இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு...3

வியாழன், 13 மார்ச் 2008 (16:56 IST)
இந்திய ஹாக்கிக் கூட்டமைப்பே முக்கிய காரணம்!

சர்வதேச போட்டிகளில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த இந்தியா, இன்று சர்வதேசப் போட்டிகளில் திணறிக் கொண்டிருப்பதற்கு காரணம், ஹாக்கியை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு ஈடுபடவில்லை என்பதை மறைவின்றி எடுத்துக்கூறும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு ஒரு கடிதத்தை இந்திய ஹாக்கி கூட்டமைப்பிற்கு நேற்று அனுப்பியுள்ளது.

webdunia photoFILE
சாண்டியாகோவில் நடந்த தகுதிப் போட்டிகளில் தோற்றதால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி இழந்துவிட்ட நிலையில், இந்திய ஹாக்கியை மேம்படுத்த தாங்கள் அளித்த ‘இந்திய ஹாக்கி மேம்பாட்டுத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவரான எல்ஸ் வான் பிரீடா விரீஸ்மேன் இந்திய ஹாக்கி கூட்டமைப்பிற்கு நெருக்குதல் தந்துள்ளார்.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தனது திட்டத்தை ஏற்கனவே அனுப்பி அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் புகழ்பெற்ற முன்னாள் ஹாக்கி வீரர் ரிக் சார்ஸ்வொர்த் ஈடுபடுவார் என்றும் தெரிவித்திருந்தது. இத்திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் வெளியில் இருந்து வந்த இத்திட்டத்தை ஏற்க இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தயக்கம் காட்டி வந்தது.

“ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெறத் தவறிவிட்ட நிலையில் தனது திட்டத்தை இதற்கு மேலும் தாமதப்படுத்தாமல் நிறைவேற்றுமாறு” இந்திய ஹாக்கி கூட்டமைப்பிற்கு நெருக்குதல் கொடுத்துள்ள சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு, “இத்திட்டத்தின் வெற்றியைப் பெறுத்தே 2010 ஆம் ஆண்டில் டெல்லியில் உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளது.

அதாவது எங்களது திட்டத்தை ஏற்கத் தவறினால், உலகக் கோப்பை போட்டிகளை நடத்தலாம் என்ற உங்கள் கனவு நிறைவேறாது என்று நேரடியாக கூறியுள்ளது சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு.

இந்திய ஹாக்கியின் நிலை எந்த அளவிற்கு கீழிறக்கப்பட்டுவிட்டது! இந்திய ஹாக்கியை மேம்படுத்த சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வரவேண்டும் என்ற நிலைக்கு நமது ஹாக்கியை கீழிறக்கிய அந்த புனிதப் பொறுப்பு இந்திய ஹாக்கி கூட்டமைப்பையே சேரும். எப்படிப்பட்ட பெருமை!

ஹாக்கி உலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்த நமக்கு, இன்று அந்த விளையாட்டை மேம்படுத்த அயல் நாட்டு வீரர் ஒருவரின் தலைமையிலான ஒரு திட்டம் செயல்படுத்தப்படக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்திய ஹாக்கியை அதன் உன்னத நிலையில் தக்கவைக்கத் தவறியதே இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் இயலாமைக்கு சரியான சான்றாகும்.

இந்தியா முழுவதும் ஏழைகள் விளையாட்டாகவே ஹாக்கி உள்ளதென்பது அனைவரும் அறிந்த உண்மை. கட்டாந்தரையில் வெறும் காலுடன் ஓடி ஆடிப் பழகியே பெரும் வீர்ரகளானவர்கள்தான் இந்திய ஹாக்கியை சிகரத்திற்குக் கொண்டு சென்ற வீரர்களாவர்.

webdunia photoFILE
வி.ஜே. பீட்டர், பிலிப்ஸ், பாஸ்கரன், கிருஷ்ணமூர்த்தி, தன்ராஜ் பிள்ளை, திருமாவளவன் ஆகியோர் தமிழ்நாட்டிலும், இவர்களைப் போல பஞ்சாபிலும், கர்நாடகத்திலும் கடைச் சமூகங்களிலிருந்து வந்தவர்கள்தான் இந்தியாவின் ஹாக்கி வீரர்கள். மைக்கேல் கிண்டோ போன்றவர்கள் பீகார், ஒரிசா (இன்று ஜார்க்கண்ட்) மாநிலங்களில் உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களெல்லாம் எந்த ஊக்கமும், ஆதரவும் இன்றி ஆர்வத்தினால் உயர்ந்து தங்கள் மாநிலத்திற்கும் பிறகு நாட்டிற்கும் ஆடி பெருமை சேர்த்தார்கள். இப்படி நாட்டின் பெருமையை உயர்த்திய இவர்களுக்கு இந்த நாடும் அரசும் கொடுத்தது வேலை வாய்ப்பு மட்டுமே.

இப்படிப்பட்ட வீரர்களைக் கொண்டுதான் கடைசியாக 1975 இல் கோலம்பூரில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அஜித் பால் சிங் தலைமையில் இந்திய அணி சாம்பியன் ஆனது. அன்றைக்கு இருந்த இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகம் அவர்களை சிறப்பாகவே ஆதரித்தது.

