3-6, 7-6(3), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.
போட்டி முடிந்தவுடன் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாத ஃபெடரர், பரிசளிப்பு விழாவில் பேசியபோது தனது கண்ணீர் மூலம் மனதில் உள்ள அனைத்து சோகத்தையும் ரசிகர்கள் முன் கொட்டித் தீர்த்தார். இதைக் கண்டு அருகில் நின்ற நடால், ரோஜர் ஃபெடரரை கட்டிப்பிடித்துத் தேற்றியதன் மூலம் போட்டியின் போது சிங்கமும், புலியைப் போல் விளையாடினாலும், களத்திற்கு வெளியே இருவரும் சிறந்த நண்பர்கள் என்பதைப் பறைசாற்றினார்.
இந்தத் தோல்வி அவரை மனதளவில் பாதித்தாலும், 2009 ஏப்ரல் 11ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான மிரோஸ்லாவா வாவ்ரெனிக்கை ஃபெடரர் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டார். ஒலிம்பிக்-2000 போட்டிகளின் போது மிரோஸ்லாவாவைச் சந்தித்து பெடரர் சுமார் 9 ஆண்டுகளாக காதலித்த பின்னர் அவரை மனைவியாக கைபிடித்தார்.
அதிர்ஷ்டமில்லாத பிரெஞ்ச் ஓபனில் வரலாற்றுச் சாதனை: சர்வதேச டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் ஒன்றாக கருதப்படும் பிரெஞ்ச் ஓபன் மட்டும் ரோஜர் ஃபெடரருக்கு கனவாகவே இருந்து வந்தது.
ஃபெடரர் முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கால்பதித்தது ரோலாண்ட் காரோஸில் என்றாலும், அங்கு அவரால் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை என்பது அவரது திறமைக்கு ஒரு சவாலாகவே கருதப்பட்டது.
நடப்பாண்டிக்கான பிரெஞ்ச் ஓபன் தொடரில் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய பெடரர், இறுதிப்போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தார். மற்றொருபுறம் பிரேஞ்ச் ஓபன் தொடரில் ஒருபோட்டியில் கூட தோல்வியடையாத நடால், தொடர்ந்து சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியை நோக்கி அதிரடியாக முன்னேறினார்.
மே 27ஆம் தேதி ரஷ்ய வீரர் கபாஷ்வில்லிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் ரோலாண்ட் காரோஸில் தொடர்ந்து 30 போட்டிகளை வென்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் நடால் படைத்தார். இதனால் ஃபெடரரின் பிரெஞ்ச் ஓபன் கனவு இன்னும் சிக்கலானதாகவே ரசிகர்களால் கருதப்பட்டது. மே 29ஆம் தேதி ஹெவிட்டிற்கு எதிரான போட்டியில் நடால் வென்றதன் மூலம் தனது வெற்றி நடையை 31ஆக உயர்த்திக் கொண்டார்.
ஆனால் மே 31ஆம் தேதி நடந்த 4வது சுற்றுப்போட்டியில் ஸ்வீடன் வீரர் ராபின் சோடர்லிங்குடன் நடந்த ஆட்டத்தில் நடால் அதிர்ச்சித் தோல்வியடைந்து பிரெஞ்ச் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் ஃபெடரரின் சாதனைக் கனவுக்கு புத்தொளி பிறந்தது.
புதிய வரலாறு பிறந்தது: ஜூன் 7ஆம் தேதி நடந்த பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டியில் வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் ரோஜர் ஃபெடரர் களமிறங்கினார்.
முதல் செட்டிலேயே அவரது அனல்பறக்கும் ஆட்டம் வெளிப்பட்டது. ஃபெடரரின் சர்வீஸ்களை சமாளிக்க முடியாமல் 6-1 என்ற புள்ளிக்கணக்கில் சோடர்லிங் சரணடைந்தார். இதன் மூலம் உளவியல் ரீதியான நெருக்குதல் சோடர்லிங்கிற்கு ஏற்பட்டது.
எனினும் 2வது செட் ஆட்டத்தில் சோடர்லிங் தனது சிறப்பாற்றலை நிரூபித்தார். மறுமுனையில் ஃபெடரரும் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். டை-பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டில் 7-6 (7-1) என்ற செட் கணக்கில் பெடரர் அதனைக் கைப்பற்றினார்.
வெற்றி பெற ஒரே ஒரு செட்டை மட்டுமே கைப்பற்ற வேண்டிய உணர்ச்சிமிகுந்த நிலையில் 3வது செட் ஆட்டத்தில் களமிறங்கிய ஃபெடரர் அதனை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வென்று டென்னிஸ் உலகின் உச்சாணிக் கொம்பிற்கு தன்னை உயர்த்திக் கொண்டார்.
பரிசளிப்பு விழாவின் போது அமெரிக்க வீரர் ஆண்ட்ரே அகாஸி பிரெஞ்ச் ஓபன் கோப்பையை வழங்க, ரசிகர்களின் உற்சாகக் கரவொலிக்கு இடையே கோப்பையை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து அருள் பாலித்தார் ஃபெடரர். ஆம்... அச்சமயத்தில் அங்கே அவரே கடவுள்.