சர்வதேச அளவில் விதிமுறைகள் மாற்றப்பட்டது மட்டுமின்றி, செயற்கை புல் களத்தில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், அதற்குத் தக்கவாறு நமது இளம் வீரர்களைத் தயார்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, அதனை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த தவறியது இந்திய ஹாக்கிக் கூட்டமைப்பு.

பள்ளிகளில் இருந்தும், கல்லூரிகளில் இருந்தும் ஏராளமான ஹாக்கி வீரர்கள் உருவாகிவந்தபோது (வேலை வாய்ப்பு பெறலாம் என்ற நோக்கத்துடனும் கூட), அவர்களை ஆதரித்து ஊக்குவிக்க எந்தத் திட்டமும் தீட்டப்படவில்லை.

சர்வதேச போட்டிகள் நடைபெறுவதற்கு ஒரு மாத்த்திற்கு, ஏன் சில நேரங்களில் 15 நாட்களுக்கு முன்னர்தான் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது!

இந்தியன் ஏர்லைன்ஸ் போன்ற அரசு நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் வைத்திருந்த அணிகளால் ஓரளவிற்கு பயிற்சி வாய்ப்புகள் பெற்ற வீரர்கள் தவிர, பெரும்பான்மை ஹாக்கி வீரர்களுக்கு செயற்கை புல் களத்தில் பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய அணிகளிலும், ஆஸ்ட்ரேலியா, நியூ ஸீலாந்து அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள் போட்டிகளுக்கு ஒரு ஆண்டிற்கு முன்னரே தேர்வு செய்யப்பட்டு, ஓர் ஆண்டிற்கான ஊதியமும் அளிக்கப்பட்டு, பல்வேறு சூழல்களில் ஒன்றாக பயிற்றுவிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் காலையில் மூன்று மணி நேரம், மாலையில் மூன்று மணி நேரம் என்று பயிற்றுவிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக அந்த அணியின் வீரர்களுக்கிடையிலான ஒருங்கிணைந்த ஆட்டத்திறன் நமது அணி வீரர்களுக்கிடையே இல்லாமல் போனது. இதன் விளைவே, கோலிற்கு அருகே சென்றும் வாய்ப்புகளை நழுவவிட காரணமானது.

இதுவெல்லாம் தெரிந்திருந்தும், நன்கு அறிந்திருந்தும் நமது நாட்டு வீரர்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகளை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு ஏற்படுத்தித் தரவில்லை. 15 நாள் பயிற்சி கேம்ப் மட்டுமே, அதைத் தாண்டி எதையும் செய்யவில்லை.

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கே இந்த நிலை என்றால், பள்ளிகளிலிருந்தும், பல்கலைக்கழக அணிகளுக்கு ஆடிய நிலையிலும் வரும் திறமை வாய்ந்த வீரர்களுக்கு என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

தமிழ்நாட்டிற்கே தெ‌‌ற்கா‌சிய கூ‌ட்டமைப்பு நாடுக‌ளி‌ன் ‌விளையா‌ட்டு‌ப் போ‌ட்டி‌யி‌ன் போதுதா‌ன் ஆஸ்ட்ரோ டர்ஃப் வருகிறது. ஆடி பயிற்சிப் பெறுவதற்குத் தேவையான செயற்கை புல் களம் இல்லாத நிலையில் தயாராகும் இந்திய ஹாக்கி அணி வீரர்கள், இளம் வயதிலிருந்தே அப்படிப்பட்ட ஆட்டங்களங்களில் நன்கு விளையாடி தேர்ச்சி பெற்ற அயல் நாட்டு அணிகளுக்கு இணையாக எப்படி ஆட முடியும்?

ஒரு கேள்வி எழலாம். தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க நிதி ஆதரவு இல்லையேஎன்று. இது உண்மையல்ல. தனியார் நிறுவனங்கள் ஏராளமாக நிதி உதவி செய்கின்றன, ஆனால் அந்த நிதி விளையாட்டை மேம்படுத்தவோ அல்லது விளையாட்டு வீரர்களின் திறனை வளர்க்கவோ செலவிடப்படவில்லை.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஹாக்கி டெஸ்ட் தொடருக்குக் கூட பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் அளித்த நிதி ஆதரவு ரூ.1 கோடி. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இவையெல்லாம் மூழ்கிக்கிடக்கும் பனிப் பாறையின் முகடு மட்டுமே.

ஆட்டத்தை மேம்படுத்துவதில் எந்தப் போட்டியும் இல்லை, ஆனால் உள் அரசியலிற்கு குறைவில்லை. நாட்டிற்காக ஆடிய வீரர்களை இவர்கள் ஆட்டிப்படைத்த விதம் ஊடகங்கள் மூலம் உலகத்திற்கு காட்டப்பட்டதை யார் மறந்திருக்க முடியும்? விமான நிலையத்திலேயே தன்ராஜ் பிள்ளை அழுததைப் பார்க்கவில்லையா நாம்?

ஆக, ஹாக்கி ஆட்டத்தையும், வீரர்களையும் வளர்ப்பதற்கு பதிலாக சீரழித்தது இந்திய ஹாக்கி கூட்டமைப்பு. அதனால்தான் இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தற்போதைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு, முன்னாள் வீரர்களைக் கொண்ட ஒரு தற்காலிக அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்திய ஹாக்கியை இந்த வீழ்ச்சியிலிருந்து மீட்டு, மீண்டும் அதனை உன்னத நிலைக்கு உயர்த்த என்ன செய்ய வேண்டும்? நாளை பார்ப்போம்.